Wednesday, March 12, 2014

ஞாபகம் - பாகம் III

முந்தைய பாகம்


காட்டில் உள்ள ஒட்டு மொத்த மரங்களும் சுழன்று கொண்டே என்னைச் சுற்றி சுற்றி வருவது போல் உணர்கிறேன். தலையில் பட்ட அடியினால் உண்டான வலி நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே போகிறது. தீவிரவாதி என்ற வார்த்தை மட்டும் அசரீரி போல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்ன செய்வதென்றும் தெரியாமல் யாரைக் கேட்பதென்றும் புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறேன். மீண்டும் ஒருமுறை தலையில் யாரோ அடிக்கும் காட்சி மனக்கண்ணில் வந்து போகிறது. எவ்வளவு முயற்சித்து யோசித்தாலும் பயனேதும் இல்லை. ஆனால் எப்படியும் தப்பித்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எனக்குள் வளர்ந்து கொண்டே வருகிறது.

எனக்கு நானே உதவ முடியாதபடி நிராதரவாகவும் காவல் நிலையத்தில் இருந்து தூக்கி வந்த ஆயுதங்களையும் தொலைத்துவிட்டு நிராயுதபாணியாகவும் நிற்கிறேன். அடுத்து என்ன செய்வதென்று சிந்தித்துக் கொண்டிருக்கையில் சருகுகள் சலசலக்கும் சத்தம் கேட்கிறது. சுதாரித்து திரும்பிப் பார்ப்பதற்குள் துப்பாக்கியில் என்னை சரியாக கூறி வைத்தபடி எனக்கெதிரில் காவலன் ஒருவன் நிற்கிறான். எந்த நிமிடமும் என் மேல் குண்டுகள் பாயும் என்ற நிலையில் போலீஸ்காரனை நேருக்கு நேர் பார்த்தபடி நிற்கிறேன். ஆனால் நான் நினைத்ததைப் போன்று அவன் என்னை சுடவும் இல்லை... கைது செய்ய முயற்சிக்கவும் இல்லை. மாறாக காவல்படையில் வேறு யாரும் வருகிறார்களா என்று சுற்றிப் பார்த்து விட்டு என்னை நோக்குகிறான். துப்பாக்கியை இறக்கிவிட்டு என்னைப் பார்த்து ஓடி விடுமாறு சைகை காட்டுகிறான். எனக்கு விஷயம் விளங்குவதற்கு சில நொடிகள் பிடித்தது.

காவல்துறையில் எனக்கு உதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். சரி தான்... யார் உதவியும் இல்லாமல் சிறையில் இருந்து ஆயுதங்களையும் கடத்திக் கொண்டு தப்பிப்பது இயலாத காரியமே! எப்படியோ என்னைப் பற்றி விவரம் கேட்பதற்கு ஒருவன் கிடைத்துவிட்டான் என்ற நிம்மதியுடன் அந்த காவலனை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அந்நேரம் பார்த்து அருகில் யாரோ ஓடி வரும் சத்தம் கேட்க அந்த காவலனின் முகத்தில் கோபம் படர்கிறது. சினத்தில் சிவந்த முகத்துடன் என்னைப் பார்த்து ஓடிப் போ என்று முனங்கிக் கொண்டே மீண்டும் சைகை காட்டுகிறான். அதற்குள் காலடி சத்தமும் மிக அருகில் கேட்கத் தொடங்கியது. எனக்கு உதவிய காவலனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட உடனடியாக மறைந்து கொள்ள இடம் தேடுகிறேன். சற்று தொலைவில் உள்ள புதருக்குள் சென்று ஒளிந்துகொள்ள நினைத்தால் அதற்குள் காலடி சத்தம் மேலும் மேலும் நெருங்கத் தொடங்கியது. சட்டென்று ஒரு யோசனை தோன்ற அருகில் இருந்த மரத்தின் மேல் வேகமாக ஏறி அடர்த்தியான கிளை ஒன்றில் மறைவாக அமர்ந்து கொண்டேன்.

நான் மரத்தில் ஏறி மறைந்து கொள்ளவும் இரு காவலர்கள் அதே மரத்தடிக்கு வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது. வந்தவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டனர். அதில் ஒருவன்,
"இங்க தான சத்தம் வந்தது!?"
"ஆமா... நம்ம human tracking system கூட இந்த இடத்துல மூவ்மென்ட் இருந்ததா காட்டுச்சு"
"So கண்டிப்பா இங்க எங்கயாச்சும் அவன் ஒளிஞ்சிட்டு இருக்க வாய்ப்பு இருக்கு"
"ஒரு நிமிஷம்... மறுபடி tracking system வச்சு பாக்குறேன்"
சொல்லிக்கொண்டே பைனாகுலர் போன்ற ஒன்றை எடுத்து தன் கண்களில் பொருத்திக் கொண்டு சுற்றும் முற்றும் பார்க்கிறான். நல்ல வேளை நான் மரத்தின் மீது ஏறிக் கொண்டேன். தரையில் எங்கு ஒளிந்திருந்தாலும் அந்த மாடர்ன் பைனாகுலர் என்னைக் காட்டிக் கொடுத்திருக்கும். தப்பித்ததை எண்ணி நிம்மதி பெருமூச்சு விடும்போது எனக்கு பின்னாலும் யாரோ என்னோடு சேர்ந்து மூச்சிறைப்பது போல் தோன்றியது.

