Saturday, October 03, 2015

புலி - என் பார்வை

ஆகாயத்தில் தான் நட்சத்திரங்களே தவிர நட்சத்திரங்களுக்கு ஆகாயம் இல்லை. நட்சத்திர நடிகர்களுக்காக கதை மற்றும் காட்சிகள் அமைத்ததால் ஏற்பட்ட விபரீதமே இந்த புலி.

நமது டீஆர் சொன்ன பல்லாயிரம் புலிகளில் எந்தப் புலியும் இல்லாமல் வெறும் பல்லிழந்த புலியாய் இப்படம் காட்சி தருவதற்கு முதற்காரணம் இதுவே. "அட" போட வைக்கும் விஷயங்கள் சில படத்தில் இருந்தாலும் கூடவே "ஆனால்" பல போட வேண்டியிருப்பது படத்தின் பெரிய பலவீனம். அதற்காக சமூக ஊடகங்களில் கழுவி கழுவி ஊற்றும் அளவுக்கு மொத்தமாக குப்பை என்று புலியை ஒதுக்கி விடலாமா என்றால் சற்றே யோசிக்க வேண்டும். இப்படத்தை முழுக்க முழுக்க குழந்தைகள் படமாக எடுத்திருந்தால் ரசித்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

பேசும் பறவைகள், குள்ள மனிதர்கள், வேதாள உலகம் என குழந்தைகளைக் கவரும் அம்சங்கள் அதிகமாகவே உள்ளன. ஆனால் நாயகிகளின் கவர்ச்சி உடைகளும் நடனங்களும் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மேலும் இரண்டாம் பாதியில் சுத்தமாக ஃபாண்டசி படம் என்பதையே மொத்தமாக மறந்து நாயகனின் விருப்பு வெறுப்பு மற்றும் எதிர்கால திட்டங்களுக்காக காட்சிகள் மற்றும் வசனங்களை அமைத்ததில் படத்தின் தோல்வி உறுதியாகி விட்டது.

இன்றைய இயக்குனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ரசிகர்களின் ரசனை மாற்றம். தமிழ் திரைப்பட ரசிகர்கள் வெகுவாக மாறி விட்டார்கள். ஒரு படத்திற்கு சீரிய இடைவெளியில் பாடல்களும் சண்டைகளும் இனி தேவையில்லை. குத்துப் பாடல்களுக்கும் "குத்து" வசனங்களுக்கும் இனி அவசியமில்லை. அறுசுவை உணவை அரைகுறையாக படைத்தால் வெற்றி என்பது பழைய கதை. படத்தைத் தரமாக மக்களுக்கு படைக்க என்ன தேவையோ அதை செய்தால் மட்டுமே போதுமானது. இதைச் செய்வதற்கு முழுமையாக தவறிவிட்டது புலி. அதிலும் புலி வேந்தனின் குட்டி ஃப்ளாஷ்பேக் அரசியல் அபத்தம்!

இசையைப் பற்றி பேச வேண்டுமென்றால் இது இயக்குனரின் பிழையா அல்லது இசையமைப்பாளரின் பிழையா என சிந்திக்க வேண்டியுள்ளது. நமது டிஎஸ்பிக்கு ஒரேயொரு வகை இசை தான் தெரியும் போல... படத்தோடு சிறிதும் ஒட்டாத பாடல்களும் பின்னணி இசையும் படம் முழுதும் நெருடலாகவே இருக்கிறது. இதை இயக்குனராவது உணர்ந்து வேறு யாரையேனும் அணுகி இருக்கலாம்.

ஒளிப்பதிவு, வரைகலை (கிராபிக்ஸ்) காட்சிகள், தம்பி ராமையாவின் நகைச்சுவை, நட்சத்திரப் பட்டாளம் (குறிப்பாக ஸ்ரீதேவி & சுதீப்) என ரசிக்கக் கூடிய விஷயங்கள் சில நிச்சயம் இருக்கின்றன. ஆனால் முடிவில் குறைகள் நிறைகளை மறைத்து விடுகின்றன.

Wednesday, September 02, 2015

போதனை... சாதனை!

களிமண் மூளை
கற்றதன் அளவு
கைமண் என்றார்...
களவைக் கற்று
மறந்திட மறந்து
புரிந்திடும் கேடு
பெருங்கடல் அளவு!

அன்னையும் பிதாவும்
முன்னெறி தெய்வம்
தொழுதிடு என்றார்...
முதியவர் ஆயிரம்
விதியினை நொந்து
கதியென்ன புரியாது
அழுதிட விளைந்தார்!

வலக்கை அளிப்பது
இடக்கை அறிவது
இழுக்கே என்றார்...
அறிக்கை அளித்து
பகட்டை தேடாது
எச்சிற் கைகளில்
ஏழை(யை) ஓட்டார்!

மானம் போயின்
மான்போல் மாய்வர்
மானிடர் என்றார்...
மனம்போல் வாழ்தல்
மாண்பென் றானபின்
மானமும் ஈனமும்
மண்ணுக் கிரையே!

அன்பிலி எல்லாம்
என்பிலி போல
எரிவர் என்றார்...
அன்பிலி அறனிலி
பண்பிலி வாழினும்
பணமிலி மட்டுமே
பயனிலி ஆனார்!

நேர்மை நாணயம்
கண்ணியம் யாவும்
கற்றிடு என்றார்...
நன்மை தீமை
வேற்றுமை அறியா
கலியுகம் இதுவே
பிழைத்திடு வீரோ?

Tuesday, April 08, 2014

யார் தலையில் மண்?

செய்தி: யுவராஜ் வீடு தாக்கப்பட்டது!

நான்: நல்லா வேணும். ஆட்டமா ஆடினான். ஃபைனல்ல வந்து தடவிட்டு இருந்தான்.
மனசாட்சி: தம்பி... நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?
நான்: வந்துட்டியா... வேண்டாம்னா விடவா போற? கேட்டுத் தொல!
மனசாட்சி: நீ லூசு தானே!?
நான்: (அனல் பறக்க) என்ன சொன்ன?
மனசாட்சி: பின்ன என்னடா? எது எதுக்கு கல்லெடுக்கணும்னு ஒரு விவஸ்தை இல்ல!?
நான்: எத்தனை கோடி கிரிக்கெட் ஃபேன்ஸ ஏமாத்தி இருக்கான்... இதுக்கு கல்லெடுக்காம வேற எதுக்கு எடுக்கணும்?
மனசாட்சி: அட முட்டாப் பயலுகளா... இது ஒரு விளையாட்டுடா! தோக்கிறதும் ஜெயிக்கிறதும் சகஜம். இத்தனை கோடி விசிறிகள ஏமாத்திட்டான்னு குதிக்கிறீங்களே... உங்க நாட்டுல உள்ள அத்தனை கோடி பேரையும் அரசியல்வாதி போர்வையில இருந்துகிட்டு எத்தனையோ பேர் எத்தனையோ வருஷமா ஏமாத்துறாங்களே... அங்கெல்லாம் உங்களோட ஒரு கல் கூட பாயலியே... ஏன்?
நான்: (அவங்கள எல்லாம் அடிச்சா திருப்பி அடிப்பானுங்களே... அவ்வ்வ்)
மனசாட்சி: நீ பேசமாட்ட டா... நானே சொல்றேன். அங்கெல்லாம் வாலாட்ட பயம்... உங்களுக்கு செலிபிரிட்டிஸ் தான இளிச்சவாயனுங்க!
நான்: அப்படினு இல்ல... வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு மேட்ச் பார்க்கும் போது இப்படி விளையான்டா கோபம் வராதா?
மனசாட்சி: நீ வேலை வெட்டிய விட்டுட்டு மேட்ச் பார்த்தது அவர் தப்பா? இல்ல உன் கை கால்ல விழுந்து அவர் உன்ன மேட்ச் பார்க்க கூப்பிட்டாரா?
நான்: (ஆரம்பிச்சுட்டான்யா... இனி நம்மள கற்பழிக்காம விட மாட்டானே...)
மனசாட்சி: இதே யுவராஜ் ஆஸ்திரேலியா கூட அறுபது ரன் எடுத்தப்ப பல்ல இளிச்சிட்டு பார்த்த இல்ல...
நான்: ஆ... ஆ... ஆமா!
மனசாட்சி: நீங்க இங்க இருக்கிற அவங்க வீட்டுல போய் அட்டகாசம் பண்ணிட்டு இருப்பீங்க... இதையெல்லாம் மறந்துட்டு வீட்ட பத்தி கவலப்படாம அவங்க வெளிநாட்டுல போய் உங்களுக்கு எல்லா ஆட்டத்துலயும் நூறு நூறா அடிக்கனுமா?
நான்: நூறெல்லாம் வேண்டாம்... ஒரு அம்பது அறுபது போதும்.
மனசாட்சி: செருப்பால அடிப்பேன்.
நான்: ஆத்தீ...!
மனசாட்சி: தெரியாமத்தான் கேக்குறேன்... நேத்து ஒழுங்கா விளையாடலேன்னு போய் வீட்ட உடச்சுட்டீங்க... நாளைக்கே ஒரு மேட்ச் நல்லா விளையாடிட்டா உடைச்ச வீட்ட சரி பண்ணி குடுப்பீங்களா?
நான்: அது எப்படி முடியும்!!?
மனசாட்சி: பின்ன என்ன.......
நான்: ஹே... நோ பேட் வர்ட்ஸ்!
மனசாட்சி: பின்ன என்ன வெங்காயத்துக்குடா இன்னைக்கு வீட்ட உடைச்சீங்க!?
நான்: அய்யோ ராமா... நானா போய் வீட்டுல கல்லெறிஞ்சேன்?
மனசாட்சி: எறிஞ்சது சரிதான்னு சொன்ன இல்ல.
நான்: ஷ்ஷ்ஷ்.... இப்போ நான் என்ன பண்ணனும்?
மனசாட்சி: யுவராஜ் நேத்து ஒழுங்கா விளையாடாம விட்டதுல யார் தலையிலையும் மண் விழல... சொல்லப் போனா அவர் தலைல அவரே மண் போட்டுகிட்டாருன்னு வேணும்னா சொல்லலாம். ஆனா இந்த அரசியல்வாதிங்க உங்க எல்லாருக்கும் தலையில மட்டுமில்லாம கண்ணுலயும் மண்ண அள்ளி போட்டுட்டு இருக்காங்க.
நான்: ஒத்துக்கிறேன்... நீ சொல்றது அத்தனையும் சரின்னு ஒத்துக்கிறேன்.
மனசாட்சி: ஒத்துக்கிட்டா பத்தாது.... ஒன்னு... ஒவ்வொரு அரசியல்வாதி வீட்டுக்கா போய் கல் எறிங்க... இல்ல யுவராஜ் கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க.
நான்: அய்யா ராசா... அத்தனை கிரிக்கெட் ரசிகர்கள் சார்பாவும் நான் யுவராஜ் கிட்ட மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்கிறேன்... போதுமா?
மனசாட்சி: ம்ம்ம்... வேற என்ன பண்றது? போய் தொல!
நான்: (ஆள விடுறா சாமி...)

Thursday, March 13, 2014

எல்கேஜி விலை லட்ச ரூபாய்! - ஒரு உரையாடல்

"என்ன மச்சி... வர வர டீ சாப்பிடக் கூட வர்றது இல்ல?"
"அதான் சொன்னனேடா... ஒய்ஃப் கன்சீவ் ஆயிருக்கானு"
"ஏன்டா உளறுற? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"
"சேவிங்க்ஸ் ஆரம்பிச்சிருக்கேன்டா... நம்ம பட்ஜெட்ல டீ காபிக்கு எல்லாம் இடம் இல்ல"
"அடடே... இப்போ இருந்தே டெலிவரிக்கு காசு சேர்க்க ஆரம்பிச்சிட்டியா. என்ன இருந்தாலும் டீ குடிக்கிறதக் கூட நிறுத்துறது கொஞ்சம் டூ மச் தான்"
"டெலிவரி எல்லாம் சப்ப மேட்டர் டா. அதுக்கெல்லாம் இன்சூரன்ஸ் இருக்கு"
"பின்ன வேற எதுக்கு?"
"இன்னும் நாலே வருஷத்துல புள்ளைய ஸ்கூல் சேர்க்கணுமே... அதுக்குத் தான்!"
"சும்மா காமெடி பண்ணாத மச்சான்"
"காமெடியா... இந்த காலத்துல புள்ளைகள படிக்க வைக்கிற மாதிரி ஒரு கஷ்டக் கொடும வேற எதுவுமே கிடையாதுடா"
"என்னமோ எல்கேஜி படிக்க புள்ளைய அமெரிக்கா அனுப்பப் போற மாதிரி பேசுற"
"நம்ம ஊருல எல்கேஜி சீட் வாங்குறத விட அமெரிக்காவுக்கு விசா வாங்குறது ஈஸி"
"ஏன்டா இப்படி புலம்புற? அதெல்லாம் நிறைய ஸ்கூல்ஸ் இருக்கு. ரொம்ப ஃபீல் பண்ணாத. மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்"
"கரெக்ட் தான்... ஆனா நமக்கு தண்ணி மட்டும் பத்தாதே. பூஸ்ட் போர்ன்விடா எல்லாம் வேணுமே"
"உனக்கு இன்னைக்கு புரியற மாதிரி பேசவே கூடாதுன்னு ஏதாச்சும் வேண்டுதலா?"
"அதில்லடா... புள்ள பாடம் படிச்சா மட்டும் போதுமா? தமிழ் பேசுதோ இல்லியோ... இங்கிலீஷ் தப்பில்லாம பேசணும். கூடவே ஹிந்தி, ஜெர்மன், ஃப்ரென்ச் அப்டினு ரெண்டு மூணு லாங்குவேஜஸ் தப்பாவாச்சும் பேசணும். பாட கத்துக்கணும். ஆட கத்துக்கணும். நீச்சல் கத்துக்கணும். ஆர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ்னு இன்னும் எவ்வளவோ இருக்கு"
"நீ ஒரு புள்ள தான பெத்துக்கப் போற?"
"உனக்கு புரியல மச்சி... இதெல்லாம் இல்லாம இந்த காலத்துல சர்வைவ் பண்ண முடியாது டா"
"உனக்கு பொறக்கப் போறது குழந்தையா இல்ல குதிரையா? ஏதோ ரேஸ்க்கு ரெடி பண்ற மாதிரி சொல்ற"
"அதெல்லாம் அப்படித்தான்... இதுக்கெல்லாம் வழிவகை செய்ற மாதிரி ஒரு ஸ்கூல்ல புள்ளைய படிக்க வைக்கனும்"
"அதுக்காக இப்போவே டீ குடிக்கிறத நிறுத்தனுமா?"
"டேய்... நம்ம ஊருல படிப்பு என்ன விலை விக்குதுன்னு தெரியாம பேசிட்டு இருக்க. எல்கேஜி சேர்க்கணும்னா டவுன் பேமெண்ட் ஒரு லட்சம் குடுக்கணும். அது போக அப்பப்போ விக்கிறதுக்கு சொத்து பத்தெல்லாம் வேணும்... தெரியும்ல!"
"என்னடா சொல்ற?"
"மச்சி... இப்போலாம் ஸ்கூல் ஃபீஸ் மட்டுமே வருஷத்துக்கு ஒரு லட்சம் வரை ஆகுது. அது போக புக்ஸ், யூனிபார்ம், எக்ஸ்ட்ரா கரிக்குலர் அது இதுன்னு ஒன்றரை லட்சம் ஆயிடும்"
"கேட்டாலே தலை சுத்துதேடா"
"அது மட்டுமில்லாம இதர செலவுகளே லட்சத்த தாண்டும்"
"அது என்னடா இதர செலவுகள்?"
"முதல்ல வீடு! இப்போலாம் ஸ்கூலுக்கு கொல்லப் புறத்துலயே வீடு இருந்தாத் தான் சீட் குடுக்குறாங்க. நல்ல ஸ்கூல்ஸ் எல்லாமே தி நகர், அடையார், வேளச்சேரி மாதிரி இடத்துல தான் இருக்கு. இப்போ நான் குடுக்கிற வீட்டு வாடகை பத்தாயிரம். ஸ்கூல் பக்கத்துல வீடு பார்த்தா மாச வாடகை மட்டுமே குறைஞ்சது பதினெட்டாயிரம் ஆகும். கணக்கு போட்டா இதுவே வருஷத்துக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் அதிகம் ஆகுது"
"இரு மச்சி... கொஞ்சம் தண்ணி குடிச்சிக்கிறேன்"
"குடிச்சிட்டியா... இப்போ இதக் கேளு. கொல்லப் புறத்துல இருந்து முறைவாசல் வர்றதுக்கு... அதான்டா... வீட்டுல இருந்து ஸ்கூலுக்கு வர்றதுக்கு கார் கண்டிப்பா வேணுமாம். அதுக்கு ஒரு லோன் போட்டு அத அஞ்சாறு வருஷத்துக்கு அடைக்கணும்"
"காரா... இதென்ன கூத்தா இருக்கு"
"ஸ்கூலுக்கு போற வழில கூத்தடிச்சிட்டே போலாம்ல"
"அது சரி"
"இதெல்லாம் கூட பரவாயில்ல. புள்ளைக்கு ஸ்கூல்ல சீட் வேணும்னா அம்மா அப்பா ரெண்டு பேருமே படிச்சிருக்கணும். அதுலயும் ஒருத்தராச்சும் கண்டிப்பா மாஸ்டர்ஸ் டிகிரி வச்சிருக்கணுமாம்"
"வா....ட்ட்??"
"உனக்கே தெரியும்... நாங்க ரெண்டு பேருமே BE தான். இன்னைக்கு காலைல தான் கரஸ்ல MS அப்ளை பண்ணிருக்கேன். புள்ளைக்கு படிக்கிற வயசு வர்றதுக்குள்ள நான் படிச்சு முடிக்கணும்"
"கிழிஞ்சுது கத"
"புள்ளைக்கு படிப்பு முடியறதுக்குள்ள மொத்தமும் கிழிஞ்சிடும்"
"என்னோட அட்வைஸ் கேட்டேனா நீ அவசரப்பட வேண்டாம்னு சொல்லுவேன். வெறும் ஆப்வியஸ் சாய்சஸ் மட்டும் தான் நீ பாத்திருக்கனு நெனைக்கிறேன். இன்னும் கொஞ்சம் ரிசர்ச் பண்ணிப் பார்க்கலாம்"
"அதுக்கெல்லாம் டைம் இல்லடா. நேத்தே ஸ்கூல் அட்மிஷனுக்கு அப்ளிகேஷன் சப்மிட் பண்ணிட்டு வந்துட்டேன்."
"புள்ளையே பொறக்கல... அதுக்குள்ள அப்ளிகேஷனா?"
"என்ன பண்ண சொல்ற. ஆளாளுக்கு புலம்புறத கேட்டு பயந்து போய் மனசுல நெனச்சிட்டு இருந்த ஸ்கூலுக்கு டீடெய்ல்ஸ் கேக்கலாம்னு போனேன். அங்க போய் கேட்டா 2018-கு எல்லாம் எப்பவோ அப்ளிகேஷன் வாங்க ஆரம்பிச்சுட்டாங்களாம். இன்னும் ரெண்டே ரெண்டு சீட் தான் பாக்கி இருக்கு... இன்னைக்கே அப்ளிகேஷன் போட்டாத் தான் ஆச்சுன்னு சொல்லிட்டாங்க"
"பொறக்கப் போறது பையனா பொண்ணானு கூட தெரியாம என்னடா அப்ளிகேஷன் ஃபில் பண்ண?"
"அதத்தான் நானும் கேட்டேன். இப்போதைக்கு க்ரெடிட் கார்ட் டீடெய்ல்ஸ் மட்டும் ஃபில் பண்ணுங்க... மிச்சத்த புள்ளைய ஸ்கூலுக்கு சேர்க்க வரும்போது பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க"

--- கப்சிப் ---

Wednesday, March 12, 2014

ஞாபகம் - பாகம் IV

முந்தைய பாகம்


காவலன் தவறவிட்ட துப்பாக்கியை தற்காப்புக்காக எடுத்துக்கொள்ள எத்தனித்து மரத்தை விட்டு இறங்கத் தொடங்கினேன். அப்பொழுது தூரத்தில் ஒரு குரல்... யாரோ ஒருவன் யாரையோ அழைக்கும் குரல் கேட்கிறது. நொடிகள் செல்லச் செல்ல அந்தக் குரல் என்னை நோக்கியே முன்னேறி வருகிறது. "சுரா... சுரா..." என்றழைக்கும் அந்தக் குரலில் ஒரு கவலை தெரிகிறது. அதை விட முக்கியமாக அது எனக்கு பரிச்சயமான குரலாகத் தெரிகிறது. இறுதியாக அந்தக் குரல் "டேய் சுரேந்தர்... எங்கடா இருக்க?" என்று தன் அடிவயிற்றிலிருந்து கத்த ஒரு மின்னல் சென்று என் மூளையைத் தாக்கியது. என் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் வேகம் பிடிப்பதை என்னால் உணர முடிகிறது. ஆம்... அந்தக் குரல் யாரையோ அழைக்கவில்லை... என்னைத் தான் அழைக்கிறது. எனது பெயர் தான் சுரேந்தர். மொத்தமாக இருண்டு கிடந்த என் மூளைக்குள் ஒரு சிறு வெளிச்சம் வரத் தொடங்கியது. உதவி என்னைத் தேடி வருவதை என்னால் உணர முடிகிறது. நிச்சயமாக வருகிறவன் எனது கூட்டத்தைச் சேர்ந்தவனாகத் தான் இருக்க வேண்டும்.

ஆனால் அதே நேரம் காவல்படை எங்களைத் தேடி இதே காட்டுக்குள் அலைந்து கொண்டிருப்பது என்னைத் தேடி வரும் தோழனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. தெரிந்திருந்தால் இப்படி சத்தம் போட்டுக்கொண்டு வரமாட்டான். அவனை உடனடியாக சென்றடைந்து எச்சரிக்கை செய்தாக வேண்டும் என்றெண்ணிக் கொண்டே மரத்திலிருந்து இறங்குகிறேன். இறங்கிக் கொண்டிருக்கும் போதே நண்பன் என்னைப் பார்த்துவிட்டு சுரா என்றழைத்துக்கொண்டே ஓடி வருகிறான்.
"மச்சான்... எங்கடா தொலஞ்சு போன? உன்ன நம்ம ஆலமரத்தடில தான விட்டுட்டு போனேன்."
"ஷ்ஷ்ஷ்... கத்தாத... சுத்தி போலீஸ் இருக்கு"
"போலீசா... என்னடா சொல்ற?"
"ஆமா... காடு முழுக்க நம்மள தேடி அலஞ்சுட்டு இருக்காங்க"
"போலீஸ் நம்மள....."
"எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு கேக்குறியா? எனக்கு தெரில"
"இல்லடா... போலீஸ் நம்மள எதுக்கு கண்டுபிடிக்கனும்னு கேக்குறேன்"
"இங்க பாரு... நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளு"
"சரி சொல்லு"
"எனக்கு தலைல அடி பட்டிருக்கு... நான் மயங்கிக் கிடந்தேன்... மயக்கம் தெளிஞ்சு பாக்கும் போது ஒரு மரத்தடில இருந்தேன்"
"ஆமா... உனக்கு தலைல அடி பட்டிருக்கு... நீ மயங்கி விழுந்த... நான் தான் உன்ன அந்த மரத்தடில விட்டுட்டு போனேன். அதுக்கு என்ன இப்போ?"
"ஹே... அப்போ உனக்கு என்ன அட்டாக் பண்ணது யாருன்னு தெரியுமா?"
"அட்டாக்கா... உனக்கு என்னடா ஆச்சு? முதல்ல ஏன் இவ்ளோ சீரியசா இருக்க?"
"அய்யோ..... எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல. அடி பட்ட அதிர்ச்சில எல்லாமே மறந்துடுச்சு. உன் பேர் கூட எனக்கு ஞாபகம் இல்ல... நீ சொன்னதுக்கு அப்புறம் தான் என் பேரு சுரெந்தர்னே எனக்கு ஞாபகம் வந்துச்சு"
"!!!!????"
"யார் என்ன அடிச்சு போட்டா... எதுக்கு என்னை போலீஸ் துரத்துது... எதுவுமே எனக்கு புரியல"
"இப்போ தான் எனக்கு புரியுது"
"என்ன புரியுது? சொல்லு ப்ளீஸ்... நாம எல்லாம் யாரு? நம்ம எந்த கூட்டத்த சேர்ந்தவங்க? நாம இப்போ என்ன பண்ணிட்டு இருக்கோம்? போலீஸ் ஏன் நம்மள தேடுது?"
"சொல்றேன் மச்சி... நல்லா கேட்டுக்கோ"
"சீக்கிரம் சொல்லு"
"நாம எல்லாம் ஃப்ரென்ட்ஸ்... நம்ம உருப்படாத கூட்டத்த சேர்ந்தவங்க... நாம இப்போ மட்டுமில்ல... எப்பவுமே ஊர் பொறுக்கிட்டு தான் இருப்போம்"
"?????"
"இதுல எனக்கு புரியாத விஷயம் ஒன்னே ஒன்னுதான்... ஊர் பொறுக்கினதுக்கு போய் ஏன் போலீஸ் துரத்துதுன்னு தான் புரியல"
எனக்கு எதுவுமே விளங்கவில்லை. தலையில் அடிபட்ட காட்சி மீண்டும் ஒருமுறை வந்து போகிறது.
"அப்போ எனக்கு எப்படி அடி பட்டுச்சு? யார் என்ன அடிச்சா? என் தலைல ஏதோ இடி விழுந்தா மாதிரி இருக்கே"
"உன் தலைல விழுந்தது இடி இல்ல மச்சி... தேங்கா!"
"தேங்காயா... என்னடா சொல்ற?"
"நாம வழக்கம்போல ஊர் சுத்திட்டு இருந்தப்போ அப்டியே பக்கத்துல இருக்கிற தென்னந்தோப்புக்கு போனோம்..."
நான் சற்று நேரத்திற்கு முன்பு பார்த்த தோப்பு நினைவுக்கு வந்தது.
"... அங்க சுத்திட்டு இருந்தப்போ தரையில கிடந்த ரெண்டு ரூவா காயின எடுக்கிறதுக்கு நீ கீழ குனிஞ்ச... அந்த நேரம் பார்த்து கரெக்டா உன் பின்னந்தலைல ஒரு தேங்கா நச்சுனு வந்து விழுந்துச்சு..."
தலையில் அடிபட்ட காட்சி மறுபடி மனக்கண்ணில் வருகிறது. ஆனால் இம்முறை அதற்கு எப்படி ரியாக்ட் செய்வதென்று தெரியாமல் திருதிருவென முழிக்கிறேன்.
"... அடிபட்ட வேகத்துல நீ அப்டியே மயங்கி கீழ விழுந்துட்ட. எனக்கு என்ன பண்றதுன்னே புரியல. சரி... கைத்தாங்கலா ஊருக்குள்ள தூக்கிட்டு போயிடலாம்னு இந்த காட்டு வழியா கூட்டிட்டு வந்தேன். ஒரு அளவுக்கு மேல என்னால முடியல. சரின்னு உன்ன அந்த ஆலமரத்தடில விட்டுட்டு உதவிக்கு யாரையாச்சும் கூப்பிட்டு வரலாம்னு போனேன். நம்ம பசங்க யாரும் கண்ணுல படல. இதுக்கு மேல விட்டா இருட்டிடும்... நம்மளே கஷ்டப்பட்டு தூக்கிட்டு போயிடலாம்னு ரிடர்ன் வந்து பாத்தா உன்ன காணோம். அதான் அப்படியே தேடிட்டு வர்றேன். நீ என்னடான்னா இங்க நின்னு ஏதோ காமெடி பண்ணிட்டு இருக்க"
கடந்த அரை மணி நேரத்தில் நான் செய்த விஷயங்கலெல்லாம் மூளைக்குள் ஒரு ஹைலைட்ஸ் போல ஒடுகிறது. அதை நினைத்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
"ஒரு தேங்கா விழுந்ததுக்கா இப்படி எல்லாமே எனக்கு மறந்து போயிடுச்சு"
"கவலப்படாத மச்சி... போன வாரம் ஒரு படம் பார்த்தேன். அந்த படத்தோட ஹீரோக்கு தலைல இதே இடத்துல தான் அடிபடும். அவரும் உன்ன மாதிரியே எல்லாத்தையும் மறந்துடுவாரு. ஏன்னா... அந்த இடத்துல தான் மெடுல்லா ஆப்லங்கேட்டா இருக்கு. அங்க அடிபட்டா ஷாக்ல temporary memory loss வரும். கொஞ்ச நேரத்துல அதுவே சரி ஆயிடும்."
கடுப்பில் நண்பனை நான் முறைக்க அவன் சிரித்துக்கொண்டே என் முதுகில் தட்டிக் கொடுக்கிறான்.
"வா... எதுக்கும் போய் ஒரு டாக்டர பார்த்துடலாம்"

ஒரு ரெண்டு ரூபாய்க்கு ஆசைப்பட்டு என்னென்னமோ நடந்துவிட்டதை எண்ணி நொந்துகொண்டே நண்பனுடன் செல்கிறேன். காட்டை விட்டு வெளியே வந்ததும் அங்கே ஒரே களேபரமாக இருப்பதை பார்க்கிறோம். காவல்படை உண்மையில் தேடிக் கொண்டிருந்த ஆள் மாட்டிக்கொண்டான் போலும். யாரோ ஒருவனைக் கைது செய்து போலீஸ் வேனை நோக்கி இழுத்துச் செல்கின்றனர். அதில் ஒரு போலீஸ்காரர் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே செல்கிறார். ஆம்... சிறிது நேரத்திற்கு முன்பு காட்டிற்குள் என்னைப் பார்த்து ஓடி விடு என்று சைகை காட்டிய அதே போலீஸ்காரர் தான். அந்தக் காட்சி மறுபடி மனதில் ஓட, இப்பொழுது தான் உண்மையில் அவர் ஏன் கோபப்பட்டார் என்பது புரிகிறது. "யாரும் பார்ப்பதற்குள் ஓடி விடு" என்று சொல்லவில்லை. "வேலை நேரத்துல இவன் யாருடா குறுக்க... அடச்சீ போ" என்று தான் நினைத்திருந்திருக்க வேண்டும். வெட்கம் என்னைப் பிடுங்கித் திங்க என் நண்பனைப் பார்க்கிறேன். அவனும் சிரித்துக்கொண்டே "ஆல் இன் தி கேம்" என்று கூறி என் தோளில் கை போட்டு அழைத்துச் செல்கிறான்.

நான் திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவன் போல் நண்பனைப் பார்த்து கேட்கிறேன்,
"மச்சி... இன்னும் உன் பேர் என்னனு நீ சொல்லவே இல்லியே"
"ம்ம்ம்... விட்டுத் தள்ளு... உனக்கு குணமாகுற வரைக்கும் நான் மச்சியாவே இருந்துட்டு போறேன்"

சிரித்துக்கொண்டே நண்பன் அழைத்துச் செல்லும் பாதையில் செல்கிறேன்.

--- முற்றும்


எனது முந்தைய கதை முயற்சியைக் காண இங்கே அழுத்தவும்...

ஞாபகம் - பாகம் III

முந்தைய பாகம்


காட்டில் உள்ள ஒட்டு மொத்த மரங்களும் சுழன்று கொண்டே என்னைச் சுற்றி சுற்றி வருவது போல் உணர்கிறேன். தலையில் பட்ட அடியினால் உண்டான வலி நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே போகிறது. தீவிரவாதி என்ற வார்த்தை மட்டும் அசரீரி போல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்ன செய்வதென்றும் தெரியாமல் யாரைக் கேட்பதென்றும் புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறேன். மீண்டும் ஒருமுறை தலையில் யாரோ அடிக்கும் காட்சி மனக்கண்ணில் வந்து போகிறது. எவ்வளவு முயற்சித்து யோசித்தாலும் பயனேதும் இல்லை. ஆனால் எப்படியும் தப்பித்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எனக்குள் வளர்ந்து கொண்டே வருகிறது.

எனக்கு நானே உதவ முடியாதபடி நிராதரவாகவும் காவல் நிலையத்தில் இருந்து தூக்கி வந்த ஆயுதங்களையும் தொலைத்துவிட்டு நிராயுதபாணியாகவும் நிற்கிறேன். அடுத்து என்ன செய்வதென்று சிந்தித்துக் கொண்டிருக்கையில் சருகுகள் சலசலக்கும் சத்தம் கேட்கிறது. சுதாரித்து திரும்பிப் பார்ப்பதற்குள் துப்பாக்கியில் என்னை சரியாக கூறி வைத்தபடி எனக்கெதிரில் காவலன் ஒருவன் நிற்கிறான். எந்த நிமிடமும் என் மேல் குண்டுகள் பாயும் என்ற நிலையில் போலீஸ்காரனை நேருக்கு நேர் பார்த்தபடி நிற்கிறேன். ஆனால் நான் நினைத்ததைப் போன்று அவன் என்னை சுடவும் இல்லை... கைது செய்ய முயற்சிக்கவும் இல்லை. மாறாக காவல்படையில் வேறு யாரும் வருகிறார்களா என்று சுற்றிப் பார்த்து விட்டு என்னை நோக்குகிறான். துப்பாக்கியை இறக்கிவிட்டு என்னைப் பார்த்து ஓடி விடுமாறு சைகை காட்டுகிறான். எனக்கு விஷயம் விளங்குவதற்கு சில நொடிகள் பிடித்தது.

காவல்துறையில் எனக்கு உதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். சரி தான்... யார் உதவியும் இல்லாமல் சிறையில் இருந்து ஆயுதங்களையும் கடத்திக் கொண்டு தப்பிப்பது இயலாத காரியமே! எப்படியோ என்னைப் பற்றி விவரம் கேட்பதற்கு ஒருவன் கிடைத்துவிட்டான் என்ற நிம்மதியுடன் அந்த காவலனை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அந்நேரம் பார்த்து அருகில் யாரோ ஓடி வரும் சத்தம் கேட்க அந்த காவலனின் முகத்தில் கோபம் படர்கிறது. சினத்தில் சிவந்த முகத்துடன் என்னைப் பார்த்து ஓடிப் போ என்று முனங்கிக் கொண்டே மீண்டும் சைகை காட்டுகிறான். அதற்குள் காலடி சத்தமும் மிக அருகில் கேட்கத் தொடங்கியது. எனக்கு உதவிய காவலனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட உடனடியாக மறைந்து கொள்ள இடம் தேடுகிறேன். சற்று தொலைவில் உள்ள புதருக்குள் சென்று ஒளிந்துகொள்ள நினைத்தால் அதற்குள் காலடி சத்தம் மேலும் மேலும் நெருங்கத் தொடங்கியது. சட்டென்று ஒரு யோசனை தோன்ற அருகில் இருந்த மரத்தின் மேல் வேகமாக ஏறி அடர்த்தியான கிளை ஒன்றில் மறைவாக அமர்ந்து கொண்டேன்.

நான் மரத்தில் ஏறி மறைந்து கொள்ளவும் இரு காவலர்கள் அதே மரத்தடிக்கு வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது. வந்தவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டனர். அதில் ஒருவன்,
"இங்க தான சத்தம் வந்தது!?"
"ஆமா... நம்ம human tracking system கூட இந்த இடத்துல மூவ்மென்ட் இருந்ததா காட்டுச்சு"
"So கண்டிப்பா இங்க எங்கயாச்சும் அவன் ஒளிஞ்சிட்டு இருக்க வாய்ப்பு இருக்கு"
"ஒரு நிமிஷம்... மறுபடி tracking system வச்சு பாக்குறேன்"
சொல்லிக்கொண்டே பைனாகுலர் போன்ற ஒன்றை எடுத்து தன் கண்களில் பொருத்திக் கொண்டு சுற்றும் முற்றும் பார்க்கிறான். நல்ல வேளை நான் மரத்தின் மீது ஏறிக் கொண்டேன். தரையில் எங்கு ஒளிந்திருந்தாலும் அந்த மாடர்ன் பைனாகுலர் என்னைக் காட்டிக் கொடுத்திருக்கும். தப்பித்ததை எண்ணி நிம்மதி பெருமூச்சு விடும்போது எனக்கு பின்னாலும் யாரோ என்னோடு சேர்ந்து மூச்சிறைப்பது போல் தோன்றியது.

என்ன சத்தம் என்று திரும்பிப் பார்த்த நொடியில் இதயத்துடிப்பு நின்று போனது. பயத்தில் ஏதோ ஒன்று தொண்டைக்குழியை வந்து அடைத்துக்கொண்டதை உணர்கிறேன். வெள்ளையும் சாம்பலும் கலந்த ஒரு நிறத்தில் சுமார் ஏழு எட்டு அடி நீளமுள்ள ஒரு பாம்பு நான் அமர்ந்திருக்கும் அதே கிளையில் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் நின்று கொண்டிருக்கிறது. கீழ் பாதி உடல் கிளையை சுற்றியிருக்க நன்றாக தலையை தூக்கியபடி மெதுவாக என்னை நோக்கி நகர்ந்து வருகிறது. கீழே இறங்கிவிடலாம் என்று பார்த்தால் இன்னும் அந்த காவலர்கள் மரத்தடியிலேயே நின்று கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவன் மட்டும் "நான் அந்த பக்கம் போய் பாக்குறேன்" என்று கூறிவிட்டு நடக்க மற்றொரு காவலன் இன்னும் பைனாகுலரை கண்களில் மாட்டியபடி இங்கேயே நிற்கிறான். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு நிற்கையில் எங்கிருந்தோ ஒரு தைரியம் வந்தது.

எனது கைகளுக்கு எட்டும் உயரத்தில் ஒரு கிளையில் சிறிய குச்சி ஒன்று பாதி உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. சத்தம் எழுப்பாமல் மெதுவாக கைகளைத் தூக்கி அந்தக் குச்சியை உடைத்து எடுத்துக் கொண்டேன். எந்தக் கடவுளை வழிபடுவது என்று கூடத் தெரியாமல் தப்பித்தால் போதுமென்று பொதுவாக வணங்கிவிட்டு அந்தக் குச்சியை வைத்து பாம்பினை தூக்கினேன். பாம்பு கிளையில் நன்றாக சுற்றிக் கொண்டிருந்ததால் எடுப்பதற்கு கடினமாக இருந்தது. அதன் உடலுக்கும் கிளைக்கும் இடையிலே குச்சியை செலுத்தியதும் அதற்கு கூசியிருக்க வேண்டும். பாம்பு தானாகவே கிளையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நான் கையில் வைத்திருந்த குச்சியில் முழுவதும் ஏறிக்கொண்டது. பாம்பு கிளையை விட்டு வெளிவந்த வேகத்தில் மரத்திலிருந்த சில பறவைகள் ஒரே நேரத்தில் இறகுகளை அடித்துக்கொண்டு பறந்து சென்றன. நான் ஏற்கனவே பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க பறவைகள் திடீரென்று பறந்த சத்தத்தில் கையிலிருந்த குச்சியை நழுவ விட்டுவிட்டேன்.

பறவைகளின் சத்தம் கேட்டு அந்தக் காவலன் பைனாகுலரை கழட்டிவிட்டு மேலே பார்ப்பதற்கும் நான் கையில் வைத்திருந்த குச்சியை நழுவ விடுவதற்கும் நேரம் சரியாக இருந்தது. குச்சியை சுற்றிக் கொண்டிருந்த பாம்பு நேராக சென்று காவலனின் மீது விழ அவன் நிலை குலைந்து போகிறான். கையில் வைத்திருந்த துப்பாக்கியையும் மாடர்ன் பைனாகுலரையும் மரத்தடியிலேயே போட்டுவிட்டு அலறிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான். பாம்பிடம் இருந்து பிழைத்துவிட்ட சந்தோஷத்தோடு ஒரு ஆயுதம் கிடைத்துவிட்ட திருப்தியும் என்னிடம் தெரிகிறது. ஓடிச் சென்ற காவலன் மீண்டும் வருகிறானா என சில நிமிடங்கள் காத்திருந்துவிட்டு மரத்தை விட்டு இறங்க ஆயத்தமானேன். அப்பொழுதுதான் அந்த சத்தம் எனக்கு கேட்கத் தொடங்கியது.


அடுத்த பாகம்

ஞாபகம் - பாகம் II

முந்தைய பாகம்


சைரன் பொருத்திய போலீஸ் ஜீப் அலறிக்கொண்டு முன்னால் வர நீல நிற போலீஸ் வேன் அதனை பின் தொடர்ந்து வருகிறது. நான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் காட்டின் அருகாமையில் வந்து வண்டிகள் நின்றன. உயர்பதவி வகிப்பவர் போன்ற இரு காவலர்கள் ஜீப்பிலிருந்து இறங்கினர். அவர்களின் சைகையை தொடர்ந்து வேனின் பின் கதவைத் திறந்து கொண்டு முதலில் மூன்றடி உயர மோப்ப நாய் கம்பீரமாக இறங்கியது. அதனை சங்கிலியால் பிடித்தபடி காவலர் ஒருவர் இறங்கினார். அவரைத் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய ஒரு போலீஸ் படையே வேனிலிருந்து இறங்கியது. உயர் அதிகாரிகள் ஏதேதோ கட்டளைகள் பிறப்பிக்க வரிசையில் நின்ற படையினர் அதை கவனத்துடன் கேட்டுக் கொண்டனர். கடைசியாக காட்டை நோக்கி கைகளை நீட்டி அதிகாரி ஏதோ சொல்ல மொத்த படையும் காட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தனர். ஒரு அதிகாரியும் ஆயுதம் ஏந்திய இரு காவலர்களும் காட்டுக்கு வெளியே கண்காணிப்பிற்கு நின்றனர். வசமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்த நான் வேறு வழியின்றி மறைவிடம் தேடி மீண்டும் காட்டுக்குள்ளே செல்லத் தொடங்கினேன்.

எந்த நிமிடம் யார் கண்ணில் சிக்குவேன் என்று தெரியாமல் ஒளிந்து கொள்ள இடம் தேடி காட்டுக்குள் ஓடத் தொடங்கினேன். கால்கள் தரையில் ஓடிக் கொண்டிருக்கும் போதே என்னைப் பற்றிய சிந்தனை எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ஆயுதப்படை துரத்தும் அளவுக்கு ஏதோ விபரீதமான மனிதனாக நான் இருக்கிறேன். என்ன செய்துவிட்டு தப்பி ஒடுகிறேன்? ஓடி ஒளிவதைக் காட்டிலும் காரணம் தெரியாமல் ஓடுவது என்னை தலையை பிய்க்கச் செய்தது. மீண்டும் ஒருமுறை மூளையை பிழிந்து யோசிக்கிறேன். தலையில் அடிப்பட்ட அந்த நொடி மட்டும் மனக்கண் முன் மின்னல் போல் வந்து போகிறது. ஏதோ பலமான ஆயுதத்தால் தாக்கப்படுகிறேன். ஆனால் யாரால் தாக்கப்படுகிறேன் எனத் தெரியவில்லை. ஆனால் மனதிற்குள் ஒரு குரல், "போலீசிடம் மாட்டி விடாதே... தப்பிச் சென்று விடு" எனக் கூறிக்கொண்டே இருந்தது. ஞாபகங்கள் சிதறிய நிலையில் உள்ளுணர்வை அப்படியே பின்பற்ற வேண்டுமென்று யாரோ சொன்ன ஞாபகம். அதைத்தான் இப்பொழுது நான் செய்து கொண்டிருக்கிறேன்.

சிறிது தூரம் காட்டிற்குள் சென்றபின் ஒளிந்துகொள்ள மறைவான இடம் தேட முடிவு செய்தேன். அப்பொழுது யாரோ எனக்கு அருகாமையில் இருப்பது போல ஒரு உணர்வு தோன்றியது. எனக்கு பின்னாலிருந்து ஏதோ சத்தம் வருகிறது. பதறிப்போய் திரும்பிப் பார்க்கிறேன். நான் முதலில் மயங்கிக் கிடந்த மரத்தை விட தடிமனான வளர்ந்த மரம். ஆம்... சத்தம் மரத்துக்குப் பின்னாலிருந்து தான் வருகிறது. மெதுவாக திரும்பி சென்று மரத்தின் மறைவில் நின்று கொண்டு மறுபுறம் பார்த்தேன். இரத்தம் உறைந்தது போல உணர்ந்தேன். திசை தெரியாமல் காட்டிற்குள் அலைந்ததில் காவல் படையை நோக்கியே வந்து விட்டேன் போலும். அங்கே ஒரு காவலர் துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு தனது ஷூ லேசை கட்டிக் கொண்டு நிற்கிறார். அந்த நொடியில் ஒரு விபரீத எண்ணம் எனக்கு தோன்றியது.

நான் யாரென்று தெரிந்த ஒருவன் கண்முன்னே நிற்கிறான். என்னை பிடிக்க வந்த போலீஸ் என்றாலும் தற்போது கையில் ஆயுதம் இன்றி நிற்கிறான். கூட வந்த காவல் படையில் யாரையும் காணவில்லை. எப்படியாவது இவனை பின்னால் சென்று பிடித்து அவனது துப்பாக்கியை வைத்தே மிரட்டி விவரத்தை சேகரித்து விட்டால் என்ன? நினைத்ததும் வியர்க்க தொடங்கியது. உடலில் லேசான நடுக்கம் தெரிந்தது. ஆனால் இப்பொழுது இவனையும் விட்டு விட்டால் நான் யாரென்று தெரியாமலேயே துப்பாக்கி குண்டுக்கு இரையாகிப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எதிரில் இருக்கும் காவலனை தாக்குவதற்கு முடிவு செய்தேன்.

எப்படி தாக்குவது என்று மனதிற்குள் ஒரு திட்டம் போட்டுக் கொண்டேன். மெதுவாக பின்னால் சென்று என் சட்டையால் முதலில் அவன் முகத்தை மூடி கீழே தள்ளிவிட்டு அவன் சுதாரித்து கத்துவதற்குள் துப்பாக்கியை அவன் நெஞ்சில் குறி வைத்து விடவேண்டும். பின்னர் அவனை சிறிது தொலைவில் உள்ள புதருக்கு இழுத்து சென்று உண்மையை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அவனது போலீஸ் உடையை எடுத்து அணிந்து கொண்டு எப்படியாவது காட்டின் மறுமுனைக்கு சென்று தப்பி விடவேண்டும். திட்டம் சரியாக இருக்கும் என எனக்கு முழுதாக நம்பிக்கை பிறந்ததும் மெதுவாக சட்டையை கழட்டினேன். நாலாபுறமும் ஒரு முறை நன்றாக பார்த்துவிட்டு முதல் அடியை எடுத்து வைத்தேன். அருகே மற்றொரு காலடி சத்தம் கேட்க சட்டென்று திரும்பி வந்து மரத்தின் பின் நின்று கொண்டேன்.

யாரங்கே வருவது? நல்ல வேளை... நான் ரொம்ப தூரம் செல்லவில்லை. அங்கே கையில் தயார் நிலையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு மற்றொரு காவலர் வந்து சேர்ந்தார். இருவரும் பரஸ்பரம் புன்னகையை பரிமாறிக் கொண்டனர். புதிதாக வந்த போலீஸ்காரர் இங்கே இருந்த காவலரிடம்,
"தம்பீ... என்ன இப்படி விளையாட்டு பிள்ளையா இருக்க?"
"இல்ல ஸார்... ஷூ லேஸ் கழண்டுருச்சு... அதான்..."
"சீக்கிரம் பா! ரொம்ப மோசமான ஆள துரத்திட்டு இருக்கோம். எவ்ளோ பெரிய தீவிரவாதின்னு தெரியும்ல"
"தெரியும் ஸார்... இதோ ரெடி ஆயிட்டேன்"
"ஸ்டேஷன்ல இருந்து வேற வெப்பன்ஸ் தூக்கிட்டு ஓடி இருக்கான். எங்க இருந்து எப்படி வந்து அட்டாக் பண்ணுவான்னு தெரியாது"
"எஸ் ஸார்... ஐ ஆம் டன்"
"சரி... நீ அந்த பக்கமா போய் தேடு"
"ஓகே ஸார்"
பேசி முடித்துவிட்டு அவர்கள் ஆளுக்கொரு புறம் செல்ல திகைப்பின் உச்சத்தில் சப்த நாடியும் ஒடுங்கிப் போய் நான் நின்று கொண்டிருக்கிறேன்.


அடுத்த பாகம்

ஞாபகம் - பாகம் I

அடர்ந்த காடு... சுற்றிலும் ஓங்கி உயர்ந்த மரங்கள்... மாலைக் கதிரவனின் கிரணங்கள் மரங்களை கிழித்துக்கொண்டு வந்து சற்றே வெளிச்சத்தை தெளித்துக் கொண்டிருக்கின்றன. ஆள் அரவமற்ற காட்டிற்குள் பறவைகளின் கூச்சல்கள் மட்டுமே குடி கொண்டிருக்கிறது. அங்கே உயர்ந்ததோர் ஆலமரத்தின் தடித்த வேர்களின் நடுவே ஒரு உருவம் முகமும் வயிறும் நிலத்தை உரச சுயநினைவின்றி படுத்திருக்கிறது. சம்பவமோ அசம்பாவிதமோ நடப்பதற்கான அத்தனை அறிகுறிகளும் தெளிவாக தெரிகிறது!

தூக்கத்திலிருந்து விழிக்கிறேன்... இல்லை இல்லை... மயக்கத்திலிருந்து தெளிகிறேன். என் தலைக்குள் யாரோ சுத்தியலால் அடித்துக்கொண்டே இருப்பது போல் அப்படியொரு வலி. கண்களைத் திறக்க முயற்சிக்கிறேன்... முடியவில்லை. மெதுவாக... மிக மெதுவாக கை கால்களை அசைக்கிறேன். யாரோ தாள்களை கசக்குவது போல் என்ன சத்தம் அது? நீண்ட சயனத்திற்கு பிறகு உடல் உறுப்புகள் வேலை செய்ய தொடங்குவது போல் ஒரு உணர்வு. திடீரென்று ஆக்ஸிஜன் வரத்து குறைய வாய் வழியே மூச்சிழுக்கிறேன். மணல் வாய் வழியே சென்று தொண்டைக்குள் அடைத்துக்கொள்ள பதறிப்போய் முழிக்கிறேன். எழுந்திருக்க முயற்சிக்கிறேன்... மீண்டும் அதே சத்தம். சருகுகள் சலசலக்கும் சத்தம். தாள்களும் இல்லை... தாள்களைக் கசக்க ஆட்களும் இல்லை. யாருமற்ற வனாந்தரத்தில் தன்னந்தனியே மயங்கிக் கிடந்திருக்கிறேன்.

இருப்பது எந்த இடமென்று தெரியவில்லை. எப்படி இங்கு வந்தேனென்று தெரியவில்லை. எதனால் மயங்கிக் கிடந்தேனென்று தெரியவில்லை. தலையில் இடிகள் இறங்குவது போன்ற வலிக்கு காரணம் தெரியவில்லை. இன்னும் சற்று சிந்தித்து பார்க்கையில் தான் உணர்கிறேன்... எனக்கு நான் யாரென்றே தெரியவில்லை! மயக்கத்திலிருந்து எழுந்தபோதுதான் புதிதாய் பிறந்ததைப் போன்று வேறெந்த ஞாபகமும் நினைவில் இல்லை. இனம் புரியாத ஒரு பயம் உடல் முழுவதும் பரவத் தொடங்கியது. இருக்கும் இடம், வலிக்கும் வலி என அனைத்தும் மறந்து "நான் யார்?" என்ற ஒரு கேள்வி மட்டுமே மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது.

எவ்வளவு நேரம் சிந்தித்தும் ஒரு பயனும் இல்லை. என் பெயர் கூட நினைவுக்கு வரவில்லை. சிந்தித்து சிந்தித்து சோர்ந்ததுதான் மிச்சம். பயத்திலும் சோர்விலும் நா வறண்டது. சுற்றும் முற்றும் பார்க்கிறேன். முதலில் தண்ணீர் தேடி குடித்துவிட்டு செய்ய வேண்டியதை யோசிக்கலாம் என முடிவு செய்தேன். திக்கு திசை தெரியாமல் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினேன். எவ்வளவு நேரம் நடந்திருப்பேன் என்று தெரியவில்லை. காலெல்லாம் வலி எடுக்கிறதே தவிர செல்வதற்கு வழி ஒன்றும் புலப்படவில்லை. ஒரே இடத்தை சுற்றி சுற்றி வருவது போல் தோன்றியது. ஏதோ ரிசர்வ்ட் ஃபாரெஸ்ட் உள்ளே வந்து மாட்டிக்கொண்டது போல் இருக்கிறது.

மீண்டும் நடக்கத் தொடங்கினேன். மேலும் ஒரு அரை மணி நேர நடைக்கு பிறகு ஒரு ஒளி தெரிந்தது. சற்று தூரத்தில் காடு முடிந்து வெட்டவெளி தொடங்குகிறது. நடையின் வேகத்தைக் கூட்டி வெட்டவெளியை அடைந்தேன். நல்ல வேளை... பயந்தது போல ரிசர்வ்ட் ஃபாரெஸ்டோ அமேசான் ஃபாரெஸ்டோ இல்லை. ஏதோ ஊரோரத்தில் உள்ள காடுதான். அதோ சற்று தொலைவில் ஒரு தென்னந்தோப்பு தெரிகிறது. ஆள் நடமாட்டமும் தெரிகிறது. போய் முதலில் தண்ணீர் கேட்டு குடிக்கலாம் என யோசிக்கையில் தான் அடுத்த பயம் வந்து என்னை தொற்றியது.

நான் யார்? இந்த காட்டிற்குள் நான் அடிபட்டு கிடந்த காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் யார் கண்ணிலும் படுவது ஆபத்தாகுமா? இந்த எண்ணம் மனதில் வந்ததும் எனக்குள் ஒரு தயக்கம் பிறந்தது. முதன்முதலாக என்னைப் பற்றி எனக்குள் ஒரு சந்தேகம் பிறந்தது. உண்மையில் நான் நல்லவன் தானா? இல்லை ஏதேனும் பிரச்னை செய்து யாராலும் விரட்டப்பட்டு காட்டிற்குள் ஓடி ஒளிந்து அடிபட்டு கிடந்தேனா? இந்த எண்ணம் என்னை மேலும் கிலி அடையச் செய்தது. செய்வதறியாது திகைத்துப் போய் ஒரு மரத்தின் மேலே சாய்ந்து நின்று வெறித்துக் கொண்டிருக்கும் போது தான் அதை கவனித்தேன். நான் நினைத்ததை விட பெரிய பிரச்னைகள் என்னை சூழ்ந்திருப்பதை உணர்ந்தேன். அனிச்சையாய் என் கால்கள் மீண்டும் காட்டிற்குள் செல்லத் தொடங்கின.


அடுத்த பாகம்

Friday, January 24, 2014

இன்று ஒரு செருப்படி

ரயிலில் நண்பனுடன் வரும்போது எதிரில் ஒரு மொக்கை பையன் ஒரு சுமாரான பெண்ணுடன் (இருவரும் ஆங்கிலம் பேசும் அயல் நாட்டவர்) கடலை வறுப்பதை பார்த்ததும் கடமையே கருத்தாக கிண்டல் பேச எத்தனித்தோம். ஆங்கிலம் கலந்து பேசி அது அந்த மொக்கைக்கு புரிந்து விட்டால் நாம் மொக்கை வாங்குவதோடு நில்லாமல் பொக்கை வாயோடு போக வேண்டியிருக்கும் என்பதால் தூய தமிழில் கலாய்க்க முயற்சி செய்தோம். அப்போது தான் புரிந்தது - நாம் பேசத் தொடங்கினால் தமிழினி மெல்லச் சாகும்; அதற்கு ஆங்கிலம் அழுது ஒப்பாரி வைக்குமென்று!
உடனே எனக்குள் ஒரு குரல் கேள்வி கேட்க தொடங்கியது...
(ஆஹா... வந்துட்டான்யா வந்துட்டான்யா...!)
மனசாட்சி: தம்பி... உன்கிட்ட நான் ரெண்டு கேள்வி கேக்கணும்.
நான்: மறுபடியுமா!!?
மனசாட்சி: நீ அயல் நாட்டவனா? இல்ல அவங்க அயல் நாட்டவர்களா?
நான்: அது... வந்து...
மனசாட்சி: பொழப்பு தேடி வந்த இடத்துல உனக்கு ஏன்டா இவ்ளோ பேச்சு?
நான்: நாம ரெண்டாவது கேள்விக்கு போகலாமே.
மனசாட்சி: சரி... ஒழிஞ்சு போ! என்னமோ கிண்டல் பேசுறியே... உன்னால ஒழுங்கா தமிழ் பேச முடியுதா முதல்ல?
நான்: (ஆண்டவா... இவன் கிட்ட இருந்து என்ன காப்பாத்து!)
மனசாட்சி: அவங்க ரெண்டு பேராலயும் தமிழ் கலக்காம ஆங்கிலம் பேச முடியும். உன்னால ஆங்கிலம் கலக்காம தமிழ் பேச முடியுமா?
நான்: (இதுக்கு உன் முதல் கேள்வியே தேவல) ஹேய்... இங்கிலிஷ் இஸ் தி லிங்க் லாங்குவேஜ் யூ நோ!
மனசாட்சி: அடச்சீ... தமிழ்ல பேசு!
நான்: நான் என்ன சொல்ல வந்தேன்னா... ஆங்கிலம் தான் இந்த உலகத்தோட லிங்க்... ங்ங்ங்...
(ஆஹா... லிங்க் லாங்குவேஜ்-கு தமிழ்ல என்னனு தெரியலியே...)
நான்: ஸாரிப்பா... ஐ ஆம் டோட்டல் சரண்டர்.
மனசாட்சி: இங்கிலிஷ்-ஆவது ஒழுங்கா பேசுதா பாரு மூதேவி!
(சப்... சப்... சப்...)

