Saturday, May 07, 2016

தேர்தல் 2016 - யாருக்கு ஓட்டு ?

சம்பந்தப்பட்டவர்களுக்கு சில கேள்விகள்...

அம்மா!
1. ஐந்து வருடம் போராடியும் தடையில்லா மின்சாரம் கற்பனையாகவே இருக்கையில் விலையில்லா மின்சாரம் சாத்தியமா? அப்படியே செய்தாலும் அதனால் ஏற்படும் நஷ்டம் தடையில்லா மின்சாரம் என்பதை வெறும் கனவாகவே மாற்றி விடாதா?
2. ஆட்சிக் காலத்தில் மதுவிலக்கைப் பற்றி மூச்சு கூட விடாமல் இருந்துவிட்டு தேர்தல் என்றதும் அறிவிப்பில் மதுவிலக்கை சேர்ப்பது மக்களை ஏமாற்றும் செயலா?
3. இலவசங்களுக்கு எதிராக பலர் போர்க்கொடி தூக்கும் காலத்தில் வெறும் இலவசங்களையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருப்பது தமிழ் மக்களை அவமானப்படுத்துவது போல் ஆகாதா?
4. ஆடம்பரத் தேவைகளை இன்று இலவசமாய்ப் பெற்றால் அடிப்படைத் தேவைகளின் விலை நாளை விண்ணை நோக்கி உயரும் என்று புரிந்து கொள்ள முடியாத பாவிகள் எம்மக்கள்! ஆனால் அவர்களை ஓட்டுக்காக ஏமாற்றாமல் அவரவர் தேவைகளை அவரவரே பூர்த்தி செய்யும் அளவுக்கு வாழ்வாதாரத்தை உயற்றும் திட்டங்கள் போடுவது அரசின் கடமை அல்லவா?
ஓட்டை விலை கொடுத்து வாங்கி ஏமாற்றத்தை இலவசமாய்க் கொடுக்கும் உங்களுக்கு நாங்கள் ஏன் ஓட்டளிக்க வேண்டும்?

அய்யா!
1. அரசு மதுவிலக்கை அமல்படுத்தினால் உங்கள் கட்சியின் மது ஆலைகள் மூடப்படும் என்று வாய்ச்சவடால் பேசும் நீங்கள் மக்கள் மீது உண்மையான அக்கறையிருந்தால் ஆலைகளை மூடிவிட்டு அல்லவா பிரச்சாரத்திற்கு கிளம்பியிருக்க வேண்டும்?
2. ஆளுங்கட்சியை மேடைக்கு மேடை பதம் பார்க்கும் உங்களுக்கு நீங்கள் சொல்லும் அனைத்து குற்றங்களும் பாவங்களும் உங்கள் ஆட்சியிலும் இருந்தது என்பது கொஞ்சம் கூட உரைக்கவில்லையா?
3. தலைமை தொடங்கி கடைநிலை வரையில் நிலைமை எதுவுமே மாறாத உங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும்?
மீண்டும் உங்களுக்கு நாங்கள் ஏன் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்கு ஒரேயொரு நியாயமான காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம்?

மக்கள்!
வேறு யார் வந்து என்ன சாதிக்க போகிறார்கள் என்று யோசிக்காமல் இவ்விரு கட்சிகளை விடுத்து புதிதாய் ஒருவருக்கு வாய்ப்பளித்து நடப்பதைப் பார்க்கலாமே! எப்படியும் இவர்களால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இன்னாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பது இங்கே கோரிக்கை அல்ல... சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்! எனக்கு தெரிந்ததோர் சின்னம் இதுவே என்று மீண்டும் ஒரு குருடனாய், செவிடனாய், மூடனாய் சென்று கையிலும் முகத்திலும் கரியை பூசிக்கொள்ளாமல் இம்முறையாவது நமது வளர்ச்சியின் முத்திரையை விரலில் இட்டு வருவோம்!

Tuesday, December 08, 2015

ஒற்றுமை போற்றுவோம்!

நான் இறை நம்பிக்கை சற்றே அதிகம் படைத்த சிறுபான்மையோரில் ஒருவன். ஒரு கடவுள், இரு கடவுள் அல்ல... எழுநூறு கோடிகளுக்கும் மேலான கடவுள்களை நம்பும் ஒரு பாமரன்.

"சாதிக்கொரு கடவுள் மதத்திற்கொரு கடவுள் என்பதெல்லாம் வெறும் பேச்சு; மனிதகுலம் முழுமைக்கும் ஒரே கடவுள் என்பதும் வெட்டிப் பேச்சு; ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கடவுள்" என்பதே எம் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை உலகுக்கு உரக்கச் சொல்லிய ஒரு நிகழ்வுதான் சென்னை மழை வெள்ளம். இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் நம் மனதின் அடி ஆழத்தில் புதைந்துள்ள மனிதத்தை வெளிக்கொணர ஒரு இயற்கை பேரிடர் தேவைப்பட்டிருக்கிறது.

ஒரு துன்பம் என்றதும் எதைப் பற்றியும் சிந்தியாமல் உதவிக்கரம் நீட்ட ஓடோடிவரும் நம்மிடையே சாதாரண நாட்களில் உள்ள பிரிவினை ஏன்? மழை வெள்ளத்தில் தன்னுயிரையும் பொருட்படுத்தாது பிற உயிர் காக்க விரைந்த நாம் எதற்கும் உதவா சில பிரச்சனைகளுக்கு உயிரெடுக்கத் துணிவது ஏன்? ஒரு சில மதம் பிடித்த கூட்டங்கள் தன்னல காரணங்களுக்காக செய்யும் அரசியல் மற்றும் தீவிரவாதத்தின் விளைவால் நமக்குள் பிளவுகள் வருவது ஏன்? இதற்கெல்லாம் ஒரே காரணம் - தூண்டுதல். நாம் எளிதில் தூண்டப்பட்டு விடுகிறோம் என்பதே வருந்தத்தக்க உண்மை.

சாதிகளும் மதங்களும் மனித வாழ்க்கைக்கு அவசியமே அல்ல என்பதை மழை நமக்கு உணர்த்திவிட்டது. அரசியலின் பின்னால் ஒளிந்திருக்கும் தீவிரவாதமும் தீவிரவாதத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலுமே சாதி மதங்கள் இன்னும் அழியாமலிருக்க காரணம். இனியேனும் விழித்துக் கொள்வோம். நம்மிடையே வேற்றுமை தூண்டப்படும்போது நமக்கு உதவிக்கரம் நீட்டியோரை நினைவில் கொள்வோம். ஒற்றுமை போற்றுவோம்.

மனிதனின் வாழ்வு தன்னை மதம் கவ்வும்! மனிதமே என்றும் வெல்லும்!

Saturday, October 03, 2015

புலி - என் பார்வை

ஆகாயத்தில் தான் நட்சத்திரங்களே தவிர நட்சத்திரங்களுக்கு ஆகாயம் இல்லை. நட்சத்திர நடிகர்களுக்காக கதை மற்றும் காட்சிகள் அமைத்ததால் ஏற்பட்ட விபரீதமே இந்த புலி.

நமது டீஆர் சொன்ன பல்லாயிரம் புலிகளில் எந்தப் புலியும் இல்லாமல் வெறும் பல்லிழந்த புலியாய் இப்படம் காட்சி தருவதற்கு முதற்காரணம் இதுவே. "அட" போட வைக்கும் விஷயங்கள் சில படத்தில் இருந்தாலும் கூடவே "ஆனால்" பல போட வேண்டியிருப்பது படத்தின் பெரிய பலவீனம். அதற்காக சமூக ஊடகங்களில் கழுவி கழுவி ஊற்றும் அளவுக்கு மொத்தமாக குப்பை என்று புலியை ஒதுக்கி விடலாமா என்றால் சற்றே யோசிக்க வேண்டும். இப்படத்தை முழுக்க முழுக்க குழந்தைகள் படமாக எடுத்திருந்தால் ரசித்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

பேசும் பறவைகள், குள்ள மனிதர்கள், வேதாள உலகம் என குழந்தைகளைக் கவரும் அம்சங்கள் அதிகமாகவே உள்ளன. ஆனால் நாயகிகளின் கவர்ச்சி உடைகளும் நடனங்களும் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மேலும் இரண்டாம் பாதியில் சுத்தமாக ஃபாண்டசி படம் என்பதையே மொத்தமாக மறந்து நாயகனின் விருப்பு வெறுப்பு மற்றும் எதிர்கால திட்டங்களுக்காக காட்சிகள் மற்றும் வசனங்களை அமைத்ததில் படத்தின் தோல்வி உறுதியாகி விட்டது.

இன்றைய இயக்குனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ரசிகர்களின் ரசனை மாற்றம். தமிழ் திரைப்பட ரசிகர்கள் வெகுவாக மாறி விட்டார்கள். ஒரு படத்திற்கு சீரிய இடைவெளியில் பாடல்களும் சண்டைகளும் இனி தேவையில்லை. குத்துப் பாடல்களுக்கும் "குத்து" வசனங்களுக்கும் இனி அவசியமில்லை. அறுசுவை உணவை அரைகுறையாக படைத்தால் வெற்றி என்பது பழைய கதை. படத்தைத் தரமாக மக்களுக்கு படைக்க என்ன தேவையோ அதை செய்தால் மட்டுமே போதுமானது. இதைச் செய்வதற்கு முழுமையாக தவறிவிட்டது புலி. அதிலும் புலி வேந்தனின் குட்டி ஃப்ளாஷ்பேக் அரசியல் அபத்தம்!

இசையைப் பற்றி பேச வேண்டுமென்றால் இது இயக்குனரின் பிழையா அல்லது இசையமைப்பாளரின் பிழையா என சிந்திக்க வேண்டியுள்ளது. நமது டிஎஸ்பிக்கு ஒரேயொரு வகை இசை தான் தெரியும் போல... படத்தோடு சிறிதும் ஒட்டாத பாடல்களும் பின்னணி இசையும் படம் முழுதும் நெருடலாகவே இருக்கிறது. இதை இயக்குனராவது உணர்ந்து வேறு யாரையேனும் அணுகி இருக்கலாம்.

ஒளிப்பதிவு, வரைகலை (கிராபிக்ஸ்) காட்சிகள், தம்பி ராமையாவின் நகைச்சுவை, நட்சத்திரப் பட்டாளம் (குறிப்பாக ஸ்ரீதேவி & சுதீப்) என ரசிக்கக் கூடிய விஷயங்கள் சில நிச்சயம் இருக்கின்றன. ஆனால் முடிவில் குறைகள் நிறைகளை மறைத்து விடுகின்றன.

Wednesday, September 02, 2015

போதனை... சாதனை!

களிமண் மூளை
கற்றதன் அளவு
கைமண் என்றார்...
களவைக் கற்று
மறந்திட மறந்து
புரிந்திடும் கேடு
பெருங்கடல் அளவு!

அன்னையும் பிதாவும்
முன்னெறி தெய்வம்
தொழுதிடு என்றார்...
முதியவர் ஆயிரம்
விதியினை நொந்து
கதியென்ன புரியாது
அழுதிட விளைந்தார்!

வலக்கை அளிப்பது
இடக்கை அறிவது
இழுக்கே என்றார்...
அறிக்கை அளித்து
பகட்டை தேடாது
எச்சிற் கைகளில்
ஏழை(யை) ஓட்டார்!

மானம் போயின்
மான்போல் மாய்வர்
மானிடர் என்றார்...
மனம்போல் வாழ்தல்
மாண்பென் றானபின்
மானமும் ஈனமும்
மண்ணுக் கிரையே!

அன்பிலி எல்லாம்
என்பிலி போல
எரிவர் என்றார்...
அன்பிலி அறனிலி
பண்பிலி வாழினும்
பணமிலி மட்டுமே
பயனிலி ஆனார்!

நேர்மை நாணயம்
கண்ணியம் யாவும்
கற்றிடு என்றார்...
நன்மை தீமை
வேற்றுமை அறியா
கலியுகம் இதுவே
பிழைத்திடு வீரோ?

Tuesday, April 08, 2014

யார் தலையில் மண்?

செய்தி: யுவராஜ் வீடு தாக்கப்பட்டது!

நான்: நல்லா வேணும். ஆட்டமா ஆடினான். ஃபைனல்ல வந்து தடவிட்டு இருந்தான்.
மனசாட்சி: தம்பி... நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?
நான்: வந்துட்டியா... வேண்டாம்னா விடவா போற? கேட்டுத் தொல!
மனசாட்சி: நீ லூசு தானே!?
நான்: (அனல் பறக்க) என்ன சொன்ன?
மனசாட்சி: பின்ன என்னடா? எது எதுக்கு கல்லெடுக்கணும்னு ஒரு விவஸ்தை இல்ல!?
நான்: எத்தனை கோடி கிரிக்கெட் ஃபேன்ஸ ஏமாத்தி இருக்கான்... இதுக்கு கல்லெடுக்காம வேற எதுக்கு எடுக்கணும்?
மனசாட்சி: அட முட்டாப் பயலுகளா... இது ஒரு விளையாட்டுடா! தோக்கிறதும் ஜெயிக்கிறதும் சகஜம். இத்தனை கோடி விசிறிகள ஏமாத்திட்டான்னு குதிக்கிறீங்களே... உங்க நாட்டுல உள்ள அத்தனை கோடி பேரையும் அரசியல்வாதி போர்வையில இருந்துகிட்டு எத்தனையோ பேர் எத்தனையோ வருஷமா ஏமாத்துறாங்களே... அங்கெல்லாம் உங்களோட ஒரு கல் கூட பாயலியே... ஏன்?
நான்: (அவங்கள எல்லாம் அடிச்சா திருப்பி அடிப்பானுங்களே... அவ்வ்வ்)
மனசாட்சி: நீ பேசமாட்ட டா... நானே சொல்றேன். அங்கெல்லாம் வாலாட்ட பயம்... உங்களுக்கு செலிபிரிட்டிஸ் தான இளிச்சவாயனுங்க!
நான்: அப்படினு இல்ல... வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு மேட்ச் பார்க்கும் போது இப்படி விளையான்டா கோபம் வராதா?
மனசாட்சி: நீ வேலை வெட்டிய விட்டுட்டு மேட்ச் பார்த்தது அவர் தப்பா? இல்ல உன் கை கால்ல விழுந்து அவர் உன்ன மேட்ச் பார்க்க கூப்பிட்டாரா?
நான்: (ஆரம்பிச்சுட்டான்யா... இனி நம்மள கற்பழிக்காம விட மாட்டானே...)
மனசாட்சி: இதே யுவராஜ் ஆஸ்திரேலியா கூட அறுபது ரன் எடுத்தப்ப பல்ல இளிச்சிட்டு பார்த்த இல்ல...
நான்: ஆ... ஆ... ஆமா!
மனசாட்சி: நீங்க இங்க இருக்கிற அவங்க வீட்டுல போய் அட்டகாசம் பண்ணிட்டு இருப்பீங்க... இதையெல்லாம் மறந்துட்டு வீட்ட பத்தி கவலப்படாம அவங்க வெளிநாட்டுல போய் உங்களுக்கு எல்லா ஆட்டத்துலயும் நூறு நூறா அடிக்கனுமா?
நான்: நூறெல்லாம் வேண்டாம்... ஒரு அம்பது அறுபது போதும்.
மனசாட்சி: செருப்பால அடிப்பேன்.
நான்: ஆத்தீ...!
மனசாட்சி: தெரியாமத்தான் கேக்குறேன்... நேத்து ஒழுங்கா விளையாடலேன்னு போய் வீட்ட உடச்சுட்டீங்க... நாளைக்கே ஒரு மேட்ச் நல்லா விளையாடிட்டா உடைச்ச வீட்ட சரி பண்ணி குடுப்பீங்களா?
நான்: அது எப்படி முடியும்!!?
மனசாட்சி: பின்ன என்ன.......
நான்: ஹே... நோ பேட் வர்ட்ஸ்!
மனசாட்சி: பின்ன என்ன வெங்காயத்துக்குடா இன்னைக்கு வீட்ட உடைச்சீங்க!?
நான்: அய்யோ ராமா... நானா போய் வீட்டுல கல்லெறிஞ்சேன்?
மனசாட்சி: எறிஞ்சது சரிதான்னு சொன்ன இல்ல.
நான்: ஷ்ஷ்ஷ்.... இப்போ நான் என்ன பண்ணனும்?
மனசாட்சி: யுவராஜ் நேத்து ஒழுங்கா விளையாடாம விட்டதுல யார் தலையிலையும் மண் விழல... சொல்லப் போனா அவர் தலைல அவரே மண் போட்டுகிட்டாருன்னு வேணும்னா சொல்லலாம். ஆனா இந்த அரசியல்வாதிங்க உங்க எல்லாருக்கும் தலையில மட்டுமில்லாம கண்ணுலயும் மண்ண அள்ளி போட்டுட்டு இருக்காங்க.
நான்: ஒத்துக்கிறேன்... நீ சொல்றது அத்தனையும் சரின்னு ஒத்துக்கிறேன்.
மனசாட்சி: ஒத்துக்கிட்டா பத்தாது.... ஒன்னு... ஒவ்வொரு அரசியல்வாதி வீட்டுக்கா போய் கல் எறிங்க... இல்ல யுவராஜ் கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க.
நான்: அய்யா ராசா... அத்தனை கிரிக்கெட் ரசிகர்கள் சார்பாவும் நான் யுவராஜ் கிட்ட மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்கிறேன்... போதுமா?
மனசாட்சி: ம்ம்ம்... வேற என்ன பண்றது? போய் தொல!
நான்: (ஆள விடுறா சாமி...)

Thursday, March 13, 2014

எல்கேஜி விலை லட்ச ரூபாய்! - ஒரு உரையாடல்

"என்ன மச்சி... வர வர டீ சாப்பிடக் கூட வர்றது இல்ல?"
"அதான் சொன்னனேடா... ஒய்ஃப் கன்சீவ் ஆயிருக்கானு"
"ஏன்டா உளறுற? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"
"சேவிங்க்ஸ் ஆரம்பிச்சிருக்கேன்டா... நம்ம பட்ஜெட்ல டீ காபிக்கு எல்லாம் இடம் இல்ல"
"அடடே... இப்போ இருந்தே டெலிவரிக்கு காசு சேர்க்க ஆரம்பிச்சிட்டியா. என்ன இருந்தாலும் டீ குடிக்கிறதக் கூட நிறுத்துறது கொஞ்சம் டூ மச் தான்"
"டெலிவரி எல்லாம் சப்ப மேட்டர் டா. அதுக்கெல்லாம் இன்சூரன்ஸ் இருக்கு"
"பின்ன வேற எதுக்கு?"
"இன்னும் நாலே வருஷத்துல புள்ளைய ஸ்கூல் சேர்க்கணுமே... அதுக்குத் தான்!"
"சும்மா காமெடி பண்ணாத மச்சான்"
"காமெடியா... இந்த காலத்துல புள்ளைகள படிக்க வைக்கிற மாதிரி ஒரு கஷ்டக் கொடும வேற எதுவுமே கிடையாதுடா"
"என்னமோ எல்கேஜி படிக்க புள்ளைய அமெரிக்கா அனுப்பப் போற மாதிரி பேசுற"
"நம்ம ஊருல எல்கேஜி சீட் வாங்குறத விட அமெரிக்காவுக்கு விசா வாங்குறது ஈஸி"
"ஏன்டா இப்படி புலம்புற? அதெல்லாம் நிறைய ஸ்கூல்ஸ் இருக்கு. ரொம்ப ஃபீல் பண்ணாத. மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்"
"கரெக்ட் தான்... ஆனா நமக்கு தண்ணி மட்டும் பத்தாதே. பூஸ்ட் போர்ன்விடா எல்லாம் வேணுமே"
"உனக்கு இன்னைக்கு புரியற மாதிரி பேசவே கூடாதுன்னு ஏதாச்சும் வேண்டுதலா?"
"அதில்லடா... புள்ள பாடம் படிச்சா மட்டும் போதுமா? தமிழ் பேசுதோ இல்லியோ... இங்கிலீஷ் தப்பில்லாம பேசணும். கூடவே ஹிந்தி, ஜெர்மன், ஃப்ரென்ச் அப்டினு ரெண்டு மூணு லாங்குவேஜஸ் தப்பாவாச்சும் பேசணும். பாட கத்துக்கணும். ஆட கத்துக்கணும். நீச்சல் கத்துக்கணும். ஆர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ்னு இன்னும் எவ்வளவோ இருக்கு"
"நீ ஒரு புள்ள தான பெத்துக்கப் போற?"
"உனக்கு புரியல மச்சி... இதெல்லாம் இல்லாம இந்த காலத்துல சர்வைவ் பண்ண முடியாது டா"
"உனக்கு பொறக்கப் போறது குழந்தையா இல்ல குதிரையா? ஏதோ ரேஸ்க்கு ரெடி பண்ற மாதிரி சொல்ற"
"அதெல்லாம் அப்படித்தான்... இதுக்கெல்லாம் வழிவகை செய்ற மாதிரி ஒரு ஸ்கூல்ல புள்ளைய படிக்க வைக்கனும்"
"அதுக்காக இப்போவே டீ குடிக்கிறத நிறுத்தனுமா?"
"டேய்... நம்ம ஊருல படிப்பு என்ன விலை விக்குதுன்னு தெரியாம பேசிட்டு இருக்க. எல்கேஜி சேர்க்கணும்னா டவுன் பேமெண்ட் ஒரு லட்சம் குடுக்கணும். அது போக அப்பப்போ விக்கிறதுக்கு சொத்து பத்தெல்லாம் வேணும்... தெரியும்ல!"
"என்னடா சொல்ற?"
"மச்சி... இப்போலாம் ஸ்கூல் ஃபீஸ் மட்டுமே வருஷத்துக்கு ஒரு லட்சம் வரை ஆகுது. அது போக புக்ஸ், யூனிபார்ம், எக்ஸ்ட்ரா கரிக்குலர் அது இதுன்னு ஒன்றரை லட்சம் ஆயிடும்"
"கேட்டாலே தலை சுத்துதேடா"
"அது மட்டுமில்லாம இதர செலவுகளே லட்சத்த தாண்டும்"
"அது என்னடா இதர செலவுகள்?"
"முதல்ல வீடு! இப்போலாம் ஸ்கூலுக்கு கொல்லப் புறத்துலயே வீடு இருந்தாத் தான் சீட் குடுக்குறாங்க. நல்ல ஸ்கூல்ஸ் எல்லாமே தி நகர், அடையார், வேளச்சேரி மாதிரி இடத்துல தான் இருக்கு. இப்போ நான் குடுக்கிற வீட்டு வாடகை பத்தாயிரம். ஸ்கூல் பக்கத்துல வீடு பார்த்தா மாச வாடகை மட்டுமே குறைஞ்சது பதினெட்டாயிரம் ஆகும். கணக்கு போட்டா இதுவே வருஷத்துக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் அதிகம் ஆகுது"
"இரு மச்சி... கொஞ்சம் தண்ணி குடிச்சிக்கிறேன்"
"குடிச்சிட்டியா... இப்போ இதக் கேளு. கொல்லப் புறத்துல இருந்து முறைவாசல் வர்றதுக்கு... அதான்டா... வீட்டுல இருந்து ஸ்கூலுக்கு வர்றதுக்கு கார் கண்டிப்பா வேணுமாம். அதுக்கு ஒரு லோன் போட்டு அத அஞ்சாறு வருஷத்துக்கு அடைக்கணும்"
"காரா... இதென்ன கூத்தா இருக்கு"
"ஸ்கூலுக்கு போற வழில கூத்தடிச்சிட்டே போலாம்ல"
"அது சரி"
"இதெல்லாம் கூட பரவாயில்ல. புள்ளைக்கு ஸ்கூல்ல சீட் வேணும்னா அம்மா அப்பா ரெண்டு பேருமே படிச்சிருக்கணும். அதுலயும் ஒருத்தராச்சும் கண்டிப்பா மாஸ்டர்ஸ் டிகிரி வச்சிருக்கணுமாம்"
"வா....ட்ட்??"
"உனக்கே தெரியும்... நாங்க ரெண்டு பேருமே BE தான். இன்னைக்கு காலைல தான் கரஸ்ல MS அப்ளை பண்ணிருக்கேன். புள்ளைக்கு படிக்கிற வயசு வர்றதுக்குள்ள நான் படிச்சு முடிக்கணும்"
"கிழிஞ்சுது கத"
"புள்ளைக்கு படிப்பு முடியறதுக்குள்ள மொத்தமும் கிழிஞ்சிடும்"
"என்னோட அட்வைஸ் கேட்டேனா நீ அவசரப்பட வேண்டாம்னு சொல்லுவேன். வெறும் ஆப்வியஸ் சாய்சஸ் மட்டும் தான் நீ பாத்திருக்கனு நெனைக்கிறேன். இன்னும் கொஞ்சம் ரிசர்ச் பண்ணிப் பார்க்கலாம்"
"அதுக்கெல்லாம் டைம் இல்லடா. நேத்தே ஸ்கூல் அட்மிஷனுக்கு அப்ளிகேஷன் சப்மிட் பண்ணிட்டு வந்துட்டேன்."
"புள்ளையே பொறக்கல... அதுக்குள்ள அப்ளிகேஷனா?"
"என்ன பண்ண சொல்ற. ஆளாளுக்கு புலம்புறத கேட்டு பயந்து போய் மனசுல நெனச்சிட்டு இருந்த ஸ்கூலுக்கு டீடெய்ல்ஸ் கேக்கலாம்னு போனேன். அங்க போய் கேட்டா 2018-கு எல்லாம் எப்பவோ அப்ளிகேஷன் வாங்க ஆரம்பிச்சுட்டாங்களாம். இன்னும் ரெண்டே ரெண்டு சீட் தான் பாக்கி இருக்கு... இன்னைக்கே அப்ளிகேஷன் போட்டாத் தான் ஆச்சுன்னு சொல்லிட்டாங்க"
"பொறக்கப் போறது பையனா பொண்ணானு கூட தெரியாம என்னடா அப்ளிகேஷன் ஃபில் பண்ண?"
"அதத்தான் நானும் கேட்டேன். இப்போதைக்கு க்ரெடிட் கார்ட் டீடெய்ல்ஸ் மட்டும் ஃபில் பண்ணுங்க... மிச்சத்த புள்ளைய ஸ்கூலுக்கு சேர்க்க வரும்போது பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க"

--- கப்சிப் ---

Wednesday, March 12, 2014

ஞாபகம் - பாகம் IV

முந்தைய பாகம்


காவலன் தவறவிட்ட துப்பாக்கியை தற்காப்புக்காக எடுத்துக்கொள்ள எத்தனித்து மரத்தை விட்டு இறங்கத் தொடங்கினேன். அப்பொழுது தூரத்தில் ஒரு குரல்... யாரோ ஒருவன் யாரையோ அழைக்கும் குரல் கேட்கிறது. நொடிகள் செல்லச் செல்ல அந்தக் குரல் என்னை நோக்கியே முன்னேறி வருகிறது. "சுரா... சுரா..." என்றழைக்கும் அந்தக் குரலில் ஒரு கவலை தெரிகிறது. அதை விட முக்கியமாக அது எனக்கு பரிச்சயமான குரலாகத் தெரிகிறது. இறுதியாக அந்தக் குரல் "டேய் சுரேந்தர்... எங்கடா இருக்க?" என்று தன் அடிவயிற்றிலிருந்து கத்த ஒரு மின்னல் சென்று என் மூளையைத் தாக்கியது. என் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் வேகம் பிடிப்பதை என்னால் உணர முடிகிறது. ஆம்... அந்தக் குரல் யாரையோ அழைக்கவில்லை... என்னைத் தான் அழைக்கிறது. எனது பெயர் தான் சுரேந்தர். மொத்தமாக இருண்டு கிடந்த என் மூளைக்குள் ஒரு சிறு வெளிச்சம் வரத் தொடங்கியது. உதவி என்னைத் தேடி வருவதை என்னால் உணர முடிகிறது. நிச்சயமாக வருகிறவன் எனது கூட்டத்தைச் சேர்ந்தவனாகத் தான் இருக்க வேண்டும்.

ஆனால் அதே நேரம் காவல்படை எங்களைத் தேடி இதே காட்டுக்குள் அலைந்து கொண்டிருப்பது என்னைத் தேடி வரும் தோழனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. தெரிந்திருந்தால் இப்படி சத்தம் போட்டுக்கொண்டு வரமாட்டான். அவனை உடனடியாக சென்றடைந்து எச்சரிக்கை செய்தாக வேண்டும் என்றெண்ணிக் கொண்டே மரத்திலிருந்து இறங்குகிறேன். இறங்கிக் கொண்டிருக்கும் போதே நண்பன் என்னைப் பார்த்துவிட்டு சுரா என்றழைத்துக்கொண்டே ஓடி வருகிறான்.
"மச்சான்... எங்கடா தொலஞ்சு போன? உன்ன நம்ம ஆலமரத்தடில தான விட்டுட்டு போனேன்."
"ஷ்ஷ்ஷ்... கத்தாத... சுத்தி போலீஸ் இருக்கு"
"போலீசா... என்னடா சொல்ற?"
"ஆமா... காடு முழுக்க நம்மள தேடி அலஞ்சுட்டு இருக்காங்க"
"போலீஸ் நம்மள....."
"எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு கேக்குறியா? எனக்கு தெரில"
"இல்லடா... போலீஸ் நம்மள எதுக்கு கண்டுபிடிக்கனும்னு கேக்குறேன்"
"இங்க பாரு... நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளு"
"சரி சொல்லு"
"எனக்கு தலைல அடி பட்டிருக்கு... நான் மயங்கிக் கிடந்தேன்... மயக்கம் தெளிஞ்சு பாக்கும் போது ஒரு மரத்தடில இருந்தேன்"
"ஆமா... உனக்கு தலைல அடி பட்டிருக்கு... நீ மயங்கி விழுந்த... நான் தான் உன்ன அந்த மரத்தடில விட்டுட்டு போனேன். அதுக்கு என்ன இப்போ?"
"ஹே... அப்போ உனக்கு என்ன அட்டாக் பண்ணது யாருன்னு தெரியுமா?"
"அட்டாக்கா... உனக்கு என்னடா ஆச்சு? முதல்ல ஏன் இவ்ளோ சீரியசா இருக்க?"
"அய்யோ..... எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல. அடி பட்ட அதிர்ச்சில எல்லாமே மறந்துடுச்சு. உன் பேர் கூட எனக்கு ஞாபகம் இல்ல... நீ சொன்னதுக்கு அப்புறம் தான் என் பேரு சுரெந்தர்னே எனக்கு ஞாபகம் வந்துச்சு"
"!!!!????"
"யார் என்ன அடிச்சு போட்டா... எதுக்கு என்னை போலீஸ் துரத்துது... எதுவுமே எனக்கு புரியல"
"இப்போ தான் எனக்கு புரியுது"
"என்ன புரியுது? சொல்லு ப்ளீஸ்... நாம எல்லாம் யாரு? நம்ம எந்த கூட்டத்த சேர்ந்தவங்க? நாம இப்போ என்ன பண்ணிட்டு இருக்கோம்? போலீஸ் ஏன் நம்மள தேடுது?"
"சொல்றேன் மச்சி... நல்லா கேட்டுக்கோ"
"சீக்கிரம் சொல்லு"
"நாம எல்லாம் ஃப்ரென்ட்ஸ்... நம்ம உருப்படாத கூட்டத்த சேர்ந்தவங்க... நாம இப்போ மட்டுமில்ல... எப்பவுமே ஊர் பொறுக்கிட்டு தான் இருப்போம்"
"?????"
"இதுல எனக்கு புரியாத விஷயம் ஒன்னே ஒன்னுதான்... ஊர் பொறுக்கினதுக்கு போய் ஏன் போலீஸ் துரத்துதுன்னு தான் புரியல"
எனக்கு எதுவுமே விளங்கவில்லை. தலையில் அடிபட்ட காட்சி மீண்டும் ஒருமுறை வந்து போகிறது.
"அப்போ எனக்கு எப்படி அடி பட்டுச்சு? யார் என்ன அடிச்சா? என் தலைல ஏதோ இடி விழுந்தா மாதிரி இருக்கே"
"உன் தலைல விழுந்தது இடி இல்ல மச்சி... தேங்கா!"
"தேங்காயா... என்னடா சொல்ற?"
"நாம வழக்கம்போல ஊர் சுத்திட்டு இருந்தப்போ அப்டியே பக்கத்துல இருக்கிற தென்னந்தோப்புக்கு போனோம்..."
நான் சற்று நேரத்திற்கு முன்பு பார்த்த தோப்பு நினைவுக்கு வந்தது.
"... அங்க சுத்திட்டு இருந்தப்போ தரையில கிடந்த ரெண்டு ரூவா காயின எடுக்கிறதுக்கு நீ கீழ குனிஞ்ச... அந்த நேரம் பார்த்து கரெக்டா உன் பின்னந்தலைல ஒரு தேங்கா நச்சுனு வந்து விழுந்துச்சு..."
தலையில் அடிபட்ட காட்சி மறுபடி மனக்கண்ணில் வருகிறது. ஆனால் இம்முறை அதற்கு எப்படி ரியாக்ட் செய்வதென்று தெரியாமல் திருதிருவென முழிக்கிறேன்.
"... அடிபட்ட வேகத்துல நீ அப்டியே மயங்கி கீழ விழுந்துட்ட. எனக்கு என்ன பண்றதுன்னே புரியல. சரி... கைத்தாங்கலா ஊருக்குள்ள தூக்கிட்டு போயிடலாம்னு இந்த காட்டு வழியா கூட்டிட்டு வந்தேன். ஒரு அளவுக்கு மேல என்னால முடியல. சரின்னு உன்ன அந்த ஆலமரத்தடில விட்டுட்டு உதவிக்கு யாரையாச்சும் கூப்பிட்டு வரலாம்னு போனேன். நம்ம பசங்க யாரும் கண்ணுல படல. இதுக்கு மேல விட்டா இருட்டிடும்... நம்மளே கஷ்டப்பட்டு தூக்கிட்டு போயிடலாம்னு ரிடர்ன் வந்து பாத்தா உன்ன காணோம். அதான் அப்படியே தேடிட்டு வர்றேன். நீ என்னடான்னா இங்க நின்னு ஏதோ காமெடி பண்ணிட்டு இருக்க"
கடந்த அரை மணி நேரத்தில் நான் செய்த விஷயங்கலெல்லாம் மூளைக்குள் ஒரு ஹைலைட்ஸ் போல ஒடுகிறது. அதை நினைத்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
"ஒரு தேங்கா விழுந்ததுக்கா இப்படி எல்லாமே எனக்கு மறந்து போயிடுச்சு"
"கவலப்படாத மச்சி... போன வாரம் ஒரு படம் பார்த்தேன். அந்த படத்தோட ஹீரோக்கு தலைல இதே இடத்துல தான் அடிபடும். அவரும் உன்ன மாதிரியே எல்லாத்தையும் மறந்துடுவாரு. ஏன்னா... அந்த இடத்துல தான் மெடுல்லா ஆப்லங்கேட்டா இருக்கு. அங்க அடிபட்டா ஷாக்ல temporary memory loss வரும். கொஞ்ச நேரத்துல அதுவே சரி ஆயிடும்."
கடுப்பில் நண்பனை நான் முறைக்க அவன் சிரித்துக்கொண்டே என் முதுகில் தட்டிக் கொடுக்கிறான்.
"வா... எதுக்கும் போய் ஒரு டாக்டர பார்த்துடலாம்"

ஒரு ரெண்டு ரூபாய்க்கு ஆசைப்பட்டு என்னென்னமோ நடந்துவிட்டதை எண்ணி நொந்துகொண்டே நண்பனுடன் செல்கிறேன். காட்டை விட்டு வெளியே வந்ததும் அங்கே ஒரே களேபரமாக இருப்பதை பார்க்கிறோம். காவல்படை உண்மையில் தேடிக் கொண்டிருந்த ஆள் மாட்டிக்கொண்டான் போலும். யாரோ ஒருவனைக் கைது செய்து போலீஸ் வேனை நோக்கி இழுத்துச் செல்கின்றனர். அதில் ஒரு போலீஸ்காரர் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே செல்கிறார். ஆம்... சிறிது நேரத்திற்கு முன்பு காட்டிற்குள் என்னைப் பார்த்து ஓடி விடு என்று சைகை காட்டிய அதே போலீஸ்காரர் தான். அந்தக் காட்சி மறுபடி மனதில் ஓட, இப்பொழுது தான் உண்மையில் அவர் ஏன் கோபப்பட்டார் என்பது புரிகிறது. "யாரும் பார்ப்பதற்குள் ஓடி விடு" என்று சொல்லவில்லை. "வேலை நேரத்துல இவன் யாருடா குறுக்க... அடச்சீ போ" என்று தான் நினைத்திருந்திருக்க வேண்டும். வெட்கம் என்னைப் பிடுங்கித் திங்க என் நண்பனைப் பார்க்கிறேன். அவனும் சிரித்துக்கொண்டே "ஆல் இன் தி கேம்" என்று கூறி என் தோளில் கை போட்டு அழைத்துச் செல்கிறான்.

நான் திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவன் போல் நண்பனைப் பார்த்து கேட்கிறேன்,
"மச்சி... இன்னும் உன் பேர் என்னனு நீ சொல்லவே இல்லியே"
"ம்ம்ம்... விட்டுத் தள்ளு... உனக்கு குணமாகுற வரைக்கும் நான் மச்சியாவே இருந்துட்டு போறேன்"

சிரித்துக்கொண்டே நண்பன் அழைத்துச் செல்லும் பாதையில் செல்கிறேன்.

--- முற்றும்


எனது முந்தைய கதை முயற்சியைக் காண இங்கே அழுத்தவும்...

ஞாபகம் - பாகம் III

முந்தைய பாகம்


காட்டில் உள்ள ஒட்டு மொத்த மரங்களும் சுழன்று கொண்டே என்னைச் சுற்றி சுற்றி வருவது போல் உணர்கிறேன். தலையில் பட்ட அடியினால் உண்டான வலி நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே போகிறது. தீவிரவாதி என்ற வார்த்தை மட்டும் அசரீரி போல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்ன செய்வதென்றும் தெரியாமல் யாரைக் கேட்பதென்றும் புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறேன். மீண்டும் ஒருமுறை தலையில் யாரோ அடிக்கும் காட்சி மனக்கண்ணில் வந்து போகிறது. எவ்வளவு முயற்சித்து யோசித்தாலும் பயனேதும் இல்லை. ஆனால் எப்படியும் தப்பித்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எனக்குள் வளர்ந்து கொண்டே வருகிறது.

எனக்கு நானே உதவ முடியாதபடி நிராதரவாகவும் காவல் நிலையத்தில் இருந்து தூக்கி வந்த ஆயுதங்களையும் தொலைத்துவிட்டு நிராயுதபாணியாகவும் நிற்கிறேன். அடுத்து என்ன செய்வதென்று சிந்தித்துக் கொண்டிருக்கையில் சருகுகள் சலசலக்கும் சத்தம் கேட்கிறது. சுதாரித்து திரும்பிப் பார்ப்பதற்குள் துப்பாக்கியில் என்னை சரியாக கூறி வைத்தபடி எனக்கெதிரில் காவலன் ஒருவன் நிற்கிறான். எந்த நிமிடமும் என் மேல் குண்டுகள் பாயும் என்ற நிலையில் போலீஸ்காரனை நேருக்கு நேர் பார்த்தபடி நிற்கிறேன். ஆனால் நான் நினைத்ததைப் போன்று அவன் என்னை சுடவும் இல்லை... கைது செய்ய முயற்சிக்கவும் இல்லை. மாறாக காவல்படையில் வேறு யாரும் வருகிறார்களா என்று சுற்றிப் பார்த்து விட்டு என்னை நோக்குகிறான். துப்பாக்கியை இறக்கிவிட்டு என்னைப் பார்த்து ஓடி விடுமாறு சைகை காட்டுகிறான். எனக்கு விஷயம் விளங்குவதற்கு சில நொடிகள் பிடித்தது.

காவல்துறையில் எனக்கு உதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். சரி தான்... யார் உதவியும் இல்லாமல் சிறையில் இருந்து ஆயுதங்களையும் கடத்திக் கொண்டு தப்பிப்பது இயலாத காரியமே! எப்படியோ என்னைப் பற்றி விவரம் கேட்பதற்கு ஒருவன் கிடைத்துவிட்டான் என்ற நிம்மதியுடன் அந்த காவலனை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அந்நேரம் பார்த்து அருகில் யாரோ ஓடி வரும் சத்தம் கேட்க அந்த காவலனின் முகத்தில் கோபம் படர்கிறது. சினத்தில் சிவந்த முகத்துடன் என்னைப் பார்த்து ஓடிப் போ என்று முனங்கிக் கொண்டே மீண்டும் சைகை காட்டுகிறான். அதற்குள் காலடி சத்தமும் மிக அருகில் கேட்கத் தொடங்கியது. எனக்கு உதவிய காவலனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட உடனடியாக மறைந்து கொள்ள இடம் தேடுகிறேன். சற்று தொலைவில் உள்ள புதருக்குள் சென்று ஒளிந்துகொள்ள நினைத்தால் அதற்குள் காலடி சத்தம் மேலும் மேலும் நெருங்கத் தொடங்கியது. சட்டென்று ஒரு யோசனை தோன்ற அருகில் இருந்த மரத்தின் மேல் வேகமாக ஏறி அடர்த்தியான கிளை ஒன்றில் மறைவாக அமர்ந்து கொண்டேன்.

நான் மரத்தில் ஏறி மறைந்து கொள்ளவும் இரு காவலர்கள் அதே மரத்தடிக்கு வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது. வந்தவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டனர். அதில் ஒருவன்,
"இங்க தான சத்தம் வந்தது!?"
"ஆமா... நம்ம human tracking system கூட இந்த இடத்துல மூவ்மென்ட் இருந்ததா காட்டுச்சு"
"So கண்டிப்பா இங்க எங்கயாச்சும் அவன் ஒளிஞ்சிட்டு இருக்க வாய்ப்பு இருக்கு"
"ஒரு நிமிஷம்... மறுபடி tracking system வச்சு பாக்குறேன்"
சொல்லிக்கொண்டே பைனாகுலர் போன்ற ஒன்றை எடுத்து தன் கண்களில் பொருத்திக் கொண்டு சுற்றும் முற்றும் பார்க்கிறான். நல்ல வேளை நான் மரத்தின் மீது ஏறிக் கொண்டேன். தரையில் எங்கு ஒளிந்திருந்தாலும் அந்த மாடர்ன் பைனாகுலர் என்னைக் காட்டிக் கொடுத்திருக்கும். தப்பித்ததை எண்ணி நிம்மதி பெருமூச்சு விடும்போது எனக்கு பின்னாலும் யாரோ என்னோடு சேர்ந்து மூச்சிறைப்பது போல் தோன்றியது.

என்ன சத்தம் என்று திரும்பிப் பார்த்த நொடியில் இதயத்துடிப்பு நின்று போனது. பயத்தில் ஏதோ ஒன்று தொண்டைக்குழியை வந்து அடைத்துக்கொண்டதை உணர்கிறேன். வெள்ளையும் சாம்பலும் கலந்த ஒரு நிறத்தில் சுமார் ஏழு எட்டு அடி நீளமுள்ள ஒரு பாம்பு நான் அமர்ந்திருக்கும் அதே கிளையில் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் நின்று கொண்டிருக்கிறது. கீழ் பாதி உடல் கிளையை சுற்றியிருக்க நன்றாக தலையை தூக்கியபடி மெதுவாக என்னை நோக்கி நகர்ந்து வருகிறது. கீழே இறங்கிவிடலாம் என்று பார்த்தால் இன்னும் அந்த காவலர்கள் மரத்தடியிலேயே நின்று கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவன் மட்டும் "நான் அந்த பக்கம் போய் பாக்குறேன்" என்று கூறிவிட்டு நடக்க மற்றொரு காவலன் இன்னும் பைனாகுலரை கண்களில் மாட்டியபடி இங்கேயே நிற்கிறான். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு நிற்கையில் எங்கிருந்தோ ஒரு தைரியம் வந்தது.

எனது கைகளுக்கு எட்டும் உயரத்தில் ஒரு கிளையில் சிறிய குச்சி ஒன்று பாதி உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. சத்தம் எழுப்பாமல் மெதுவாக கைகளைத் தூக்கி அந்தக் குச்சியை உடைத்து எடுத்துக் கொண்டேன். எந்தக் கடவுளை வழிபடுவது என்று கூடத் தெரியாமல் தப்பித்தால் போதுமென்று பொதுவாக வணங்கிவிட்டு அந்தக் குச்சியை வைத்து பாம்பினை தூக்கினேன். பாம்பு கிளையில் நன்றாக சுற்றிக் கொண்டிருந்ததால் எடுப்பதற்கு கடினமாக இருந்தது. அதன் உடலுக்கும் கிளைக்கும் இடையிலே குச்சியை செலுத்தியதும் அதற்கு கூசியிருக்க வேண்டும். பாம்பு தானாகவே கிளையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நான் கையில் வைத்திருந்த குச்சியில் முழுவதும் ஏறிக்கொண்டது. பாம்பு கிளையை விட்டு வெளிவந்த வேகத்தில் மரத்திலிருந்த சில பறவைகள் ஒரே நேரத்தில் இறகுகளை அடித்துக்கொண்டு பறந்து சென்றன. நான் ஏற்கனவே பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க பறவைகள் திடீரென்று பறந்த சத்தத்தில் கையிலிருந்த குச்சியை நழுவ விட்டுவிட்டேன்.

பறவைகளின் சத்தம் கேட்டு அந்தக் காவலன் பைனாகுலரை கழட்டிவிட்டு மேலே பார்ப்பதற்கும் நான் கையில் வைத்திருந்த குச்சியை நழுவ விடுவதற்கும் நேரம் சரியாக இருந்தது. குச்சியை சுற்றிக் கொண்டிருந்த பாம்பு நேராக சென்று காவலனின் மீது விழ அவன் நிலை குலைந்து போகிறான். கையில் வைத்திருந்த துப்பாக்கியையும் மாடர்ன் பைனாகுலரையும் மரத்தடியிலேயே போட்டுவிட்டு அலறிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான். பாம்பிடம் இருந்து பிழைத்துவிட்ட சந்தோஷத்தோடு ஒரு ஆயுதம் கிடைத்துவிட்ட திருப்தியும் என்னிடம் தெரிகிறது. ஓடிச் சென்ற காவலன் மீண்டும் வருகிறானா என சில நிமிடங்கள் காத்திருந்துவிட்டு மரத்தை விட்டு இறங்க ஆயத்தமானேன். அப்பொழுதுதான் அந்த சத்தம் எனக்கு கேட்கத் தொடங்கியது.


அடுத்த பாகம்

ஞாபகம் - பாகம் II

முந்தைய பாகம்


சைரன் பொருத்திய போலீஸ் ஜீப் அலறிக்கொண்டு முன்னால் வர நீல நிற போலீஸ் வேன் அதனை பின் தொடர்ந்து வருகிறது. நான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் காட்டின் அருகாமையில் வந்து வண்டிகள் நின்றன. உயர்பதவி வகிப்பவர் போன்ற இரு காவலர்கள் ஜீப்பிலிருந்து இறங்கினர். அவர்களின் சைகையை தொடர்ந்து வேனின் பின் கதவைத் திறந்து கொண்டு முதலில் மூன்றடி உயர மோப்ப நாய் கம்பீரமாக இறங்கியது. அதனை சங்கிலியால் பிடித்தபடி காவலர் ஒருவர் இறங்கினார். அவரைத் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய ஒரு போலீஸ் படையே வேனிலிருந்து இறங்கியது. உயர் அதிகாரிகள் ஏதேதோ கட்டளைகள் பிறப்பிக்க வரிசையில் நின்ற படையினர் அதை கவனத்துடன் கேட்டுக் கொண்டனர். கடைசியாக காட்டை நோக்கி கைகளை நீட்டி அதிகாரி ஏதோ சொல்ல மொத்த படையும் காட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தனர். ஒரு அதிகாரியும் ஆயுதம் ஏந்திய இரு காவலர்களும் காட்டுக்கு வெளியே கண்காணிப்பிற்கு நின்றனர். வசமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்த நான் வேறு வழியின்றி மறைவிடம் தேடி மீண்டும் காட்டுக்குள்ளே செல்லத் தொடங்கினேன்.

எந்த நிமிடம் யார் கண்ணில் சிக்குவேன் என்று தெரியாமல் ஒளிந்து கொள்ள இடம் தேடி காட்டுக்குள் ஓடத் தொடங்கினேன். கால்கள் தரையில் ஓடிக் கொண்டிருக்கும் போதே என்னைப் பற்றிய சிந்தனை எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ஆயுதப்படை துரத்தும் அளவுக்கு ஏதோ விபரீதமான மனிதனாக நான் இருக்கிறேன். என்ன செய்துவிட்டு தப்பி ஒடுகிறேன்? ஓடி ஒளிவதைக் காட்டிலும் காரணம் தெரியாமல் ஓடுவது என்னை தலையை பிய்க்கச் செய்தது. மீண்டும் ஒருமுறை மூளையை பிழிந்து யோசிக்கிறேன். தலையில் அடிப்பட்ட அந்த நொடி மட்டும் மனக்கண் முன் மின்னல் போல் வந்து போகிறது. ஏதோ பலமான ஆயுதத்தால் தாக்கப்படுகிறேன். ஆனால் யாரால் தாக்கப்படுகிறேன் எனத் தெரியவில்லை. ஆனால் மனதிற்குள் ஒரு குரல், "போலீசிடம் மாட்டி விடாதே... தப்பிச் சென்று விடு" எனக் கூறிக்கொண்டே இருந்தது. ஞாபகங்கள் சிதறிய நிலையில் உள்ளுணர்வை அப்படியே பின்பற்ற வேண்டுமென்று யாரோ சொன்ன ஞாபகம். அதைத்தான் இப்பொழுது நான் செய்து கொண்டிருக்கிறேன்.

சிறிது தூரம் காட்டிற்குள் சென்றபின் ஒளிந்துகொள்ள மறைவான இடம் தேட முடிவு செய்தேன். அப்பொழுது யாரோ எனக்கு அருகாமையில் இருப்பது போல ஒரு உணர்வு தோன்றியது. எனக்கு பின்னாலிருந்து ஏதோ சத்தம் வருகிறது. பதறிப்போய் திரும்பிப் பார்க்கிறேன். நான் முதலில் மயங்கிக் கிடந்த மரத்தை விட தடிமனான வளர்ந்த மரம். ஆம்... சத்தம் மரத்துக்குப் பின்னாலிருந்து தான் வருகிறது. மெதுவாக திரும்பி சென்று மரத்தின் மறைவில் நின்று கொண்டு மறுபுறம் பார்த்தேன். இரத்தம் உறைந்தது போல உணர்ந்தேன். திசை தெரியாமல் காட்டிற்குள் அலைந்ததில் காவல் படையை நோக்கியே வந்து விட்டேன் போலும். அங்கே ஒரு காவலர் துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு தனது ஷூ லேசை கட்டிக் கொண்டு நிற்கிறார். அந்த நொடியில் ஒரு விபரீத எண்ணம் எனக்கு தோன்றியது.

நான் யாரென்று தெரிந்த ஒருவன் கண்முன்னே நிற்கிறான். என்னை பிடிக்க வந்த போலீஸ் என்றாலும் தற்போது கையில் ஆயுதம் இன்றி நிற்கிறான். கூட வந்த காவல் படையில் யாரையும் காணவில்லை. எப்படியாவது இவனை பின்னால் சென்று பிடித்து அவனது துப்பாக்கியை வைத்தே மிரட்டி விவரத்தை சேகரித்து விட்டால் என்ன? நினைத்ததும் வியர்க்க தொடங்கியது. உடலில் லேசான நடுக்கம் தெரிந்தது. ஆனால் இப்பொழுது இவனையும் விட்டு விட்டால் நான் யாரென்று தெரியாமலேயே துப்பாக்கி குண்டுக்கு இரையாகிப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எதிரில் இருக்கும் காவலனை தாக்குவதற்கு முடிவு செய்தேன்.

எப்படி தாக்குவது என்று மனதிற்குள் ஒரு திட்டம் போட்டுக் கொண்டேன். மெதுவாக பின்னால் சென்று என் சட்டையால் முதலில் அவன் முகத்தை மூடி கீழே தள்ளிவிட்டு அவன் சுதாரித்து கத்துவதற்குள் துப்பாக்கியை அவன் நெஞ்சில் குறி வைத்து விடவேண்டும். பின்னர் அவனை சிறிது தொலைவில் உள்ள புதருக்கு இழுத்து சென்று உண்மையை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அவனது போலீஸ் உடையை எடுத்து அணிந்து கொண்டு எப்படியாவது காட்டின் மறுமுனைக்கு சென்று தப்பி விடவேண்டும். திட்டம் சரியாக இருக்கும் என எனக்கு முழுதாக நம்பிக்கை பிறந்ததும் மெதுவாக சட்டையை கழட்டினேன். நாலாபுறமும் ஒரு முறை நன்றாக பார்த்துவிட்டு முதல் அடியை எடுத்து வைத்தேன். அருகே மற்றொரு காலடி சத்தம் கேட்க சட்டென்று திரும்பி வந்து மரத்தின் பின் நின்று கொண்டேன்.

யாரங்கே வருவது? நல்ல வேளை... நான் ரொம்ப தூரம் செல்லவில்லை. அங்கே கையில் தயார் நிலையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு மற்றொரு காவலர் வந்து சேர்ந்தார். இருவரும் பரஸ்பரம் புன்னகையை பரிமாறிக் கொண்டனர். புதிதாக வந்த போலீஸ்காரர் இங்கே இருந்த காவலரிடம்,
"தம்பீ... என்ன இப்படி விளையாட்டு பிள்ளையா இருக்க?"
"இல்ல ஸார்... ஷூ லேஸ் கழண்டுருச்சு... அதான்..."
"சீக்கிரம் பா! ரொம்ப மோசமான ஆள துரத்திட்டு இருக்கோம். எவ்ளோ பெரிய தீவிரவாதின்னு தெரியும்ல"
"தெரியும் ஸார்... இதோ ரெடி ஆயிட்டேன்"
"ஸ்டேஷன்ல இருந்து வேற வெப்பன்ஸ் தூக்கிட்டு ஓடி இருக்கான். எங்க இருந்து எப்படி வந்து அட்டாக் பண்ணுவான்னு தெரியாது"
"எஸ் ஸார்... ஐ ஆம் டன்"
"சரி... நீ அந்த பக்கமா போய் தேடு"
"ஓகே ஸார்"
பேசி முடித்துவிட்டு அவர்கள் ஆளுக்கொரு புறம் செல்ல திகைப்பின் உச்சத்தில் சப்த நாடியும் ஒடுங்கிப் போய் நான் நின்று கொண்டிருக்கிறேன்.


அடுத்த பாகம்

ஞாபகம் - பாகம் I

அடர்ந்த காடு... சுற்றிலும் ஓங்கி உயர்ந்த மரங்கள்... மாலைக் கதிரவனின் கிரணங்கள் மரங்களை கிழித்துக்கொண்டு வந்து சற்றே வெளிச்சத்தை தெளித்துக் கொண்டிருக்கின்றன. ஆள் அரவமற்ற காட்டிற்குள் பறவைகளின் கூச்சல்கள் மட்டுமே குடி கொண்டிருக்கிறது. அங்கே உயர்ந்ததோர் ஆலமரத்தின் தடித்த வேர்களின் நடுவே ஒரு உருவம் முகமும் வயிறும் நிலத்தை உரச சுயநினைவின்றி படுத்திருக்கிறது. சம்பவமோ அசம்பாவிதமோ நடப்பதற்கான அத்தனை அறிகுறிகளும் தெளிவாக தெரிகிறது!

தூக்கத்திலிருந்து விழிக்கிறேன்... இல்லை இல்லை... மயக்கத்திலிருந்து தெளிகிறேன். என் தலைக்குள் யாரோ சுத்தியலால் அடித்துக்கொண்டே இருப்பது போல் அப்படியொரு வலி. கண்களைத் திறக்க முயற்சிக்கிறேன்... முடியவில்லை. மெதுவாக... மிக மெதுவாக கை கால்களை அசைக்கிறேன். யாரோ தாள்களை கசக்குவது போல் என்ன சத்தம் அது? நீண்ட சயனத்திற்கு பிறகு உடல் உறுப்புகள் வேலை செய்ய தொடங்குவது போல் ஒரு உணர்வு. திடீரென்று ஆக்ஸிஜன் வரத்து குறைய வாய் வழியே மூச்சிழுக்கிறேன். மணல் வாய் வழியே சென்று தொண்டைக்குள் அடைத்துக்கொள்ள பதறிப்போய் முழிக்கிறேன். எழுந்திருக்க முயற்சிக்கிறேன்... மீண்டும் அதே சத்தம். சருகுகள் சலசலக்கும் சத்தம். தாள்களும் இல்லை... தாள்களைக் கசக்க ஆட்களும் இல்லை. யாருமற்ற வனாந்தரத்தில் தன்னந்தனியே மயங்கிக் கிடந்திருக்கிறேன்.

இருப்பது எந்த இடமென்று தெரியவில்லை. எப்படி இங்கு வந்தேனென்று தெரியவில்லை. எதனால் மயங்கிக் கிடந்தேனென்று தெரியவில்லை. தலையில் இடிகள் இறங்குவது போன்ற வலிக்கு காரணம் தெரியவில்லை. இன்னும் சற்று சிந்தித்து பார்க்கையில் தான் உணர்கிறேன்... எனக்கு நான் யாரென்றே தெரியவில்லை! மயக்கத்திலிருந்து எழுந்தபோதுதான் புதிதாய் பிறந்ததைப் போன்று வேறெந்த ஞாபகமும் நினைவில் இல்லை. இனம் புரியாத ஒரு பயம் உடல் முழுவதும் பரவத் தொடங்கியது. இருக்கும் இடம், வலிக்கும் வலி என அனைத்தும் மறந்து "நான் யார்?" என்ற ஒரு கேள்வி மட்டுமே மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது.

எவ்வளவு நேரம் சிந்தித்தும் ஒரு பயனும் இல்லை. என் பெயர் கூட நினைவுக்கு வரவில்லை. சிந்தித்து சிந்தித்து சோர்ந்ததுதான் மிச்சம். பயத்திலும் சோர்விலும் நா வறண்டது. சுற்றும் முற்றும் பார்க்கிறேன். முதலில் தண்ணீர் தேடி குடித்துவிட்டு செய்ய வேண்டியதை யோசிக்கலாம் என முடிவு செய்தேன். திக்கு திசை தெரியாமல் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினேன். எவ்வளவு நேரம் நடந்திருப்பேன் என்று தெரியவில்லை. காலெல்லாம் வலி எடுக்கிறதே தவிர செல்வதற்கு வழி ஒன்றும் புலப்படவில்லை. ஒரே இடத்தை சுற்றி சுற்றி வருவது போல் தோன்றியது. ஏதோ ரிசர்வ்ட் ஃபாரெஸ்ட் உள்ளே வந்து மாட்டிக்கொண்டது போல் இருக்கிறது.

மீண்டும் நடக்கத் தொடங்கினேன். மேலும் ஒரு அரை மணி நேர நடைக்கு பிறகு ஒரு ஒளி தெரிந்தது. சற்று தூரத்தில் காடு முடிந்து வெட்டவெளி தொடங்குகிறது. நடையின் வேகத்தைக் கூட்டி வெட்டவெளியை அடைந்தேன். நல்ல வேளை... பயந்தது போல ரிசர்வ்ட் ஃபாரெஸ்டோ அமேசான் ஃபாரெஸ்டோ இல்லை. ஏதோ ஊரோரத்தில் உள்ள காடுதான். அதோ சற்று தொலைவில் ஒரு தென்னந்தோப்பு தெரிகிறது. ஆள் நடமாட்டமும் தெரிகிறது. போய் முதலில் தண்ணீர் கேட்டு குடிக்கலாம் என யோசிக்கையில் தான் அடுத்த பயம் வந்து என்னை தொற்றியது.

நான் யார்? இந்த காட்டிற்குள் நான் அடிபட்டு கிடந்த காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் யார் கண்ணிலும் படுவது ஆபத்தாகுமா? இந்த எண்ணம் மனதில் வந்ததும் எனக்குள் ஒரு தயக்கம் பிறந்தது. முதன்முதலாக என்னைப் பற்றி எனக்குள் ஒரு சந்தேகம் பிறந்தது. உண்மையில் நான் நல்லவன் தானா? இல்லை ஏதேனும் பிரச்னை செய்து யாராலும் விரட்டப்பட்டு காட்டிற்குள் ஓடி ஒளிந்து அடிபட்டு கிடந்தேனா? இந்த எண்ணம் என்னை மேலும் கிலி அடையச் செய்தது. செய்வதறியாது திகைத்துப் போய் ஒரு மரத்தின் மேலே சாய்ந்து நின்று வெறித்துக் கொண்டிருக்கும் போது தான் அதை கவனித்தேன். நான் நினைத்ததை விட பெரிய பிரச்னைகள் என்னை சூழ்ந்திருப்பதை உணர்ந்தேன். அனிச்சையாய் என் கால்கள் மீண்டும் காட்டிற்குள் செல்லத் தொடங்கின.


அடுத்த பாகம்