Tuesday, December 08, 2015

ஒற்றுமை போற்றுவோம்!

நான் இறை நம்பிக்கை சற்றே அதிகம் படைத்த சிறுபான்மையோரில் ஒருவன். ஒரு கடவுள், இரு கடவுள் அல்ல... எழுநூறு கோடிகளுக்கும் மேலான கடவுள்களை நம்பும் ஒரு பாமரன்.

"சாதிக்கொரு கடவுள் மதத்திற்கொரு கடவுள் என்பதெல்லாம் வெறும் பேச்சு; மனிதகுலம் முழுமைக்கும் ஒரே கடவுள் என்பதும் வெட்டிப் பேச்சு; ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கடவுள்" என்பதே எம் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை உலகுக்கு உரக்கச் சொல்லிய ஒரு நிகழ்வுதான் சென்னை மழை வெள்ளம். இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் நம் மனதின் அடி ஆழத்தில் புதைந்துள்ள மனிதத்தை வெளிக்கொணர ஒரு இயற்கை பேரிடர் தேவைப்பட்டிருக்கிறது.

ஒரு துன்பம் என்றதும் எதைப் பற்றியும் சிந்தியாமல் உதவிக்கரம் நீட்ட ஓடோடிவரும் நம்மிடையே சாதாரண நாட்களில் உள்ள பிரிவினை ஏன்? மழை வெள்ளத்தில் தன்னுயிரையும் பொருட்படுத்தாது பிற உயிர் காக்க விரைந்த நாம் எதற்கும் உதவா சில பிரச்சனைகளுக்கு உயிரெடுக்கத் துணிவது ஏன்? ஒரு சில மதம் பிடித்த கூட்டங்கள் தன்னல காரணங்களுக்காக செய்யும் அரசியல் மற்றும் தீவிரவாதத்தின் விளைவால் நமக்குள் பிளவுகள் வருவது ஏன்? இதற்கெல்லாம் ஒரே காரணம் - தூண்டுதல். நாம் எளிதில் தூண்டப்பட்டு விடுகிறோம் என்பதே வருந்தத்தக்க உண்மை.

சாதிகளும் மதங்களும் மனித வாழ்க்கைக்கு அவசியமே அல்ல என்பதை மழை நமக்கு உணர்த்திவிட்டது. அரசியலின் பின்னால் ஒளிந்திருக்கும் தீவிரவாதமும் தீவிரவாதத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலுமே சாதி மதங்கள் இன்னும் அழியாமலிருக்க காரணம். இனியேனும் விழித்துக் கொள்வோம். நம்மிடையே வேற்றுமை தூண்டப்படும்போது நமக்கு உதவிக்கரம் நீட்டியோரை நினைவில் கொள்வோம். ஒற்றுமை போற்றுவோம்.

மனிதனின் வாழ்வு தன்னை மதம் கவ்வும்! மனிதமே என்றும் வெல்லும்!

Saturday, October 03, 2015

புலி - என் பார்வை

ஆகாயத்தில் தான் நட்சத்திரங்களே தவிர நட்சத்திரங்களுக்கு ஆகாயம் இல்லை. நட்சத்திர நடிகர்களுக்காக கதை மற்றும் காட்சிகள் அமைத்ததால் ஏற்பட்ட விபரீதமே இந்த புலி.

நமது டீஆர் சொன்ன பல்லாயிரம் புலிகளில் எந்தப் புலியும் இல்லாமல் வெறும் பல்லிழந்த புலியாய் இப்படம் காட்சி தருவதற்கு முதற்காரணம் இதுவே. "அட" போட வைக்கும் விஷயங்கள் சில படத்தில் இருந்தாலும் கூடவே "ஆனால்" பல போட வேண்டியிருப்பது படத்தின் பெரிய பலவீனம். அதற்காக சமூக ஊடகங்களில் கழுவி கழுவி ஊற்றும் அளவுக்கு மொத்தமாக குப்பை என்று புலியை ஒதுக்கி விடலாமா என்றால் சற்றே யோசிக்க வேண்டும். இப்படத்தை முழுக்க முழுக்க குழந்தைகள் படமாக எடுத்திருந்தால் ரசித்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

பேசும் பறவைகள், குள்ள மனிதர்கள், வேதாள உலகம் என குழந்தைகளைக் கவரும் அம்சங்கள் அதிகமாகவே உள்ளன. ஆனால் நாயகிகளின் கவர்ச்சி உடைகளும் நடனங்களும் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மேலும் இரண்டாம் பாதியில் சுத்தமாக ஃபாண்டசி படம் என்பதையே மொத்தமாக மறந்து நாயகனின் விருப்பு வெறுப்பு மற்றும் எதிர்கால திட்டங்களுக்காக காட்சிகள் மற்றும் வசனங்களை அமைத்ததில் படத்தின் தோல்வி உறுதியாகி விட்டது.

இன்றைய இயக்குனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ரசிகர்களின் ரசனை மாற்றம். தமிழ் திரைப்பட ரசிகர்கள் வெகுவாக மாறி விட்டார்கள். ஒரு படத்திற்கு சீரிய இடைவெளியில் பாடல்களும் சண்டைகளும் இனி தேவையில்லை. குத்துப் பாடல்களுக்கும் "குத்து" வசனங்களுக்கும் இனி அவசியமில்லை. அறுசுவை உணவை அரைகுறையாக படைத்தால் வெற்றி என்பது பழைய கதை. படத்தைத் தரமாக மக்களுக்கு படைக்க என்ன தேவையோ அதை செய்தால் மட்டுமே போதுமானது. இதைச் செய்வதற்கு முழுமையாக தவறிவிட்டது புலி. அதிலும் புலி வேந்தனின் குட்டி ஃப்ளாஷ்பேக் அரசியல் அபத்தம்!

இசையைப் பற்றி பேச வேண்டுமென்றால் இது இயக்குனரின் பிழையா அல்லது இசையமைப்பாளரின் பிழையா என சிந்திக்க வேண்டியுள்ளது. நமது டிஎஸ்பிக்கு ஒரேயொரு வகை இசை தான் தெரியும் போல... படத்தோடு சிறிதும் ஒட்டாத பாடல்களும் பின்னணி இசையும் படம் முழுதும் நெருடலாகவே இருக்கிறது. இதை இயக்குனராவது உணர்ந்து வேறு யாரையேனும் அணுகி இருக்கலாம்.

ஒளிப்பதிவு, வரைகலை (கிராபிக்ஸ்) காட்சிகள், தம்பி ராமையாவின் நகைச்சுவை, நட்சத்திரப் பட்டாளம் (குறிப்பாக ஸ்ரீதேவி & சுதீப்) என ரசிக்கக் கூடிய விஷயங்கள் சில நிச்சயம் இருக்கின்றன. ஆனால் முடிவில் குறைகள் நிறைகளை மறைத்து விடுகின்றன.

Wednesday, September 02, 2015

போதனை... சாதனை!

களிமண் மூளை
கற்றதன் அளவு
கைமண் என்றார்...
களவைக் கற்று
மறந்திட மறந்து
புரிந்திடும் கேடு
பெருங்கடல் அளவு!

அன்னையும் பிதாவும்
முன்னெறி தெய்வம்
தொழுதிடு என்றார்...
முதியவர் ஆயிரம்
விதியினை நொந்து
கதியென்ன புரியாது
அழுதிட விளைந்தார்!

வலக்கை அளிப்பது
இடக்கை அறிவது
இழுக்கே என்றார்...
அறிக்கை அளித்து
பகட்டை தேடாது
எச்சிற் கைகளில்
ஏழை(யை) ஓட்டார்!

மானம் போயின்
மான்போல் மாய்வர்
மானிடர் என்றார்...
மனம்போல் வாழ்தல்
மாண்பென் றானபின்
மானமும் ஈனமும்
மண்ணுக் கிரையே!

அன்பிலி எல்லாம்
என்பிலி போல
எரிவர் என்றார்...
அன்பிலி அறனிலி
பண்பிலி வாழினும்
பணமிலி மட்டுமே
பயனிலி ஆனார்!

நேர்மை நாணயம்
கண்ணியம் யாவும்
கற்றிடு என்றார்...
நன்மை தீமை
வேற்றுமை அறியா
கலியுகம் இதுவே
பிழைத்திடு வீரோ?