பின்குறிப்பு: Link Language - தொடர்பு மொழி

Tuesday, January 14, 2014

போகிற போக்கில் ஒரு தத்துவம்

காலையில் ஒரு செய்தியை கேட்டதும் மனதுக்குள் ஒரு பாடல் பாடினேன் (சரி... படித்தேன்!)
நான்: ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா...
(என் மனசாட்சிக்கு பொறுக்கவில்லை...)
மனசாட்சி: தம்பி... நீ ரெண்டு விஷயத்த மறந்துட்ட!
நான்: அப்படி என்ன மறந்தேன்?
மனசாட்சி: நீ மொத்தமே அஞ்சு அடி தான்... ஆறடினு சொல்லி பெருமை பீத்திக்காத.
நான்: ரைட் விடு... அடுத்து?
மனசாட்சி: உங்களயெல்லாம் இப்போ யாருடா பொதைக்கிறா... நிலம் சொந்தமாறதுக்கு? செத்ததும் ஒரு டப்பாகுள்ள போட்டு ஒரு மெஷின்குள்ள விட்டா பொடியாகி வெளிய வர போறீங்க. உங்களுக்கெல்லாம் நிலம் இல்லடா... நிலத்துல இருக்கிற தூசு கூட சொந்தம் கிடையாது.
(தெறித்ததை துடைத்து விட்டு ஒன்றும் நடக்காதது போல் பேசத் தொடங்கினேன்)
நான்: ஆமா ஆமா... நீ சொல்றது ரொம்ப சரி... அந்த சாம்பலக் கூட சொந்தக்காரங்க ஆத்துல கரைக்கிறாங்களோ, இல்ல சாக்கடைல கரைக்கிறாங்களோ... யாருக்கு தெரியும்!?
மனசாட்சி: உங்க ஊருல தான் ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாதே!!
(அடச்சே... வாய தொறக்க விட மாட்றானே!!)

Monday, November 04, 2013

Sunday, November 03, 2013

ஆ! ரம்பம்...

வழக்கமான பழி வாங்கும் படலத்திற்கு புதுமைச் சாயம் பூசும் ஒரு வாடிக்கையான முயற்சி. ஆனால் விஷுவலில் மட்டுமே சாயம் சற்றே வெளிப்பட்டிருப்பது ஏமாற்றம். மற்றபடி கதையும் காட்சியமைப்பும் பார்த்து சலித்த பழஞ்சாயமே!
பின்னனி இசை அருமை. சண்டை காட்சிகள் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளன. அஜித், நயன்தாரா, கிஷோர், ராணா போன்றோரின் நடிப்பு ப்ளஸ். வசனம் பல இடங்களில் 'நச்'.
அஜித் அழகுதான். ஆனால் உடற்கட்டில் கவனம் தேவை. ஆர்யா - டாப்ஸி நல்ல ஜோடி... இருவருக்குமே நடிப்பு வரவில்லை. பாடல்கள் (முக்கியமாக பாடல் வரிகள்) மைனஸ்.
மொத்தத்தில் விஷ்ணுவர்தன் - அஜித் கூட்டணி ஏற்படுத்திய எதிரபார்ப்பை படம் நெருங்கவில்லை.

Saturday, October 19, 2013

மூடர் கூடம் - என் பார்வையில்

தொடக்கம் முதல் அடக்கம் வரை படத்தில் உள்ள ஓராயிரம் லாஜிக் ஓட்டைகளையும் தலைப்பு ஒன்றை வைத்து ஒன்றுமில்லாமல் செய்து விட்ட இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. திரைக்கதை அமைத்த விதம் சமீபத்திய படங்களில் இருந்து மூடர் கூடத்தை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. குறிப்பாக ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முன்கதைகளை சொன்ன விதம் ஷார்ட் & ஸ்வீட். நடிப்பை பொறுத்த வரை கிட்டத்தட்ட அனைவரும் தத்தம் பணிகளை செவ்வனே செய்து விட்டனர்.
எனினும் படத்தின் தொடக்கத்தில் "அட" போட வைக்கும் அதே விஷயங்கள் போகப்போக சலிப்பு தட்ட தொடங்கி விடுகிறது. அந்த அளவிற்கு படம் மொனட்டொனஸாக இருப்பது மைனஸ். படத்தில் ஆங்காங்கே சொல்லப்படும் மெசேஜஸ் "மூடர்"களின் மத்தியில் காணாமல் போய் விடுகிறது. காமெடி சில இடங்களில் நச்சென்று இருந்தாலும் சில காமெடிகள் மீண்டும் மீண்டும் வருவது போல் ஒரு உணர்வு.
மொத்தத்தில் படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் நன்றாக ரசித்திருக்கும்.

Thursday, October 10, 2013

அவதாரம்

மனிதனைக் காப்பாற்ற
மண்ணுலகில் கால்பதித்தேன்...
மனிதனிடம் மாட்டிக்கொண்டு
கண்ணீர்விட்டுக் கதறுகிறேன்...
மனிதா...
உன்னை மன்றாடிக் கேட்கிறேன்...
என்னை மன்னித்து விட்டுவிடு!
- இப்படிக்கு கடவுள்.

Wednesday, February 16, 2011

தேடல்

காடுகளில் தேடியாச்சு
வீடுகளில் தேடியாச்சு
ஆலயங்களில் தேடியாச்சு
மடங்களில் தேடியாச்சு
தூண்களிலும் தேடியாச்சு
துரும்புகளிலும் தேடியாச்சு

தெருத்தெருவா தேடி அலஞ்சும்
கிடைக்கலையே எந்தச் சாமியும்
தலத்தலையா அடிச்சு சொல்லியும்
திருந்தலையே எந்த ஆசாமியும்

பிள்ளைக்கு குடுக்க
பால் இல்லேனாலும்
சாமி சிலைக்கு
பாலூத்த மறந்ததில்ல!

அடுத்தவேளை சோத்துக்கு
வழி இல்லேனாலும்
நேத்திக் கடனுக்கு
ரத்தஞ்சிந்த நொந்ததில்ல!

அன்னாடம் வீட்டுல
அடுப்பெறிக்க வக்கில்லேனாலும்
எவன்சாமி பெருசுன்னு
சண்டபோட சலைச்சதில்ல!

உரிமைக்கும் உடைமைக்கும்
குரல்கொடுக்க துப்பில்லேனாலும்
தன்சாமி மானங்காக்க
தலையறுக்க தயக்கமில்ல!

இருக்கிற பிரச்சனைகளே
தலைக்குமேல ஓங்கிநிக்க
இல்லாத பிரச்சனைக்கு
விலைகொடுக்க யோசிக்கவில்ல!

வெட்டுப்பட்டும் குத்துப்பட்டும்
ஆஞ்சு அடங்கி
ஒஞ்சு போயும்
எவனுக்கும் புத்தி வரல

இத்தன கொடுமையும்
வாடிக்கையா மனுசன் செய்ய – இத
வேடிக்கை பார்க்கக்கூட
அந்த சாமி வரல!

Tuesday, February 15, 2011

நிலா

வானக் கடலினிலே
மேகப் படகினிலே
சந்திர வதனத்தாளின்
மந்திரப் பயணம்!

அன்னப் பறவையவள்
மின்னல் துடுப்பிடுகையில்
தெறிக்கும் அலையது
மண்விழும் மழை!

வெள்ளத்தில் மிதந்துவரும்
வெள்ளிப் பதுமையினை
அள்ளி அணைத்திடவே
முகில்களின் முற்றுகை!

தெள்ளிய சமுத்திரத்தில்
அள்ளிய முத்தினைப்போல்
விழிகளில் பூப்பறிக்கும்
நிலவொளியின் பூரிப்பு!

குறைந்து பிறையாகி
மறைந்து உருவாகி
மலர்ந்து முழுமதியாகி
சுழலும் பருவமாற்றமழகே!

காவியங்கள் போற்றிப்
பாடிடும் தங்கத்தாரகை!
ஓவியம் போலவளைத்
தீட்டியதெந்தத் தூரிகை?

நாடிவரும் சூரியதேவன்
காணும்போது நாணமென்ன?
கதிரவனோடு சந்திரனுக்கு
கண்ணாமூச்சி ஆட்டமென்ன?

சந்திரனின் சுந்தரவலையில்
எண்ணற்ற விண்மீன்கள்!
கடலில் விரித்த வலையல்ல...
கடலே விரிந்தது வலையாக!

கொள்ளை அழகைக்
கொண்ட நிலவே...
நீ
நீலவானில் நீராடி
முகிற்புகையில் குளிர்காய்ந்து
மின்னல் கொண்டு
கூந்தல் முடிந்து
நட்சத்திரப் பொட்டுமிட்டு
கரையொதுங்கி தரையிறங்கி
வாராயோ?
பூமித்தாய் துயில்கொள்ள
மடிமீது இடமொன்று
தாராயோ?

Saturday, August 14, 2010

மந்திரப் பெட்டி - 3

மந்திரப் பெட்டி - 2


அதே ஆயிரம் வருடங்களுக்கு முன்… அதே நாள்… அதே அந்திப் பொழுது!

அதே அடர்ந்த வனம்… அதே அழகியக் குடில்!

நகுலனும் தீரனும் மந்திரப் பெட்டியை கொடுமுடியானிடம் பெற்றுக் கொண்டு விடை பெற்றுச் சென்று அரை நாழிகையில் கொடுமுடியானின் சீடன் தயங்கிக் கொண்டே பேசத் தொடங்கினான்.
“குருவே! அடியேனுக்கு ஒரு சந்தேகம்.”
“ம்… கேள் சிஷயா. உன் மனதை உறுத்தும் ஐயம் என்னவோ?”
“ஒரு வேளை நம் மன்னர் மந்திரப் பெட்டியை உபயோகப் படுத்தாமல் தங்களிடம் திருப்பி அனுப்பி விட்டால் அதை எவ்வாறு செயலிழக்கச் செய்வது?”
“சீடனே, இவ்வுலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கும் மாற்று மந்திரம் உண்டு. எனது மந்திரப் பெட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல. காளி அன்னைக்கு பூஜை செய்து மாற்று மந்திரத்தை ஜபித்தால் மந்திரப் பெட்டி தன் சக்தியை இழந்துவிடும்”

சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பேசத் தொடங்கினான் கொடுமுடியான்.
“ஆனால் இந்த மந்திரப் பெட்டியை பொருத்தவரை அதை செயலிழக்கச் செய்ய மாற்று மந்திரத்தை விட சுலபமான வழி ஒன்று உள்ளது.”
அது என்ன என்பது போல் சீடன் ஆவலுடன் நோக்க கொடுமுடியான் தொடர்ந்தான்.
“நான் அந்தப் பெட்டிக்குள் செதுக்கி இருக்கும் மந்திரம் நெருப்புடன் தொடர்புடையது. அந்த மந்திரப் பெட்டியின் உட்புறம் ஒரு துளி நீர் பட்டாலும் அடுத்த நொடி மந்திரம் பயனற்றுப் போய் விடும்!”

--- முற்றும்

Thursday, August 12, 2010

மந்திரப் பெட்டி - 2

மந்திரப் பெட்டி - 1


சுமார் ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு… அதாவது இன்று… அந்திப் பொழுது!

பரந்து விரிந்த சமுத்திரம்… நீலக்கடலும் நீலவானும் கொஞ்சிக் குலவும் தொடுவானம்… மாலைக் கதிரவன் தொடுவானத்தில் பாதி மறைந்துகொண்டு மீதி எட்டிப் பார்த்து பூமித்தாய்க்கு பிரியா விடை கொடுத்துக் கொண்டு இருந்தான். கதிரவனின் மஞ்சள் கிரணங்கள் வான்பரப்பிலும் கடற்பரப்பிலும் பிரதிபலித்து தொடுவானத்தைத் தங்கப் புதையாலாகவே காட்சியளிக்கச் செய்தது.

தொடுவானம் தொடங்கி வரும் மஞ்சள் கிரணங்களின் பிரதிபலிப்பு குறைந்து கடலின் நீலம் புலப்படும் தருவாயில் ஒரு படகு நின்றுகொண்டிருந்தது. ஆராய்ச்சிப் படகு… கடல்வாழ் தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் உபயோகிக்கும் படகு. அமைதியான கடலின் மெல்லிய அலைகளின் தாளத்திற்கேற்ப ஆடிக்கொண்டு நின்ற படகில் இருவர் நின்று கொண்டிருந்தனர். ஒருவன் பெயர் கார்த்திக். மற்றொருவன் பெயர் சிவா.

இருவரும் யாரையோ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அந்த நடுக்கடலில் யாரை எதிர்பார்க்கின்றனர்?
“டேய் சிவா, இந்த ரெண்டு பேரும் ஏன் இவ்வளவு லேட் பண்றாங்க. இன்னும் பத்து நிமிஷத்துல oxygen cylinder empty ஆயிடும்.”
“Tension ஆகாத கார்த்திக். அவங்களுக்கு என்ன கடலுக்குள்ள போறது புதுசா? ரமேஷ் அஞ்சு வருஷமா நம்ம கூட இருக்கான். கேசவன் நாலரை வருஷமா இருக்கான். வந்துடுவாங்க… கவலப் படாத.”
“Experienced people-ஆ இருந்தும் ஏன் இப்படி கடைசி நிமிஷம் வரை கடலுக்குள்ள இருந்து ரிஸ்க் எடுக்கிறாங்க?”
“Relax Karthik. They should have found something interesting. அதுனால தான் லேட் ஆகுதுன்னு நெனைக்கிறேன்.”

இவர்கள் நால்வரும் ஐந்தாறு வருடங்களாகவே நல்ல நண்பர்கள். அனைவரும் ஒரே ஆராய்ச்சித் துறையில் வேலை செய்வது அவர்கள் நட்பிற்கு பாலமாக அமைந்தது. ரமேஷ் மற்றும் கேசவன் இருவரும் ஆராய்ச்சி சம்பந்தமாக கடலுக்குள் சென்று வெகு நேரம் திரும்பாததால் கார்த்திக்கும் சிவாவும் சிறிது படபடப்புடன் இருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் அவர்கள் படகின் அருகில் சிறிது சலசலப்பு உண்டாக இருவரும் ஆவலுடன் எழுந்து சத்தம் வந்த திசையில் படகு விளிம்பிற்கு சென்று எட்டிப் பார்த்தனர். சில நொடிகளில் wet suit, swim cap, oxygen cylinder சகிதமாக இருவர் கடற்பரப்பைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தனர். இருவரும் தங்கள் பிராணவாயுக் குழாயை வாயிலிருந்து அகற்றி முகத்திரையை விலக்கினார்கள். வந்தவர்கள் யாரென்று பார்த்தால்… என்ன ஆச்சரியம்? எப்படி இது சாத்தியம்? விழிகள் பொய் சொல்லக் கூடுமா? மாண்டு போனதாக எண்ணியவர்கள் மீண்டும் பிழைத்து வருவதென்பது வரலாறு காணாத அதிசயம் ஒன்றுமல்ல… அதற்காக இத்தனை ஆண்டுகள் கழித்தா? ஆயிரம் ஆண்டுகள் என்பது பத்து தலைமுறைகளுக்கு மேல் கண்டிருக்கும் அல்லவா? நம்புவதற்கு கடினமாகத் தான் இருந்தது… ஆனால் நம்பியாக வேண்டிய கட்டாயம். ஆம்… நீருக்குள்ளிருந்து வெளி வந்தவர்கள் சாட்சாத் நகுலனும் தீரனும் தான். அன்று நீருக்குள் மூழ்கிய போது அவர்கள் படை வீரர்கள்… இன்று நீருக்குள்ளிருந்து வெளி வரும்போது ஆராய்ச்சியாளர்கள்! சிவா முகத்திலோ கார்த்திக் முகத்திலோ சிறிதும் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை… இருக்க நியாயமும் இல்லை. இருவரும் இன்முகத்தோடு வரவேற்றனர் ரமேஷையும் கேசவனையும். சரி… இவர்கள் மறு ஜென்மம் எடுத்து வந்துள்ளார்கள் என்றே வைத்து கொண்டாலும் முந்திய ஜென்மத்தில் நண்பர்களாக வாழ்ந்து மடிந்தவர்கள் இந்த ஜென்மத்திலும் நண்பர்களாகவே எப்படி? ஒரு வேலை போன ஜென்மத்தில் இவர்கள் முடிக்காமல் விட்டுச் சென்ற “பணியை” செய்து முடிக்க மீண்டும் வந்துள்ளனரோ!!?

கார்த்திக் அர்ச்சனையைத் தொடங்கினான், “Guys… ஏன் இவ்வளவு லேட் பண்றீங்க. நிமிஷத்துக்கு நிமிஷம் எனக்கு tension build ஆயிட்டே இருந்தது.”
அவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் சிவா, “hey… anything interesting?” என்று கேட்டான்.
“Of course” எனக் கூறிய ரமேஷ் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். மெதுவாக தாங்கள் கண்டுபிடித்துக் கொண்டு வந்ததை எடுத்து நண்பர்களிடம் காட்டினான். ஏதோ புது வகையான தாவரத்தோடு வந்திருப்பார்கள் என ஆர்வ மிகுதியில் இருந்த சிவாவும் கார்த்திக்கும் முதலில் சற்று ஏமாற்றம் அடைந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் விழிகளில் ஆச்சரியம் பொங்கியது. முதலில் அதை ஏதோ சாதாரண மரப்பெட்டியென நினைத்த இருவரும் அதன் பொலிவையும் ஜொலிப்பையும் பார்த்து மிகவும் வியப்படைந்தனர்.
“என்ன மச்சான் இது? இத எங்க கண்டுபிடிச்ச?” சிவாவின் கேள்விக்கு கேசவன் பதிலளித்தான்.
“சிவா, இப்போ இந்த வெளிச்சத்துல இது ஜொலிக்கிறத பார்த்தே இவ்வளவு ஆச்சரியப் படுறியே. Actually இது கடலுக்கு அடியில அவ்வளவு ஆழத்துல பாதி மண்ணுக்குள்ள புதஞ்சு கொஞ்சம் தான் வெளிய நீட்டிட்டு இருந்தது. அப்போவே அது பளிச்சினு கண்ண பரிச்சது தெரியுமா…எங்களால நம்பவே முடியல. அத்தனை அடி ஆழத்துல லைட் ஸோர்ஸ்-ஏ இல்லாம இருக்கும் போது இது மட்டும் எப்படி பளிச்சுன்னு இருக்குனு புரியவே இல்ல.”
“Sounds interesting…!”
ரமேஷ் தொடர்ந்தான், “நீங்க இன்னொண்ணு note பன்னீங்களா… இந்த பெட்டி இப்படி நடுக் கடல்ல அதுவும் நல்லா பாதி மண்ணுக்குள்ள புதஞ்சு settle ஆகி இருக்குன்னா கண்டிப்பா பல வருஷமா இது கடலுக்குள்ள இருக்கணும். அப்படி இருந்தும் கொஞ்சம் கூட damage ஆகாம இன்னும் புத்தம் புதுசா அப்படியே இருக்குன்னா இந்தப் பெட்டிய எத வச்சு செஞ்சிறுப்பாங்க? பாக்குறதுக்கு gold, silver, platinum எது மாதிரியும் இல்ல.. it is quite different.”
“வீட்டுக்கு எடுத்துட்டு போய் இதுல என்ன இருக்குனு பார்க்கலாம். அப்புறம் நம்ம lab-லே குடுத்து இது என்ன metal-னு கேட்டு பார்க்கலாம்”, கார்த்திக் யோசனை சொல்ல கேசவனுக்கு வீடு செல்லும் வரை பொறுமை இல்லை.
“Lab-கு கொண்டு போய் குடுக்கலாம். But இப்போவே இதத் திறந்து உள்ள என்ன இருக்குன்னு பார்க்கலாம்.” என்றான்.
“ரொம்ப வருஷம் கடலுக்குள்ளேயே இருந்திருக்கும் போல தெரியுது. அவ்வளவு easy-ஆ திறக்க முடியாது. இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்ட ஆரம்பிச்சிடும். நாம கிளம்பலாம். “ என்றான் சிவா.
“நோ… நோ… இத்தன வருஷம் கடலுக்குள்ள இருந்தும் கொஞ்சம் கூட கறுத்து எல்லாம் போகாம அப்படியே polish-ஆ இருக்கு. திறக்குறதுக்கு மட்டும் ஏன் கஷ்டப்பட போகுது. சும்மா try பண்ணி பார்ப்போம்.” பெட்டியை கையில் எடுத்தான் ரமேஷ். “இதை எப்படித் திறக்கணும்னு தெரியலையே.” என்று கூறிக் கொண்டே அப்பெட்டியை சுற்றிச் சுற்றிப் பார்த்தான். அதை அப்படியே geometry box திறப்பது போல் திறந்து பார்த்தான். ஆனால் முடியவில்லை.
“உள்ள அப்படி என்ன தான் இருக்கும்?” ஆவலை அடக்க முடியாமல் கேட்டான் சிவா.
“ஒரு வேளை வைரம், வைடூரியம் எல்லாம் பதிச்ச போர் கத்தி ஏதாவது இருக்கும்னு நெனைக்கிறேன்.” கார்த்திக்கின் அனுமானம்.
“டேய்… இவன் K TV-ல மேட்டுக்குடி படம் பாத்துட்டு வந்து பேசுறான் மச்சான்.” கலாய்க்கத் தொடங்கினான் சிவா.
“அதெல்லாம் இருக்கட்டும்… இத திறக்குறதுக்கு ஒரு வழி சொல்லுங்க பா!” அலுத்துக் கொண்டான் ரமேஷ்.
பின்னர் ஏதோ யோசனை வந்தவன் போல கையில் கத்தியை எடுத்து பெட்டியின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் மூடியிருந்த இடத்திலுள்ள இடைவெளியில் விட்டு கெந்திப் பார்த்தான். கத்தி உடைந்தது தான் மிச்சம். பெட்டி திறந்த பாடில்லை. இன்னும் என்னன்னமோ வித்தைகள் எல்லாம் செய்தும் அனைத்தும் பயனற்றுப் போயின.
“சே… கொஞ்சம் கூட luck-ஏ இல்ல மச்சான்.” என்றான் வெறுப்புடன்.

உண்மையில் அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் தான் இருக்கிறதோ!? ஆனால் அதுவும் வெகு நேரம் நீடிக்கவில்லை. பெட்டியின் வலது பக்கத்தில் ஒரு சின்ன துவாரம் இருப்பதைக் கவனித்த ரமேஷிற்கு சட்டென்று ஏதோ ஞானோதயம் உதிக்க, மீண்டும் பெட்டியை நாலாபுறமும் புரட்டினான்.பெட்டியின் பின் பக்கத்திலிருந்து குண்டூசி போன்றதொரு பொருளை மெதுவாக உருவினான். நல்ல அழகிய வேலைப்பாடமைந்த குச்சி அது. அழிவிற்கு கூட அலங்காரம் செய்யும் மனிதர்கள் ஆதி காலம் முதலே இருந்திருக்கின்றனர் போலும். ரமேஷின் முன்னேற்றம் மற்றவர்கள் மனதிலும் பேராவலைக் கிளப்பியது.
“You got it da!” என்றான் கேசவன்.

உள்ளே என்ன இருக்கும் என்ற ஆவல் அனைவரையும் பற்றிக் கொள்ள, “சீக்கிரம் டா” என ரமேஷை அவசரப்படுத்தினர். அந்தக் குச்சியை முதலில் பார்த்த துவாரத்திற்குள் மெதுவாக நுழைக்க அது முழுவதும் உள்ளே சென்று அந்த துவாரத்தில் கச்சிதமாக பொருந்திக்கொண்டது. அனைவரையும் வெற்றிப் புன்னகையோடு ஒரு முறை சுற்றிப் பார்த்த ரமேஷ் மெதுவாக பெட்டியை மேலும் கீழுமாக பிடித்து இழுக்க பெட்டி திறந்தது. பெட்டியின் உள்ளே பார்த்ததும் நால்வர் முகத்திலும் ஏற்பட்ட உணர்ச்சியை விளக்க வார்த்தைகள் இல்லை. அப்படி ஒரு ஏமாற்றம் அனைவர் முகத்திலும். ஆம்… பெட்டியைத் திறந்ததும் அதன் உள்ளிருந்து கொஞ்சம் கடல் தண்ணீர் மட்டும் வெளியில் கொட்டியது. இவ்வளவு பரபரப்பாக முயற்சித்து பெட்டியைத் திறந்து உள்ளே ஒன்றும் இல்லாததைப் பார்த்து வெறுப்பின் எல்லைக்கே சென்றனர். அதைப் பார்த்த எரிச்சலில் ரமேஷ் பெட்டியைத் தூக்கி படகில் இருந்த ஒரு இருக்கையின் மேல் வைத்து விட்டு படகின் விளிம்பிற்கு சென்றான். அவ்வளவு நேரம் அவனது நிழற் பாதுகாப்பில் இருந்த பெட்டியின் மேல் சூரிய கிரணங்கள் முதல் முறையாக நேரடியாகப் பட்டது. அந்நேரம் அங்கு ஏற்பட்ட அதிசய மாற்றங்களை ஒருவரும் உடனடியாகக் கவனிக்கவில்லை. சலித்துப் போய் கன்னத்தில் கை வைத்து அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க கேசவன் விழிகளில் ஆச்சரியம் பெருகியது. “ஹே… அங்க பாருங்க டா” என்று பெட்டியை பார்த்தபடி கூவினான். அப்பொழுது தான் மற்றவர்களும் அதை கவனித்தனர். பெட்டியின் உட்புறம் ஏதேதோ எழுத்துக்கள் தோன்றி சூரிய ஒளி பட்டுபிரகாசித்துக் கொண்டிருந்தன. அனைவர் முகத்திலும் மீண்டும் ஆச்சரியம்.

“இவ்வளவு நேரம் உள்ள ஒண்ணுமே நமக்கு தெரியலையே… இப்போ எப்படி திடீர்னு?” கார்த்திக் குரலில் சற்றே பீதி படர்ந்திருந்தது.
“அதெல்லாம் முதல்லயே இருந்திருக்கும். நாம கவனிச்சிருக்க மாட்டோம்.” என்றான் சிவா.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சிகளுக்கு நடுவே பிறந்து வளர்ந்த அவர்களுக்கு மாய மந்திரம் மேல் எல்லாம் நம்பிக்கை இருக்க நியாயமில்லாததால் சிவாவின் வார்த்தைகளை அப்படியே ஆமோதித்தனர்.
“சரி… அதுல என்ன எழுதி இருக்குன்னு புரியுதா?” கேசவன் கேள்விக்கு பதிலளித்த ரமேஷ்,
“எழுத்து எல்லாம் தமிழ் எழுத்து தான். ஆனா வார்த்தைகள் எல்லாம் ஒண்ணும் புரியற மாதிரியே இல்லையே!” என்றான்.
“குத்துமதிப்பா பார்த்தா சமஸ்கிருத வார்த்தைகள் மாதிரி இருக்கு. என்ன இருக்குனு அப்படியே படி. கார்த்திக்குக்கு தான் ஹிந்தி தெரியுமே… அவனால ஏதாவது புரிஞ்சிக்க முடியுதானு பார்ப்போம்.” என்றான் சிவா.
ரமேஷ் வாசிக்கத் தொடங்கினான்…

(முதல் முறை)
“நமஸ்கரோட்டி அந்தகா நமஸ்கரோட்டி அனலா
ஜ்வாலனா நிஸூதாயிடும் ஜீவலோக”


திக்கித் திணறி வாசித்து முடித்து விட்டு ஏதாவது புரிகிறதா என்பது போல் கார்த்திக்கைப் பார்த்தான். சிந்திப்பது போல் நெற்றியை சுருக்கி கொண்டு, “இன்னொரு தடவ வாசி” என்றான் ரமேஷிடம்.

(இரண்டாம் முறை)
“நமஸ்கரோட்டி அந்தகா நமஸ்கரோட்டி அனலா
ஜ்வாலனா நிஸூதாயிடும் ஜீவலோக”


“இப்போவாச்சும் புரிஞ்சுதா?” நக்கலாகக் கேட்டான் ரமேஷ்.
“ஏதோ சாமி கும்பிடற மாதிரி வார்த்தைகள் வருது. ரொம்ப clear-ஆ ஒண்ணும் புரியல.” என்றான் கார்த்திக்.
“டேய்.... சும்மா scene போடாத. Sankskrit தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லு.” கலாய்க்கத் தொடங்கினான் கேசவன்.
“ரொம்ப எல்லாம் தெரியாது டா… சின்ன வயசுல கொஞ்சம் படிச்சது.” சமாளித்தான் கார்த்திக்.
ரமேஷ் தொடர்ந்தான், “இதோ பார்… இன்னும் ஒரே ஒரு தடவ வாசிச்சுக் காட்டுறேன். மரியாதையா அர்த்தம் சொல்லு…”.

அவன் அப்படிச் சொன்னதும் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த இடத்தில் திடீரென்று பலமாகக் காற்று வீசியது. சில நிமிடங்களுக்கு கடல் அலைகளும் பெரிதாக எழுந்தன. சற்றும் எதிர்பார்க்காமல் நடந்த இந்த குழப்பத்தில் மந்திரப் பெட்டி ரமேஷின் கையிலிருந்து தவறி விழுந்தது. ஒரு நொடி அவர்களுக்கு பயம் ஏற்பட்டாலும் சமாளித்துக் கொண்டு என்னவென்று ஆராய முற்பட்டனர். ஆனால் ஓரிரு நிமிடங்களில் காற்றும் கடலும் அடங்கி பழையபடி அமைதி திரும்பியது.

“என்ன ஆச்சு திடீர்னு?” என்று சிவா கேட்க,
“அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம். முதல்ல நம்ம கார்த்திக்கு உண்மையிலேயே sankskrit தெரியுமானு பார்க்கலாம்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் கேசவன்.

நண்பனைக் கேலி பேசும் வேகத்தில் இருந்த அவர்களுக்கு இயற்கை கொடுத்த எச்சரிக்கை விளங்கவில்லை. நடந்த குழப்பத்தில் படகின் ஒரு மூலையில் போய் விழுந்து கிடந்த மந்திரப் பெட்டியை மீண்டும் எடுத்து வந்தான் ரமேஷ்.
“மச்சான்… சொன்னது நெனவிருக்கு இல்ல... this is your last chance!” என்று கார்த்திக்கிடம் சொல்லி விட்டு மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினான்.

(மூன்றாம் முறை)
“நமஸ்கரோட்டி அந்தகா நமஸ்கரோட்டி அனலா
ஜ்வாலனா நிஸூதாயிடும் ஜீவலோக”


அவன் மந்திரத்தை உச்சரித்து முடிக்கவும் அந்த அதிசயம் நடந்தேறியது. ஒரு கணம் திகைத்துப் போனான் ரமேஷ்.
“டேய்.. இங்க பாருங்கடா.”
“என்னடா மறஞ்சிருச்சு!”
“எப்படி இப்படி திடீர்னு காணாம போகும்?” “How is it possible?” “எனக்கு இங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல…”
“பயமா இருக்கு மச்சான்”

அவர்களுக்குள் கூச்சல்களும் குழப்பங்களும் மேலோங்கிக் கொண்டே போக ரமேஷ் நண்பர்களை ஆசுவாசப்படுத்தும் முயற்சியில் இறங்கினான்... பெட்டியை மீண்டும் அதே இருக்கையில் வைத்தபடி! ஆம்… மறைந்தது மந்திரப் பெட்டியல்ல… அதில் பொறிக்கப்பட்டிருந்த மந்திரச் சொற்கள் மட்டுமே! ரமேஷ் மூன்றாவது முறை மந்திரத்தைப் படித்து முடித்ததும் பெட்டியில் ஏதோ விநோத மாற்றங்கள் நிகழ்வதை உணர்ந்தான். அடுத்த சில நொடிகளில் மந்திரச் சொற்கள் இருந்த இடம் காலியாக இருப்பதைப் பார்த்துத் திகைத்தான். அதைக் கண்டு மற்ற நண்பர்களையும் பீதி ஆட்கொள்ள தன்னையும் நிதானித்துக்கொண்டு அவர்களையும் சமாதானப்படுத்தினான் ரமேஷ்.

“Friends… இப்போ ஏன் நாம இவ்வளவு பயப்படறோம்.”
“பின்ன என்னடா பண்ணச் சொல்ற? முதல்ல பெட்டிய திறந்தப்ப உள்ள ஒண்ணுமே இல்ல. திடீர்னு ஏதோ எழுத்து எல்லாம் வந்துச்சு. கொஞ்ச நேரத்துல அதுவே காணாம போயிடுச்சு. பயப்படாம என்ன பண்ண முடியும். இந்த பெட்டிக்குள்ள பேய் பிசாசு ஏதாவது இருக்குமோ? பேசாம தூக்கி இத கடலுக்குள்ளேயே போட்டுட்டு போயிடலாம் டா.” பயத்தில் உளறிக் கொட்டினான் கார்த்திக்.
ரமேஷ் தொடர்ந்தான், “கார்த்திக், idiot மாதிரி பேசாத. இதுல பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்ல. இது ஒண்ணும் இந்த உலகத்துல நடக்க முடியாத விஷயம் இல்லியே. நாம invisible ink பத்தி படிச்சது இல்ல. அது மாதிரி கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ராஜா காலத்துல use பண்ண technique-ஆ இருக்கும் இது.”

நண்பர்களை ஏறிட்டு பார்த்தான் ரமேஷ். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. அவர்கள் யாரும் சமாதானமடையவில்லை என்பதை அவர்கள் முகம் தெளிவாகச் சொல்லியது.
“Come on guys. It is a kind of Steganography.” முயற்சியைத் தொடர்ந்தான் ரமேஷ்.
“இதக் கொண்டு போய் நம்ம lab-ல குடுத்தா ரெண்டு மூணு வாரத்துல இத பத்தின மொத்த details-உம் அக்கு வேற ஆணி வேற புட்டு புட்டு வைக்கப் போறாங்க. இப்போ நாம எதுக்கு தேவை இல்லாம கவலப் பட்டுட்டு இருக்கோம். Come on. Lets go!” படகைக் கரையை நோக்கி திருப்பும் முயற்சியில் இறங்கினான் ரமேஷ்.

மற்ற நண்பர்களுக்கும் ரமேஷ் பேச்சில் ஏதோ உண்மை இருப்பதாகவே தோன்ற சற்று சமாதானம் அடைந்தனர். படகு கரையை நோக்கி முன்னேறத் தொடங்கியது. கதிரவன் தன் கடைசிப் பார்வையை வீசிவிட்டு முழுவதுமாய் கடலுக்குள் மூழ்கினான்.


மந்திரப் பெட்டி - 3

Tuesday, August 10, 2010

மந்திரப் பெட்டி - 1

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்… ஒரு நாள்… அந்திப் பொழுது!

பரந்து விரிந்த வனம்… நன்கு ஓங்கி உயர்ந்த மரங்களும் செடி கொடிகளும் புற்களும் வனத்தின் அடர்த்தியை பறைசாற்றிய படி நின்றன.பகலிலேயே இருண்டு கிடக்கும் இவ்வனம் இரவு நெருங்குகையில் பார்ப்பதற்கு சற்றே அச்சமளிப்பதாகவே இருந்தது. குறுக்கும் நெடுக்குமாக பறந்து கொண்டிருந்த வவ்வால்களும் அவ்வப்பொழுது கேட்ட ஆந்தைகளின் அலறல்களும் வன விலங்குகளின் கூச்சல்களும் எரியும் அச்சத்தில் எண்ணை ஊற்றின. மற்றபடி இரவு நேர பூச்சிகளின் ரீங்காரத்தை தவிர வேறு சப்தங்களின்றி அவ்வனத்தைப் போலவே அமைதியும் பரவி இருந்தது.

யாருமற்ற வனத்தில் யாரை முறைப்பதென்று தெரியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆந்தை ஒன்று திடீரென்று மெல்லிய ஒலியொன்று கேட்க சுற்றும் முற்றும் பார்த்தது. குதிரைகளின் குளம்படி ஓசை அது. நொடிகள் பெருகப் பெருக சத்தமும் பெருகிக் கொண்டே வந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் வனத்தின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு வெண்புரவிகள் இரண்டு கடந்து சென்றன. அப்புரவிகளின் அகண்ட தலைப்பகுதியும் நீண்ட வாலும் அவைகளை அரேபியக் குதிரைகளாக அடையாளம் காட்டின. பாதை இல்லாத காட்டில் மிக லாவகமாக கற்களையும் முட்களையும் கடந்து விரைந்து சென்றன புரவிகள் இரண்டும். அது குதிரைகளின் திறமையால் மட்டுமல்ல… அவற்றை செலுத்திய வீரர்களின் திறமையும் மெச்சப்பட வேண்டும்.

சிறிது தூர பயணத்திற்கு பின் புரவிகளின் வேகம் குறைந்தது. வீரர்கள் இருவருக்கும் சம்பாஷணை தொடங்கியது.
“நகுலா!”
“சொல் தீரா…”
“அதோ அந்த பள்ளத்தில் ஒரு விளக்கொளி தெரிகிறதே… அங்கு தான் நாம் செல்ல வேண்டும்.”

தீரன் காட்டிய திக்கில் குடில் ஒன்று மங்கலாகத் தெரிந்தது. உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்கொளியில் ஆள் நடமாட்டம் இருப்பதும் புலப்பட்டது. இத்தகைய அடர்ந்த காட்டில் குடில் அமைத்து தனியே தங்கிக் கொண்டிருப்பவருக்கு நெஞ்சுரம் மிதமிஞ்சியே இருக்கவேண்டும்.

சுத்தமான குடிலும் அதைச் சுற்றி அமைந்திருந்த தோட்டமும் மங்கலான வெளிச்சத்திலும் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. அத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த புள்ளி மான்கள் இரண்டு குதிரைகளின் குழம்படி ஓசை கேட்டு மிரண்டு மின்னலெனப் பாய்ந்து புதருக்குள் சென்று மறைந்தன. நகுலனும் தீரனும் தங்கள் புரவிகளை குடிலுக்கு வெளியே நிறுத்தி விட்டு வாசலை நோக்கி நடந்தனர்.

சத்தம் கேட்டு குடிலை விட்டு வெளியே வந்த சீடனிடம் நகுலன், “குருவை சந்திக்க வேண்டும். மன்னர் அனுப்பியதாகக் கூறுங்கள்” என்றான்.
“குரு தியானத்தில் இருக்கிறார். சற்று நேரம் காத்திருங்கள். தியானம் முடிந்ததும் வந்து அழைத்துச் செல்கிறேன்.” என்றான் சீடன்.
நகுலனும் தீரனும் திண்ணையில் அமர்ந்தனர்.

தியானத்தில் இருக்கும் குருவின் பெயர் கொடுமுடியான். முல்லைப்பந்தல் சிற்றரசின் கீழுள்ள வனத்தில் வசிக்கும் ஒரு பெரிய மந்திரவாதி. முல்லைப்பந்தலின் மன்னன் முல்லை வேந்தனுக்கு “பல விதங்களில்” உதவி புரிந்து வந்ததால் நாட்டு மக்களும் அரசு பணியாளர்களும் மன்னனுக்கு கொடுக்கும் மரியாதையை கொடுமுடியானுக்கும் கொடுக்க வேண்டுமென்பது அரசகட்டளை. மரியாதை இருக்கிறதோ இல்லையோ… மக்களுக்கு இவன் மேல் மிகுந்த பயம் இருந்தது. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை… கொடுமுடியானின் மந்திர சக்தி அப்படி.

உள்ளே சென்ற சீடன் ஒரு நாழிகை கழித்து வெளியே வந்து இருவரையும் உள்ளே வருமாறு அழைத்தான். குடிலின் வெளித் தோற்றத்திற்கு சிறிதும் சம்பந்தமின்றி உட்புறம் அப்படியொரு கோரக்காட்சி அளித்தது. சுற்றிலும் மண்டை ஓடுகள்… தரை எங்கும் சிந்தி இருந்த சாம்பல் மற்றும் பிறபூஜைப் பொருட்கள்… குடிலின் நடுவே யாகம் வளர்க்க வெட்டப்பட்ட குழி… அனைத்திற்கும் மேலாக ஆங்காங்கே தெரித்திருந்த பலியிடப்பட்ட விலங்குகளின் (சமயத்தில் மனிதர்களும்) உறைந்த குருதித் துளிகள்! போர் வீரர்களான நகுலனுக்கும் தீரனுக்கும் கூட அந்தக் காட்சி மயிர்க்கூச்செறியச் செய்தது. நிதானித்துக் கொண்டு இருவரும் கொடுமுடியானுக்கு தங்கள் வணக்கங்களைச் செலுத்தினர். பின்னர் தீரன் தன் கச்சிலிருந்து ஓலைச் சுவடி ஒன்றை எடுத்து கொடுமுடியானிடம் கொடுத்தான்.

முல்லை வேந்தன் கொடுமுடியானுக்கு வரைந்திருந்த அவ்வோலையில்,
“மதிப்பிற்குரிய குருவிற்கு முல்லை வேந்தனின் வந்தனம்.
இந்த ஓலையைக் கொண்டு வரும் நகுலனும் தீரனும் என் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். தாங்கள் எவ்வித ஐயமும் இன்றி இவர்களிடம் மந்திரப் பெட்டியைக் கொடுத்து அனுப்பலாம்.” என்று எழுதி அரசு முத்திரையும் பதிக்கப்பட்டு இருந்தது. அதைப் படித்து விட்டு கொடுமுடியான் நிமிர்ந்து இருவரையும் பார்த்தான். தீரன் பேசத் தொடங்கினான்.
“எனது பெயர் தீரன். இவன் நகுலன்.”
“நல்லது. மன்னரின் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்றால்… தாங்கள் வந்துள்ள காரியம் பற்றி முழுமையும் அறிவீர்களா?” – கொடுமுடியான்.
நகுலன் தொடர்ந்தான், “மந்திரப் பெட்டியின் பயனைப் பற்றி அறிவோம். ஆனால் எதற்காக மன்னர் இந்த ஏற்பாடு செய்கிறார் என்பது பற்றி நாங்கள் அறியோம்.”
“அது நானும் மன்னனும் மட்டுமே அறிந்த ராஜ ரகசியம். அதை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அறிந்து கொள்ள ஆசைப்பட்டால் கூட உங்கள் சிரம் சின்னாபின்னாமாகி விடும்.” என்று கூறி கொடுமுடியான் நிமிர்ந்து பார்க்க “புரிகிறது!” என்பது போல் இருவரும் தலையசைத்தனர்.

அவர்கள் சம்பாஷணையை தொடரும் முன் மந்திரப் பெட்டியின் காரண காரியத்தை அறிந்து கொள்வோம். இந்த மந்திரப் பெட்டியின் முக்கிய குறிக்கோளே அழிவு தான்! ஏதோ ஒரு பெரிய திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டே முல்லை வேந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க கொடுமுடியான் இந்த மந்திரப் பெட்டியை செய்துள்ளான். கொடுமுடியானின் மந்திர சக்தியின் உதவியினால் விற்போர், வாட்போர், மற்போர் என எப்போரும் புரியாமல் “கத்தியின்றி ரத்தமின்றி” ஒரு பெரிய நிலப் பரப்பை புல் பூண்டு முளைக்கக் கூட வகை இல்லாமல் செய்து விடவே இந்தப் பெட்டி!

கொடுமுடியான் மந்திரப் பெட்டியை எடுத்து நகுலன் மற்றும் தீரனிடம் காட்டினான். பொன்னிறத்தில் மின்னிய அந்தப் பெட்டி அவர்கள் எண்ணியதை விட சற்று பெரிதாகவே இருந்தது. ஓரடிக்கு மேல் நீளமும் ஐந்தாறு அங்குல அகலமும் பெற்றிருந்த அப்பெட்டி விளக்கொளியின் வெளிச்சத்தில் காண்பவரின் கண்களுக்கு ஜாலம் காட்டியது. பிரமிப்பின் மிகுதியில் இருந்த இருவருக்கும் கொடுமுடியான் மந்திரப் பெட்டியை உபயோகிக்கும் முறையை விளக்கத் தொடங்கினான்.
“இந்தப் பெட்டியை குறிப்பிட்ட இடத்தில் வைத்து திறந்து கதிரவன் ஒளி இதன் மேல் படும்படி வைத்தால் சில நொடிகளில் இதனுள்ளே நான் செதுக்கியுள்ள மந்திரம் கண்களுக்கு புலப்படும். அதை வாய்விட்டு மும்முறை ஜபித்தால் இப்பெட்டி அவ்விடத்திலிருந்து மாயமாய் மறைந்துவிடும். மறைந்த மறு நொடி அவ்விடத்தில் அழிவு தொடங்கும். நம் மன்னரின் வெற்றியும் தொடங்கும்!!!” – இதை சொல்லும் பொழுது கொடுமுடியானின் கண்களில் கொலை வெறி தாண்டவமாடியது. அவன் ஆனந்தத்தின் எல்லையில் அந்தக் காடே அதிர்ந்து போகும்படி சிரித்த சத்தமும் அவனது கறை படிந்த கோரப்பற்களும் நகுலனுக்கும் தீரனுக்கும் உள்ளுக்குள் பீதியைக் கிளப்பின.
கொடுமுடியான் தொடர்ந்தான், “இந்த மந்திரப் பெட்டி தற்சமயம் சில காத தூர சுற்றளவை அழிக்கும் சக்தி மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் இதன் சக்தி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகும். மன்னனின் திட்டம் முழு வெற்றி பெற வேண்டுமென்றால் இதை இன்றிலிருந்து சரியாக முப்பது நாட்கள் கழித்து உபயோகப் படுத்த வேண்டும்.”
நகுலன் இடைமறித்தான், “நாளுக்கு நாள் இதன் சக்தி பெருகும் என்றால் இதை மன்னர் உபயோகப்படுத்தத் தவறி விட்டால் என்ன ஆகும்?”
கொடுமுடியான், “இப்பெட்டியை உபயோகப்படுத்தும் முடிவை கைவிட்டாலோ அல்லது காலம் கடத்தி உபயோகிக்க நினைத்தாலோ சிறிதும் தாமதமின்றி இதை என்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அப்படியே விட்டு விட்டால் இன்னும் ஒரு வருட காலத்திற்குள் இவ்வுலகையே அழிக்கும் சக்தியை இது பெற்று விடும்.”
தீரன் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “குருவே, எதற்காக இந்த விஷப் பரிட்சை?” என்று கேட்டான்.
கொடுமுடியான் கோபக்கனல் தெறிக்க தீரனைப் பார்த்து, “மூடனே! சொல்வதை மட்டும் செய். என்னை கேள்வி கேட்காதே.” எனக் கூவ நகுலனுக்கும் தீரனுக்கும் சப்த நாடியும் அடங்கியது. அமைதியாக மந்திரப் பெட்டியை வாங்கி தீரன் தன் இடைக்கச்சில் சொருகிக்கொண்டான்.பின்னர் கொடுமுடியானிடம் விடை பெற்றுக் கொண்டு இருவரும் அரண்மனை நோக்கி கிளம்பினர். அவர்கள் கிளம்பிய நேரம் நன்றாக இருள் சூழ்ந்து கொண்டது. இருவரும் கையில் தீப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டு மெதுவாக புரவிகளை நடத்திச் சென்றனர்.

இருவரும் அமைதியாக சென்று கொண்டிருந்தனர். வனத்தைக் கடந்து ஒரு ஆற்றங்கரையை அடைந்ததும் புரவிகளை விட்டு இறங்கி மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள். இரவின் கருமை அப்பியிருந்த நீர்ப்பரப்பில் பிறை நிலவின் பிம்பம் அழகாக பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதை ரசிக்கும் மன நிலையில் இருவருமே இல்லை. அவர்கள் மனதில் குழப்பம் நிறைந்து இருந்தது. என்னன்னவோ எண்ணங்கள் வந்து அவர்கள் உள்ளத்தின் அமைதியை கெடுத்துக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு பெரிய ஆபத்து தங்களை சூழ்ந்து கொள்ளப் போவது போன்றதொரு எண்ணம் அவர்களை உறுத்திக் கொண்டே இருந்தது. இப்பெட்டியை மன்னரிடம் கொண்டு சேர்ப்பது சரியா என்று யோசிக்கத் தொடங்கினான் நகுலன். தீரனையும் நேரடியாகவே கேட்டு விட்டான்.
“தீரா, நாம் இதை மன்னரிடம் கொண்டு சேர்ப்பது எனக்கு நல்லதெனத் தோன்றவில்லை. உலகத்தின் அழிவு நம் மூலமாக தொடங்கி விடுமென உள்மனது உறுத்துகிறது.”
“எனக்கும் அதே எண்ணம் தான் நகுலா. ஆனால் இப்போது நமக்கு வேறு வழியே இல்லையே.”
“ஏன் இப்படிச் சொல்கிறாய்?”
“சிந்தித்துப் பார். இப்பெட்டியினால் ஏற்படப் போகும் அழிவினைத் தடுக்க கொடுமுடியானால் மட்டுமே முடியும். நாம் இதை எங்கு ஒளித்து வைத்தாலும் கொடுமுடியான் தன் மந்திர சக்தி கொண்டு சுலபமாகக் கண்டுபிடித்து விடுவான். அப்படியே அவன் கண்டுபிடிக்கத் தவறினாலும் சில வருடங்கள் கழித்து இதை யாரேனும் கண்டெடுத்தால் அந்த நேரத்தில் அழிவு மிகப் பெரியதாய் இருக்கும். எனவே தான் சொன்னேன் நமக்கு இதை மன்னரிடம் கொண்டு சேர்ப்பதைத் தவிர வேறு வழி இல்லையென்று.”
அவர்களது இயலாமை அவர்களுக்கு எரிச்சலை மூட்டியது.
“மரணம் நம்மை நெருங்குவது போலவே உணர்கிறேன்.” என சலித்துக் கொண்டான் நகுலன்.
“அதை விடு நகுலா. நம்மால் இயலாததைப் பற்றிப் பேசி எவ்விதப் பயனும் இல்லை.”

சிறிது இடைவெளி விட்டு தீரன் தொடர்ந்தான், “நகுலா, நாம் ஆற்றைக் கடந்து அக்கரை சென்று விட்டால் விடிவதற்குள் அரண்மனை சென்று சேர்ந்து விடலாம். மலையைச் சுற்றி சென்றால் நாளை மதியம் தான் அரண்மனை செல்ல முடியும்.”
தீரனுக்கும் நெடு நேரம் பயணம் செல்ல விருப்பம் இல்லாததால் இருவரும் தத்தம் புரவியில் ஏறிக் கொண்டனர். புரவியின் பிடரியை இறுகக் கட்டிக்கொண்டு அமர்ந்து அவைகளை ஆற்றுக்குள் இறக்கினர். ஆற்று நீர் சில்லென்று மேலே பட்டதும் இருவருக்கும் ஒரு நொடி புல்லரித்தது. நீரின் மேல் குதிரைப் பயணம் அவர்களுக்கு சற்று ஆனந்தத்தை அளித்தது. அந்த நேரத்தில் அந்த ஆனந்தம் அவர்களுக்கு அவசியமாகவே இருந்தது. ஆனால் அந்த ஆனந்தம் கூட நெடு நேரம் நிலைக்கவில்லை அவர்களுக்கு. சிறிது சிறிதாக ஆற்று நீரின் வேகம் அதிகரிப்பதை இருவரும் உணர்ந்தார்கள்.
“தீரா, நீரின் வேகம் அதிகமாகிக் கொண்டே போகிறது. குதிரை நீந்துவதற்கு கஷ்டப்படுகிறது. இதற்கு மேல் செல்வது ஆபத்து. கரைக்கு திரும்பி மலையைச் சுற்றியே சென்று விடலாம்.”
“எனக்கும் அதுவே சரியெனப் படுகிறது. வா… திரும்பி விடலாம்.”
ஆனால் திரும்பிச் செல்வதும் அவர்களுக்கு சுலபமாக இல்லை. நீரின் வேகத்தை மீறி திரும்புவது குதிரைகளுக்கு சாத்தியப்படவில்லை. நீரின் போக்கில் செல்லத் துவங்கின குதிரைகள் இரண்டும். தீரனின் குதிரை தன்னை விட்டு விலகிச் சென்று கொண்டிருப்பதைக் கண்ட நகுலன்,
“தீரா, நம்மையும் சுமந்து கொண்டு நீந்துவதற்கு குதிரைகள் திணறுகின்றன. நாம் இறங்கி நீந்திச் சென்று கரையை அடைவோம். குதிரைகள் வந்துசேர்ந்து விடும்.” என அடி வயிற்றிலிருந்து கத்தினான்.

அவனது குரல் தீரனைச் சென்று அடைந்ததா என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. சென்று அடைந்திருந்தாலும் எந்தப் பயனும் இல்லை. திடீரென்று தோன்றிய காட்டாற்று வெள்ளத்தில் தவணை முறையில் கூடிக் கொண்டிருந்த நீரின் வேகம் நொடிப் பொழுதில் உச்சத்தை அடைந்தது. அவர்கள் தானாக குதிரையை விட்டு இறங்கும் முன் காட்டாற்று வெள்ளம் இருவரையும் அடித்து நீருக்குள் தள்ளியது. கண்ணிமைக்கும் நேரத்தில் குதிரைகளை விட்டு வீசி எறியப்பட்ட நகுலனும் தீரனும் ஆற்றின் அடி ஆழம் வரை அமிழ்த்தப்பட்டனர். நீருக்கடியில் போராடிக் கொண்டிருக்கையில் திடீரென ஏதோ நினைவுக்கு வந்தவன் போல் தீரன் தன் இடைக்கச்சில் கை வைக்க மந்திரப் பெட்டியைக் காணவில்லை. உலகத்தின் அழிவிற்கு விதை போட்டுவிட்ட குற்ற உணர்ச்சி அவன் மனதை அரிக்க காட்டாற்று வெள்ளம் அவன் உயிரை அரித்தது. சற்று நேரத்தில் இருவரின் உயிர்களும் நீரில் கரைந்து உடல்கள் சடலங்கலாய் நீர்ப்பரப்பில் மிதந்தன.


மந்திரப் பெட்டி - 2

Saturday, July 10, 2010

கனவினில் ஒரு காதல்

திக்கெட்டும் நீலக்கடல்...
நடுவினில் சிறுதீவு...
சலனமில்லா சமுத்திரக்கரையில்...
மணற்பஞ்சனையில்...
உன்மடித்தலையனையில்...
ஒரு சுகமான மாலைப் பொழுது!

ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறோம்...
ஒலியற்ற மொழியாம் உணர்வுகளின் பரிமாற்றங்கள்!
ஆயிரமாயிரம் எண்ணக்குவியல்கள்!
நெடுநேரம் சென்றிருக்க வேண்டும்...
அமைதியின் அழகு சற்றே சலித்திட
குயிலுன்னை பாடக்கேட்டேன்...
உன்
இதழ்கள் சொட்டும் தேன்துளிகளை
இதமாய் என் செவி சுவைக்க
ஆட்கொண்டது ஓர் ஆனந்தசயனம்!

விழித்திருக்கையில் விழிகளில்
நிறைந்திருந்த நீ
நித்திரை கண்டதும்
நினைவினில் நிறைகிறாய்...
எங்கு செல்கிறோம் நாம்?
தோளோடு தோள் சாய்ந்து...
விரலோடு விரல் பிணைந்து...
இதழோடு இதழ் இணைந்து...
மண்ணுலகம் தாண்டி...
விண்ணுலகும் தாண்டி...
தூரமாய்... வெகு தூரமாய்...
ஐயகோ! யார் நம்மை அழைப்பது?
நீதான் எனை அழைத்திருக்கிறாய்!
“உன்னுயிர் நானிங்கு இருக்கையில்
உன் கற்பனை பயணம் யாரோடு?”
செல்லச் சிணுங்கலில்
செம்மீனாய் ஜொலிக்கிறாய்...

காலதேவனுக்கு ஏனிந்த அவசரம்?
யாரைப் பற்றியும் கவலையில்லை...
எதைப் பற்றியும் சிந்தனையில்லை...
ஓடிக்கொண்டே இருக்கிறான்...
அவன் ஓடுவதோ டல்லாமல்
நம்மையும் சேர்த்து விரட்டுகிறான்!
அதோ...
மாலைக் கதிரவன்
தொடுவானம் நெருங்கிவிட்டான்!

பேசத் தொடங்கவேயில்லை...
பொழுது மட்டும் சாய்ந்துவிட்டது!
நம் சந்திப்பில் இதுவே வாடிக்கையாகிவிட்டது!
விழிகள் நான்கும்
ஏதேதோ பேசிக்கொள்ள...
கற்பனைக் குதிரை
கட்டறுந்து தறிகெட்டோட...
இதழ்களுக்கு மட்டும்
வார்த்தைகளின் தேடலில்
தினம்தினம் தோல்விகள்!

நேரம் சென்றுவிட்டது...
விடைபெற்றுச் செல்ல எத்தனிக்கிறாய்...
மனம் வர மறுக்கிறதே!?
“பேசுவதற்குத்தான் மறந்துபோனோம்...
ஒரு முத்தமாவது கொடுத்துவிட்டுப் போ!
உன் முத்தத்தின் ஈரத்தில்...
அந்த சத்தத்தின் இனிமையில்...
இன்றிரவுத் தனிமையை
கனவோடு கழித்துக்கொள்கிறேன்!”.
என்
கனிவான வேண்டுதலுக்கு
வெட்கத்தை விடையாக்கி
விலகிச் செல்கிறாய்...
உன் கரம் பற்றி இழுத்து
என் விழிகள் கெஞ்ச...
நீ நாணத்தால் கொஞ்சி
இதழ்கள் கேட்ட முத்திரையை
விரல்களில் பதித்துவிட்டு ஓடுகிறாய்!

உன் இதழ்பதிந்த
என் விரல்கள்
காற்றினில் மிதக்க...
விலகியோடும் உன்னை
வெறித்துப் பார்க்கிறேன்!
கரையினில் ஓடிய
உன் பாதங்கள்
கடல்நீரைத் தொட்டதும்...
அழகழகாய் அலைகள் வந்து
உன்
மலர்ப் பாதங்களில்
மணல் துடைத்து
மகிழ்ச்சியோடு வரவேற்கின்றன!
கடலன்னை உன்னை
வாஞ்சையோடு தாங்கிக்கொள்ள...
கொஞ்சிக்கொஞ்சி நடக்கும் உந்தன்
பிஞ்சுப் பாதங்களுக்கு பாரமின்றி
அலைகளெல்லாம் அமைதி காக்க...
நீ செல்வதைக் காணுமென்
விழிகளில் மட்டும் ஏக்கத்தின் தாக்கம்!

உன்னை வரவேற்க
தொடுவானத்தின் வாசலில்
காத்திருக்கிறான் கதிரவன்!
நீ
அவனுள் சென்று மறைய
அவன்
கடலுள் சென்று மறைகிறான்!
“மீண்டும் உனைக் காண்பது எப்போது?”
என்னுள் எழுந்த கேள்விக்கு பதிலாய்
என்னிதயத்தில் ஒலித்தது உன் குரல்...
“அடுத்த நாள் கனவில்!”.