Wednesday, March 12, 2014

ஞாபகம் - பாகம் II

முந்தைய பாகம்


சைரன் பொருத்திய போலீஸ் ஜீப் அலறிக்கொண்டு முன்னால் வர நீல நிற போலீஸ் வேன் அதனை பின் தொடர்ந்து வருகிறது. நான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் காட்டின் அருகாமையில் வந்து வண்டிகள் நின்றன. உயர்பதவி வகிப்பவர் போன்ற இரு காவலர்கள் ஜீப்பிலிருந்து இறங்கினர். அவர்களின் சைகையை தொடர்ந்து வேனின் பின் கதவைத் திறந்து கொண்டு முதலில் மூன்றடி உயர மோப்ப நாய் கம்பீரமாக இறங்கியது. அதனை சங்கிலியால் பிடித்தபடி காவலர் ஒருவர் இறங்கினார். அவரைத் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய ஒரு போலீஸ் படையே வேனிலிருந்து இறங்கியது. உயர் அதிகாரிகள் ஏதேதோ கட்டளைகள் பிறப்பிக்க வரிசையில் நின்ற படையினர் அதை கவனத்துடன் கேட்டுக் கொண்டனர். கடைசியாக காட்டை நோக்கி கைகளை நீட்டி அதிகாரி ஏதோ சொல்ல மொத்த படையும் காட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தனர். ஒரு அதிகாரியும் ஆயுதம் ஏந்திய இரு காவலர்களும் காட்டுக்கு வெளியே கண்காணிப்பிற்கு நின்றனர். வசமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்த நான் வேறு வழியின்றி மறைவிடம் தேடி மீண்டும் காட்டுக்குள்ளே செல்லத் தொடங்கினேன்.

எந்த நிமிடம் யார் கண்ணில் சிக்குவேன் என்று தெரியாமல் ஒளிந்து கொள்ள இடம் தேடி காட்டுக்குள் ஓடத் தொடங்கினேன். கால்கள் தரையில் ஓடிக் கொண்டிருக்கும் போதே என்னைப் பற்றிய சிந்தனை எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ஆயுதப்படை துரத்தும் அளவுக்கு ஏதோ விபரீதமான மனிதனாக நான் இருக்கிறேன். என்ன செய்துவிட்டு தப்பி ஒடுகிறேன்? ஓடி ஒளிவதைக் காட்டிலும் காரணம் தெரியாமல் ஓடுவது என்னை தலையை பிய்க்கச் செய்தது. மீண்டும் ஒருமுறை மூளையை பிழிந்து யோசிக்கிறேன். தலையில் அடிப்பட்ட அந்த நொடி மட்டும் மனக்கண் முன் மின்னல் போல் வந்து போகிறது. ஏதோ பலமான ஆயுதத்தால் தாக்கப்படுகிறேன். ஆனால் யாரால் தாக்கப்படுகிறேன் எனத் தெரியவில்லை. ஆனால் மனதிற்குள் ஒரு குரல், "போலீசிடம் மாட்டி விடாதே... தப்பிச் சென்று விடு" எனக் கூறிக்கொண்டே இருந்தது. ஞாபகங்கள் சிதறிய நிலையில் உள்ளுணர்வை அப்படியே பின்பற்ற வேண்டுமென்று யாரோ சொன்ன ஞாபகம். அதைத்தான் இப்பொழுது நான் செய்து கொண்டிருக்கிறேன்.

சிறிது தூரம் காட்டிற்குள் சென்றபின் ஒளிந்துகொள்ள மறைவான இடம் தேட முடிவு செய்தேன். அப்பொழுது யாரோ எனக்கு அருகாமையில் இருப்பது போல ஒரு உணர்வு தோன்றியது. எனக்கு பின்னாலிருந்து ஏதோ சத்தம் வருகிறது. பதறிப்போய் திரும்பிப் பார்க்கிறேன். நான் முதலில் மயங்கிக் கிடந்த மரத்தை விட தடிமனான வளர்ந்த மரம். ஆம்... சத்தம் மரத்துக்குப் பின்னாலிருந்து தான் வருகிறது. மெதுவாக திரும்பி சென்று மரத்தின் மறைவில் நின்று கொண்டு மறுபுறம் பார்த்தேன். இரத்தம் உறைந்தது போல உணர்ந்தேன். திசை தெரியாமல் காட்டிற்குள் அலைந்ததில் காவல் படையை நோக்கியே வந்து விட்டேன் போலும். அங்கே ஒரு காவலர் துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு தனது ஷூ லேசை கட்டிக் கொண்டு நிற்கிறார். அந்த நொடியில் ஒரு விபரீத எண்ணம் எனக்கு தோன்றியது.

நான் யாரென்று தெரிந்த ஒருவன் கண்முன்னே நிற்கிறான். என்னை பிடிக்க வந்த போலீஸ் என்றாலும் தற்போது கையில் ஆயுதம் இன்றி நிற்கிறான். கூட வந்த காவல் படையில் யாரையும் காணவில்லை. எப்படியாவது இவனை பின்னால் சென்று பிடித்து அவனது துப்பாக்கியை வைத்தே மிரட்டி விவரத்தை சேகரித்து விட்டால் என்ன? நினைத்ததும் வியர்க்க தொடங்கியது. உடலில் லேசான நடுக்கம் தெரிந்தது. ஆனால் இப்பொழுது இவனையும் விட்டு விட்டால் நான் யாரென்று தெரியாமலேயே துப்பாக்கி குண்டுக்கு இரையாகிப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எதிரில் இருக்கும் காவலனை தாக்குவதற்கு முடிவு செய்தேன்.

எப்படி தாக்குவது என்று மனதிற்குள் ஒரு திட்டம் போட்டுக் கொண்டேன். மெதுவாக பின்னால் சென்று என் சட்டையால் முதலில் அவன் முகத்தை மூடி கீழே தள்ளிவிட்டு அவன் சுதாரித்து கத்துவதற்குள் துப்பாக்கியை அவன் நெஞ்சில் குறி வைத்து விடவேண்டும். பின்னர் அவனை சிறிது தொலைவில் உள்ள புதருக்கு இழுத்து சென்று உண்மையை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அவனது போலீஸ் உடையை எடுத்து அணிந்து கொண்டு எப்படியாவது காட்டின் மறுமுனைக்கு சென்று தப்பி விடவேண்டும். திட்டம் சரியாக இருக்கும் என எனக்கு முழுதாக நம்பிக்கை பிறந்ததும் மெதுவாக சட்டையை கழட்டினேன். நாலாபுறமும் ஒரு முறை நன்றாக பார்த்துவிட்டு முதல் அடியை எடுத்து வைத்தேன். அருகே மற்றொரு காலடி சத்தம் கேட்க சட்டென்று திரும்பி வந்து மரத்தின் பின் நின்று கொண்டேன்.

யாரங்கே வருவது? நல்ல வேளை... நான் ரொம்ப தூரம் செல்லவில்லை. அங்கே கையில் தயார் நிலையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு மற்றொரு காவலர் வந்து சேர்ந்தார். இருவரும் பரஸ்பரம் புன்னகையை பரிமாறிக் கொண்டனர். புதிதாக வந்த போலீஸ்காரர் இங்கே இருந்த காவலரிடம்,
"தம்பீ... என்ன இப்படி விளையாட்டு பிள்ளையா இருக்க?"
"இல்ல ஸார்... ஷூ லேஸ் கழண்டுருச்சு... அதான்..."
"சீக்கிரம் பா! ரொம்ப மோசமான ஆள துரத்திட்டு இருக்கோம். எவ்ளோ பெரிய தீவிரவாதின்னு தெரியும்ல"
"தெரியும் ஸார்... இதோ ரெடி ஆயிட்டேன்"
"ஸ்டேஷன்ல இருந்து வேற வெப்பன்ஸ் தூக்கிட்டு ஓடி இருக்கான். எங்க இருந்து எப்படி வந்து அட்டாக் பண்ணுவான்னு தெரியாது"
"எஸ் ஸார்... ஐ ஆம் டன்"
"சரி... நீ அந்த பக்கமா போய் தேடு"
"ஓகே ஸார்"
பேசி முடித்துவிட்டு அவர்கள் ஆளுக்கொரு புறம் செல்ல திகைப்பின் உச்சத்தில் சப்த நாடியும் ஒடுங்கிப் போய் நான் நின்று கொண்டிருக்கிறேன்.


அடுத்த பாகம்

No comments: