Wednesday, March 12, 2014

ஞாபகம் - பாகம் I

அடர்ந்த காடு... சுற்றிலும் ஓங்கி உயர்ந்த மரங்கள்... மாலைக் கதிரவனின் கிரணங்கள் மரங்களை கிழித்துக்கொண்டு வந்து சற்றே வெளிச்சத்தை தெளித்துக் கொண்டிருக்கின்றன. ஆள் அரவமற்ற காட்டிற்குள் பறவைகளின் கூச்சல்கள் மட்டுமே குடி கொண்டிருக்கிறது. அங்கே உயர்ந்ததோர் ஆலமரத்தின் தடித்த வேர்களின் நடுவே ஒரு உருவம் முகமும் வயிறும் நிலத்தை உரச சுயநினைவின்றி படுத்திருக்கிறது. சம்பவமோ அசம்பாவிதமோ நடப்பதற்கான அத்தனை அறிகுறிகளும் தெளிவாக தெரிகிறது!

தூக்கத்திலிருந்து விழிக்கிறேன்... இல்லை இல்லை... மயக்கத்திலிருந்து தெளிகிறேன். என் தலைக்குள் யாரோ சுத்தியலால் அடித்துக்கொண்டே இருப்பது போல் அப்படியொரு வலி. கண்களைத் திறக்க முயற்சிக்கிறேன்... முடியவில்லை. மெதுவாக... மிக மெதுவாக கை கால்களை அசைக்கிறேன். யாரோ தாள்களை கசக்குவது போல் என்ன சத்தம் அது? நீண்ட சயனத்திற்கு பிறகு உடல் உறுப்புகள் வேலை செய்ய தொடங்குவது போல் ஒரு உணர்வு. திடீரென்று ஆக்ஸிஜன் வரத்து குறைய வாய் வழியே மூச்சிழுக்கிறேன். மணல் வாய் வழியே சென்று தொண்டைக்குள் அடைத்துக்கொள்ள பதறிப்போய் முழிக்கிறேன். எழுந்திருக்க முயற்சிக்கிறேன்... மீண்டும் அதே சத்தம். சருகுகள் சலசலக்கும் சத்தம். தாள்களும் இல்லை... தாள்களைக் கசக்க ஆட்களும் இல்லை. யாருமற்ற வனாந்தரத்தில் தன்னந்தனியே மயங்கிக் கிடந்திருக்கிறேன்.

இருப்பது எந்த இடமென்று தெரியவில்லை. எப்படி இங்கு வந்தேனென்று தெரியவில்லை. எதனால் மயங்கிக் கிடந்தேனென்று தெரியவில்லை. தலையில் இடிகள் இறங்குவது போன்ற வலிக்கு காரணம் தெரியவில்லை. இன்னும் சற்று சிந்தித்து பார்க்கையில் தான் உணர்கிறேன்... எனக்கு நான் யாரென்றே தெரியவில்லை! மயக்கத்திலிருந்து எழுந்தபோதுதான் புதிதாய் பிறந்ததைப் போன்று வேறெந்த ஞாபகமும் நினைவில் இல்லை. இனம் புரியாத ஒரு பயம் உடல் முழுவதும் பரவத் தொடங்கியது. இருக்கும் இடம், வலிக்கும் வலி என அனைத்தும் மறந்து "நான் யார்?" என்ற ஒரு கேள்வி மட்டுமே மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது.

எவ்வளவு நேரம் சிந்தித்தும் ஒரு பயனும் இல்லை. என் பெயர் கூட நினைவுக்கு வரவில்லை. சிந்தித்து சிந்தித்து சோர்ந்ததுதான் மிச்சம். பயத்திலும் சோர்விலும் நா வறண்டது. சுற்றும் முற்றும் பார்க்கிறேன். முதலில் தண்ணீர் தேடி குடித்துவிட்டு செய்ய வேண்டியதை யோசிக்கலாம் என முடிவு செய்தேன். திக்கு திசை தெரியாமல் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினேன். எவ்வளவு நேரம் நடந்திருப்பேன் என்று தெரியவில்லை. காலெல்லாம் வலி எடுக்கிறதே தவிர செல்வதற்கு வழி ஒன்றும் புலப்படவில்லை. ஒரே இடத்தை சுற்றி சுற்றி வருவது போல் தோன்றியது. ஏதோ ரிசர்வ்ட் ஃபாரெஸ்ட் உள்ளே வந்து மாட்டிக்கொண்டது போல் இருக்கிறது.

மீண்டும் நடக்கத் தொடங்கினேன். மேலும் ஒரு அரை மணி நேர நடைக்கு பிறகு ஒரு ஒளி தெரிந்தது. சற்று தூரத்தில் காடு முடிந்து வெட்டவெளி தொடங்குகிறது. நடையின் வேகத்தைக் கூட்டி வெட்டவெளியை அடைந்தேன். நல்ல வேளை... பயந்தது போல ரிசர்வ்ட் ஃபாரெஸ்டோ அமேசான் ஃபாரெஸ்டோ இல்லை. ஏதோ ஊரோரத்தில் உள்ள காடுதான். அதோ சற்று தொலைவில் ஒரு தென்னந்தோப்பு தெரிகிறது. ஆள் நடமாட்டமும் தெரிகிறது. போய் முதலில் தண்ணீர் கேட்டு குடிக்கலாம் என யோசிக்கையில் தான் அடுத்த பயம் வந்து என்னை தொற்றியது.

நான் யார்? இந்த காட்டிற்குள் நான் அடிபட்டு கிடந்த காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் யார் கண்ணிலும் படுவது ஆபத்தாகுமா? இந்த எண்ணம் மனதில் வந்ததும் எனக்குள் ஒரு தயக்கம் பிறந்தது. முதன்முதலாக என்னைப் பற்றி எனக்குள் ஒரு சந்தேகம் பிறந்தது. உண்மையில் நான் நல்லவன் தானா? இல்லை ஏதேனும் பிரச்னை செய்து யாராலும் விரட்டப்பட்டு காட்டிற்குள் ஓடி ஒளிந்து அடிபட்டு கிடந்தேனா? இந்த எண்ணம் என்னை மேலும் கிலி அடையச் செய்தது. செய்வதறியாது திகைத்துப் போய் ஒரு மரத்தின் மேலே சாய்ந்து நின்று வெறித்துக் கொண்டிருக்கும் போது தான் அதை கவனித்தேன். நான் நினைத்ததை விட பெரிய பிரச்னைகள் என்னை சூழ்ந்திருப்பதை உணர்ந்தேன். அனிச்சையாய் என் கால்கள் மீண்டும் காட்டிற்குள் செல்லத் தொடங்கின.


அடுத்த பாகம்

No comments: