Saturday, July 10, 2010

கனவினில் ஒரு காதல்

திக்கெட்டும் நீலக்கடல்...
நடுவினில் சிறுதீவு...
சலனமில்லா சமுத்திரக்கரையில்...
மணற்பஞ்சனையில்...
உன்மடித்தலையனையில்...
ஒரு சுகமான மாலைப் பொழுது!

ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறோம்...
ஒலியற்ற மொழியாம் உணர்வுகளின் பரிமாற்றங்கள்!
ஆயிரமாயிரம் எண்ணக்குவியல்கள்!
நெடுநேரம் சென்றிருக்க வேண்டும்...
அமைதியின் அழகு சற்றே சலித்திட
குயிலுன்னை பாடக்கேட்டேன்...
உன்
இதழ்கள் சொட்டும் தேன்துளிகளை
இதமாய் என் செவி சுவைக்க
ஆட்கொண்டது ஓர் ஆனந்தசயனம்!

விழித்திருக்கையில் விழிகளில்
நிறைந்திருந்த நீ
நித்திரை கண்டதும்
நினைவினில் நிறைகிறாய்...
எங்கு செல்கிறோம் நாம்?
தோளோடு தோள் சாய்ந்து...
விரலோடு விரல் பிணைந்து...
இதழோடு இதழ் இணைந்து...
மண்ணுலகம் தாண்டி...
விண்ணுலகும் தாண்டி...
தூரமாய்... வெகு தூரமாய்...
ஐயகோ! யார் நம்மை அழைப்பது?
நீதான் எனை அழைத்திருக்கிறாய்!
“உன்னுயிர் நானிங்கு இருக்கையில்
உன் கற்பனை பயணம் யாரோடு?”
செல்லச் சிணுங்கலில்
செம்மீனாய் ஜொலிக்கிறாய்...

காலதேவனுக்கு ஏனிந்த அவசரம்?
யாரைப் பற்றியும் கவலையில்லை...
எதைப் பற்றியும் சிந்தனையில்லை...
ஓடிக்கொண்டே இருக்கிறான்...
அவன் ஓடுவதோ டல்லாமல்
நம்மையும் சேர்த்து விரட்டுகிறான்!
அதோ...
மாலைக் கதிரவன்
தொடுவானம் நெருங்கிவிட்டான்!

பேசத் தொடங்கவேயில்லை...
பொழுது மட்டும் சாய்ந்துவிட்டது!
நம் சந்திப்பில் இதுவே வாடிக்கையாகிவிட்டது!
விழிகள் நான்கும்
ஏதேதோ பேசிக்கொள்ள...
கற்பனைக் குதிரை
கட்டறுந்து தறிகெட்டோட...
இதழ்களுக்கு மட்டும்
வார்த்தைகளின் தேடலில்
தினம்தினம் தோல்விகள்!

நேரம் சென்றுவிட்டது...
விடைபெற்றுச் செல்ல எத்தனிக்கிறாய்...
மனம் வர மறுக்கிறதே!?
“பேசுவதற்குத்தான் மறந்துபோனோம்...
ஒரு முத்தமாவது கொடுத்துவிட்டுப் போ!
உன் முத்தத்தின் ஈரத்தில்...
அந்த சத்தத்தின் இனிமையில்...
இன்றிரவுத் தனிமையை
கனவோடு கழித்துக்கொள்கிறேன்!”.
என்
கனிவான வேண்டுதலுக்கு
வெட்கத்தை விடையாக்கி
விலகிச் செல்கிறாய்...
உன் கரம் பற்றி இழுத்து
என் விழிகள் கெஞ்ச...
நீ நாணத்தால் கொஞ்சி
இதழ்கள் கேட்ட முத்திரையை
விரல்களில் பதித்துவிட்டு ஓடுகிறாய்!

உன் இதழ்பதிந்த
என் விரல்கள்
காற்றினில் மிதக்க...
விலகியோடும் உன்னை
வெறித்துப் பார்க்கிறேன்!
கரையினில் ஓடிய
உன் பாதங்கள்
கடல்நீரைத் தொட்டதும்...
அழகழகாய் அலைகள் வந்து
உன்
மலர்ப் பாதங்களில்
மணல் துடைத்து
மகிழ்ச்சியோடு வரவேற்கின்றன!
கடலன்னை உன்னை
வாஞ்சையோடு தாங்கிக்கொள்ள...
கொஞ்சிக்கொஞ்சி நடக்கும் உந்தன்
பிஞ்சுப் பாதங்களுக்கு பாரமின்றி
அலைகளெல்லாம் அமைதி காக்க...
நீ செல்வதைக் காணுமென்
விழிகளில் மட்டும் ஏக்கத்தின் தாக்கம்!

உன்னை வரவேற்க
தொடுவானத்தின் வாசலில்
காத்திருக்கிறான் கதிரவன்!
நீ
அவனுள் சென்று மறைய
அவன்
கடலுள் சென்று மறைகிறான்!
“மீண்டும் உனைக் காண்பது எப்போது?”
என்னுள் எழுந்த கேள்விக்கு பதிலாய்
என்னிதயத்தில் ஒலித்தது உன் குரல்...
“அடுத்த நாள் கனவில்!”.