என்ன சத்தம் என்று திரும்பிப் பார்த்த நொடியில் இதயத்துடிப்பு நின்று போனது. பயத்தில் ஏதோ ஒன்று தொண்டைக்குழியை வந்து அடைத்துக்கொண்டதை உணர்கிறேன். வெள்ளையும் சாம்பலும் கலந்த ஒரு நிறத்தில் சுமார் ஏழு எட்டு அடி நீளமுள்ள ஒரு பாம்பு நான் அமர்ந்திருக்கும் அதே கிளையில் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் நின்று கொண்டிருக்கிறது. கீழ் பாதி உடல் கிளையை சுற்றியிருக்க நன்றாக தலையை தூக்கியபடி மெதுவாக என்னை நோக்கி நகர்ந்து வருகிறது. கீழே இறங்கிவிடலாம் என்று பார்த்தால் இன்னும் அந்த காவலர்கள் மரத்தடியிலேயே நின்று கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவன் மட்டும் "நான் அந்த பக்கம் போய் பாக்குறேன்" என்று கூறிவிட்டு நடக்க மற்றொரு காவலன் இன்னும் பைனாகுலரை கண்களில் மாட்டியபடி இங்கேயே நிற்கிறான். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு நிற்கையில் எங்கிருந்தோ ஒரு தைரியம் வந்தது.

எனது கைகளுக்கு எட்டும் உயரத்தில் ஒரு கிளையில் சிறிய குச்சி ஒன்று பாதி உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. சத்தம் எழுப்பாமல் மெதுவாக கைகளைத் தூக்கி அந்தக் குச்சியை உடைத்து எடுத்துக் கொண்டேன். எந்தக் கடவுளை வழிபடுவது என்று கூடத் தெரியாமல் தப்பித்தால் போதுமென்று பொதுவாக வணங்கிவிட்டு அந்தக் குச்சியை வைத்து பாம்பினை தூக்கினேன். பாம்பு கிளையில் நன்றாக சுற்றிக் கொண்டிருந்ததால் எடுப்பதற்கு கடினமாக இருந்தது. அதன் உடலுக்கும் கிளைக்கும் இடையிலே குச்சியை செலுத்தியதும் அதற்கு கூசியிருக்க வேண்டும். பாம்பு தானாகவே கிளையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நான் கையில் வைத்திருந்த குச்சியில் முழுவதும் ஏறிக்கொண்டது. பாம்பு கிளையை விட்டு வெளிவந்த வேகத்தில் மரத்திலிருந்த சில பறவைகள் ஒரே நேரத்தில் இறகுகளை அடித்துக்கொண்டு பறந்து சென்றன. நான் ஏற்கனவே பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க பறவைகள் திடீரென்று பறந்த சத்தத்தில் கையிலிருந்த குச்சியை நழுவ விட்டுவிட்டேன்.

பறவைகளின் சத்தம் கேட்டு அந்தக் காவலன் பைனாகுலரை கழட்டிவிட்டு மேலே பார்ப்பதற்கும் நான் கையில் வைத்திருந்த குச்சியை நழுவ விடுவதற்கும் நேரம் சரியாக இருந்தது. குச்சியை சுற்றிக் கொண்டிருந்த பாம்பு நேராக சென்று காவலனின் மீது விழ அவன் நிலை குலைந்து போகிறான். கையில் வைத்திருந்த துப்பாக்கியையும் மாடர்ன் பைனாகுலரையும் மரத்தடியிலேயே போட்டுவிட்டு அலறிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான். பாம்பிடம் இருந்து பிழைத்துவிட்ட சந்தோஷத்தோடு ஒரு ஆயுதம் கிடைத்துவிட்ட திருப்தியும் என்னிடம் தெரிகிறது. ஓடிச் சென்ற காவலன் மீண்டும் வருகிறானா என சில நிமிடங்கள் காத்திருந்துவிட்டு மரத்தை விட்டு இறங்க ஆயத்தமானேன். அப்பொழுதுதான் அந்த சத்தம் எனக்கு கேட்கத் தொடங்கியது.


அடுத்த பாகம்

No comments: